ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை! "நக்கீரன் வார ஏட்டில் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை!

"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை! "நக்கீரன் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை!
"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை!"என்ற தலைப்பில், 2019 மே 8 - 10 நாளிட்டு வெளிவந்துள்ள “நக்கீரன்” வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக்கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் முழு வடிவம் :

மத்திய அரசுத் துறைகளுக்கான தமிழக காலிப் பணியிடங்களில், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தப் பணியிடங்களில் வெளிமாநிலத்தவர்களே அதிகமாக பணியமர்த்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தொடர்பான செய்திகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பின.

இந்நிலையில், திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே பணிமனையில் பழகுநர்களுக்கான காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்ட 300 பணியாளர்கள் அனைவருமே வடமாநிலத்தவர்கள் என்ற செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்தப் பணி நியமனத்தைத் திரும்பப் பெற்று அதில் தமிழக இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். 18 பொதுத்துறைகளில் 90 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி பொன்மலை ரயில்வே வளாகத்தின் முன்பு மே 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களோடு பல்வேறு கட்சி இயக்கங்களைச் சேர்ந்த மெதாழிலாளர்கள். பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்.

“தமிழக வேலை தமிழருக்கே” என்ற முழக்கத்துடன் அனைவரும் பொன்மலை பணிமனை வளாகத்தை நோக்கி பேரணியாக நடக்க முயன்றனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறித்து நிறுத்த, அனைவரும் கொளுத்தும் வெயிலில் தரையில் படுத்துக் கொண்டனர். உடனடியாக 500 பேரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.

திருச்சியில்தான் போராட்டம் என்றாலும், போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பலரும் அதை சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கவனத்தை ஈர்த்தனர். 

#தமிழகவேலைதமிழருக்கே, #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இதை மராட்டியர்கள், “மராட்டியர்களின் வேலை மராட்டியர்களுக்கே” என தாங்களும் ட்ரெண்டாக்கி தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

திருச்சியில் நடைபெற்ற போராட்டம் இந்திய அளவில் பேசுபொருளாயிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனிடம் பேசியபோது, “தென்னக இரயில்வேயில் வேலைபழகுநர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருச்சி பொன்மலையில் 1765 பேரிடம் நேர்கானல் நடத்தியிருக்கிறார்கள். அதில் நியமிக்கப்பட்ட 325 பேரில் 300 பேர் வடமாநிலத்தவர்கள், 25 பேர் மலையாளிகள். அங்கு நிரந்தரப் பணியில் இருக்கும் 3 ஆயிரம் பேரில் 1500 பேர் வேற்று மாநிலத்தவர்கள்.

அதேபோல், தமிழ்நாட்டில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட்மாஸ்டர், போஸ்ட்மேன் என அஞ்சலகங்களில் 4452 காலிப்பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 15 தான் கடைசித்தேதி வடமாநிலங்களில் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 5 தேதிதான் அறிவிப்பு வெளியாகிறது. தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்கச் சென்றால் “கணினி சர்வர் வேலை செய்யவில்லை” என்கிறார்கள். இனி அத்தனை பணியிடங்களிலும் வடவர்களையே நியமிக்கப் போகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல்துறை பணிகளுக்கு தேர்வு நடந்தது. அதில் 25 மதிப்பெண்ணுக்கு தமிழ்மொழி பாடத்தில் கேள்விகள் இருந்தன. தமிழ்மொழியில் படித்த நம் இளைஞர்கள் 15, 20 மதிப்பெண் எடுக்க, ஹரியானாக்காரன் 23 மதிப்பெண் எடுத்திருந்தான். இந்தப் பிரச்சனையால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல், அஞ்சல்துறை வேலை வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாத “அட்டஸ்ட்” காரணத்தைக் கூறி தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை நிராக்கரித்தார்கள்.

இத்தனை கொடுமைக்கு மத்தியில், தமிழக இளைஞர்களின் வேலைகளைப் பறிக்க ஓ.பி.எஸ். என்ற நல்ல மனிதர் 2016 இல் தனி சட்டத்திருத்தமே கொண்டுவந்தார். அதன்மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் வேலைகளுக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனும் விண்ணப்பிக்கலாம்.

அதாவது, கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மாற்றி, “வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக்கொண்டால் போதும்” என ஓ.பி.எஸ். முன்மொழிந்த இந்த சட்டத்திருத்தத்தால், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் பதவிகளுக்குக்கூட இந்திக்காரன் வரக்கூடிய வாய்ப்புள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்யக்கோரி பலமுறை மனுக்கொடுத்தும் பயனில்லை.

மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில வேலைகளில் நூறு சதவீதமும், மத்திய அரசு வேலைகளில் 90 சதவீதமும் மண்ணின் மைந்தர்களுக்கே கிடைக்க சட்டம் இருக்கிறது. ஆனால், இங்குதான் 99 சதவீதம் வேலைகளை வடநாட்டவருக்கு தாரைவார்க்கிறோம். 

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களைச் செய்ததுபோல, தமிழர்களை சொந்த மண்ணிலேயே இன ஒதுக்கல் செய்கிறார்கள். இளைஞர்கள் களத்திற்கு வந்து போராடினால்தான் விடிவு பிறக்கும்” என்றார் ஆத்திரத்துடன்.

மாநிலத்தின் உரிமைகள், அந்தந்த மொழிபேசும் மக்களக்கு அவர்கள் மாநிலத்திலேயே வாழ்வாதாரம், வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலைவாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் சூழல் எழுந்துள்ளது என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் இதுகுறித்துப் பேச ஆரம்பித்திருப்பதால், மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறார்கள் இளைஞர்கள்”.

இவ்வாறு “நக்கீரன்” செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிக்க : https://www.nakkheeran.in/…/tamilana-there-no-job-tamil-nadu 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.