ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இளம்பெண் சுபஸ்ரீ பதாகை மரணம்:தி.மு.க–அ.தி.மு.க. தலைமைகள் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


இளம்பெண் சுபஸ்ரீ பதாகை மரணம்:தி.மு.க–அ.தி.மு.க. தலைமைகள் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!


இளம் பெண் சுபஸ்ரீ, நேற்று (12.09.2019) பள்ளிக்கரணையில் தனியார் வைத்திருந்த பதாகை விழுந்து, அதனால் ஏற்பட்ட சரக்குந்து விபத்தில் அந்த இடத்திலேயே இறந்துபோன கொடும் செய்தி மனிதநேயமுள்ள அனைத்து நெஞ்சங்களையும் வாட்டி வதைக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் சுபஸ்ரீ இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய பெற்றோருக்கு ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் என்பவர், தன் இல்லத் திருமணத்திற்கு வரும் கட்சித் தலைவர்களை வரவேற்க அந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஐயா டிராபிக் இராமசாமி அவர்களின் கடும் முயற்சியில் பல தடவை சென்னை உயர் நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளையும் சாலையோரங்களில் பதாகைகள் வைப்பதைத் தடை செய்து ஆணைகள் பிறப்பித்துள்ளன. ஆனால், அந்த ஆணைகளை முதலில் மீறுகின்ற கட்சியாக ஆளுங்கட்சி இருக்கும். அதையடுத்து, எல்லா கட்சிகளும் மீறும்!

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு திரைப்படக் கவர்ச்சியை அரசியலில் புகுத்தி கற்பனை உலகத்தில் மக்களை முதன் முதலாக மயக்கிய கட்சி தி.மு.க. அதன்பிறகு, அதிலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. செய்த கவர்ச்சி வேலைகளைப் பலமடங்கு பெருக்கிச் செய்தது. கட்சித் தலைவர்களை பண்டைக்காலப் பேரரசர்களோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் முடிசூட்டியும், தெய்வங்களோடு ஒப்பிட்டும் புகழ்கின்ற சீரழிவுப் பண்பாடு தமிழ்நாட்டைப் போல் இந்தியாவில் வேறெங்கும் கிடையாது!

தலைவர்களுடைய பெயரைச் சொல்லிப் பேசுவதே அவர்களை இழிவுபடுத்துவது என்ற நிலைக்கு தமிழ்நாட்டில் சனநாயக எதேச்சாதிகாரம் வளர்க்கப்பட்டுள்ளது. அந்தத் தலைவர்களுக்குக் கீழ் உள்ள பிரமுகர்கள் அந்தந்த வட்டார அரசியல் “ஜமீன்தார்களாக” வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கவர்ச்சி வேலைகள் காலப்போக்கில், எல்லாக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டது; எல்லாத் தரப்புத் தனி மனிதர்களையும் தொற்றிக் கொண்டது. தலைவர்களுக்குத் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்காக அடுத்த நிலையில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்யும் பதாகை விளம்பரங்கள், வரவேற்பு வளைவுகள் பெருகின. தனி மனிதர்கள் தங்களுடைய செல்வாக்கையும் பணத் திமிரையும் காட்டுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பொது இடங்களில் பதாகைகள் – வளைவுகள் – சர விளக்குகள் போடுவது பெருகின.

இன்று (13.09.2019) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசசாயி ஆகியோர் இச்சிக்கல் குறித்து கடுமையாக ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து திறந்த நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் வரவேற்புப் பதாகைகள் வைக்கக் கூடாதென்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். சில மாதங்கள் போனால் பழைய காட்சிகள் மீளும்!

இவ்வளவு கண்டனங்கள் வந்த பிறகும்கூட, பதாகை வைத்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் இன்று மாலை 4 மணி வரை கைது செய்யப்படவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்தப் பதாகையை அச்சிட்ட அச்சகத்தை மூடி முத்திரை (சீல்) வைத்துள்ளார்கள்.

இந்தக் கொடுமைகள் தொடராமல் தடுப்பதற்கு முதல் தேவை தமிழ்நாட்டு மக்களிடம் மனமாற்றம்! அரசியல் தலைவர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் சர்க்கஸ் வேலைகளைக் கண்டு, அருவருக்கும் மனநிலை தமிழர்களிடம் உருவானால்தான் கட்சிகள் திருந்தும். அடுத்து, தி.மு.க. – அ.தி.மு.க. தலைமைகள் தங்களுடைய மலிவான கவர்ச்சி அரசியலுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, போலிப் புனைவுகள் மீது நாட்டம் செலுத்துவதைக் கைவிட வேண்டும். மிகைப் போலிப் புனைவு அரசியலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதற்காக தி.மு.க.வும், அதைப் பரப்பியதற்காக அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.