ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி! பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

தி.மு.க.வின் “முரசொலி” நாளேட்டில் “கீழடி அகழாய்வு: அறிக்கைகள் வெளியிடப்படுமா? ஆய்வு தொடருமா?” என்று நேற்று (10.10.2019) ஆசிரியவுரை வந்துள்ளது. அதில் இறுதிப்பகுதியின் இரண்டு மூன்று பத்திகளை மட்டும் தவிர்த்திருந்தால், தமிழர்கள் அனைவருக்குமான சிறந்த ஆசிரிய உரையாக அமைந்திருக்கும்.

முரசொலி ஆசிரியவுரையின் சாரம்

கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதால் இனப்பாகுபாட்டு அணுகுமுறையுடன் இந்திய அரசு அதைத் தொடராமல் ஏற்கெனவே மூடிவிட்டது. கீழடி ஆய்வில் உண்மையான ஆர்வத்துடன் பணியாற்றிய இந்திய அரசின் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணனை அசாமுக்கு இடமாற்றம் செய்து விட்டது.

சிந்து சமவெளிப் பானைக் கீறல்களும் கீழடிப் பானைக் கீறல்களும் (எழுத்துகள்) ஒன்றாக இருக்கின்றன.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வந்த ஐந்தாம் கட்ட கீழடி ஆய்வும் 7.10.2019 அன்றுடன் நிறுத்தப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்திய அரசின் தலையீடுதான் இதற்குக் காரணம் என்பதையும் “முரசொலி” கூறுகிறது. அத்துடன் நில்லாமல் இந்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் செய்திகளையும் பட்டியல் இட்டுள்ளது.

1. நூறாண்டு போராடி தமிழுக்கு செம்மொழி – நிலையைப் பெற்றோம். ஆனால், அந்த செம்மொழி நிறுவனம் நிர்வாகக் கோளாறால் சிதறுண்டு கிடக்கிறது.

2. இந்தித் திணிப்பை எதிர்த்து 82 ஆண்டுகளாக இன்னும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

3. தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரி வருகிறோம். நடுவண் அரசு அதை ஏற்கவில்லை.

4. தமிழ்நாட்டிற்குரிய நிதியைப் பெறுவதற்கு புதுதில்லியிடம் தொடர்ந்து பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறோம்.

5. நமது ஆற்றுநீர் உரிமைகளை இந்திய அரசு நிலைநாட்டித் தரவில்லை.

இப்படி இன்னும் பெரிய பட்டியல் எழுதலாம்.

இப்பொழுது கீழடி ஆய்வையும் தடுத்து நிறுத்தியுள்ளது இந்திய அரசு. தமிழர்களின் தொன்மை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்கிறது.

தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இச்செயல்பாடுகள் பற்றி “முரசொலி” மேலே பட்டியலிட்டுள்ள அனைத்தும் உண்மைதான்! ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடத்திய காலங்கள் “பொற்காலங்கள்” என்று தி.மு.க. தலைமையும், முரசொலியும் வர்ணித்து வந்த புகழ்ச்சிகள்தாம் பொய்யானவை!

காவிரி உரிமை மீட்பில் வெற்றி பெற்று விட்டதாகத் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் நடத்திய வெற்றி விழாக்கள்தாம் போலியானவை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலங்கள்தாம் “முரசொலி”யின் இந்த ஆசிரியவுரை!

கூட்டணிக் கும்மாளம்

தமிழ்நாட்டின் உரிமைகளை இந்திய ஆட்சியாளர்கள் பறித்த வந்தக் காலங்களில் காங்கிரசு ஆட்சியுடன் அல்லது பா.ச.க. ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கும்மாளம் போட்ட கழகம் தி.மு.க.! இப்போதும், காங்கிரசுடன் கூட்டணி!

அ.இ.அ.தி.மு.க.வும் காங்கிரசு, பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்த - சேரும் கட்சிதான்!

எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இராகுல்காந்திதான் தலைமை அமைச்சர் என்று இந்தியாவிலேயே முதல் முதலில் அறிவித்தது நான் தான்” என்று பெருமை பேசிக் கொள்கிறார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். “முரசொலி” பட்டியலிடும் உரிமைப் பறிப்புகளை காங்கிரசு ஆட்சி செய்யவில்லையா?

என்ன நெருக்கடி?

ஏதோ ஒரு நெருக்கடியில் இந்த உண்மைகளைக் கூறிவிட்டது “முரசொலி”! அது என்ன நெருக்கடி? “முரசொலி”யே கூறுகிறது :

“கீழடி அகழாய்வின் அறிக்கையே இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் இது தமிழர் நாகரிகமா – திராவிட நாகரிகமா என்று ஒருவர் வினா எழுப்புகிறார். தமிழர் நாகரிகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்.

இன்னொருவர் கால்டுவெல்லைச் சாடுகிறார்; குழப்பம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவர். கீழடி எழுத்துகளைத் தமிழ் பிராமி, தமிழி என்றெல்லாம் சொல்லக்கூடாது; மூலத்தமிழ் (Proto Tamil) என்றுதான் கூற வேண்டும் என்கிறார்.

வேறொருவர் பாரதப் பண்பாடு என்கிறார். தமிழராகப் பிறந்தது நாம் சிரித்துக் கொண்டே அழுவதற்குத்தானா?”

முரசொலி ஆசிரிய உரையின் முடிவில் உள்ள மேற்கண்ட “நெருக்கடி” – தமிழரா – திராவிடரா என்பதில் அடங்கி இருக்கிறது.

கீழடி சென்று பார்வையிட்டுவிட்டு அறிக்கை கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “அதனை (கீழடியை) திராவிடப் பண்பாடு என அறிஞர்கள் குறிப்பிடுவதைக் கேட்கும்போது செவிகளில் இன்பத்தேன் பாய்கிறது” என்று கூறியிருந்தார்.

அ.இ.அ.தி.மு.க. அமைச்சர் பாண்டியராசன் கீழடி – பாரதப் பண்பாடு என்று கூறியிருந்தார்.

இவ்விரு கூற்றையும் மறுத்து நான் சமூக வலைத்தளங்களில் “கீழடி நாகரிகத்தை ஆரியமும் திராவிடமும் திருட அனுமதிக்காதீர்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தேன். இணையத் தொலைக்காட்சி “ழகரம்”, “தமிழன்” தொலைக்காட்சி ஆகியவற்றில் செவ்வியும் கொடுத்தேன்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - 2019 அக்டோபர் இதழில், “கீழடி நாகரிகம் திராவிட நாகரிகமா?” என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதியிருந்தேன்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கீழடி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று தி.மு.க. தலைவர் கூறுவதைச் சாடி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார். கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றார்.

“முரசொலி” ஆசிரியவுரையின் முடிவில் “ஒருவர்” என்பதில் சீமானையும், “இன்னொருவர்” என்பதில் என்னையும் சுட்டித்தான் சாடி உள்ளார்கள்.

எனக்கு “முரசொலி” கொடுத்துள்ள பட்டம் “குழப்பவாதி”! அகழாய்வில் கிடைக்கும் தொன்மையான தமிழ் எழுத்துகளை அசோகரின் கல்வெட்டு எழுத்தாகச் சொல்லப்படும் “பிராமி” என்ற பெயரின் வால் போல் “தமிழ் பிராமி” என்று சொல்லாதீர்கள்; அல்லது அதே பாணியில் “தமிழி” என்று ‘இ’கரம் போட்டு சொல்லாதீர்கள்; தமிழ் எழுத்து என்றே சொல்லுங்கள்; அல்லது மூலத்தமிழ் (Proto Tamil) என்று சொல்லுங்கள் என்று எனது நேர்காணல் மற்றும் தமிழர் கண்ணோட்டம் இதழில் கூறியிருந்தேன். அவற்றில், இராபர்ட் கால்டுவெல் “திராவிடக்” கயிறு திரித்துக் கதையளந்ததையும் சாடி இருந்தேன்.

“திராவிடம்” என்ற பெயரில் ஒரு மொழியோ, ஓர் இனமோ, ஒரு நாடோ வரலாற்றில் இருந்ததில்லை; இருக்கிறது என்றால் சான்றுகளுடன் பேசுங்கள் அல்லது எழுதுங்கள்; உங்களை எதிர்கொள்கிறேன் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். எந்தத் திராவிடவாதியும் இந்த அறைகூவலை இதுவரை ஏற்கவில்லை!

மாறாக, திராவிடர்தான் தமிழர்; தமிழர்தான் திராவிடர் என்று சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள். நான் குழப்பவாதி அல்லன்; திராவிடக் குழப்பத்தைத் தீர்ப்பவன்!

தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறிப்பதற்கு உருவான சொல்தான் “திராவிடர்”! குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் நிலம் ஆகியவற்றில் குடியேறிய ஆரிய பிராமணர்களைக் குறிக்க பஞ்ச திராவிடர் என்ற சொல்லை சமற்கிருத நூல்களும், பிராமணர்களும் பயன்படுத்தியுள்ளதையும் கூறி வருகிறேன்.

ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கீழடி போன்ற அகழாய்வு கிடைத்தால் அதை அவர்கள் திராவிடர் நாகரிகம் என்று சொல்வார்களா? மாட்டார்கள்! தெலுங்கர் நாகரிகம், கன்னடர் நாகரிகம் என்றுதான் சொல்லுவார்கள். தமிழ் இனத்தில் பிறந்துவிட்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழர் இனத்திற்கு ஏன் இரண்டகம் செய்கிறீர்கள் என்பதுதான் எனது வினா! இனிமேலாவது, தமிழினத் துரோகத்தைக் கைவிடுங்கள்!

கீழடியைத் தமிழர் நாகரிகம் என்றே நீங்களும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையாகப் பேசுங்கள்!

இந்திய அரசு என்பது சாரத்தில் ஆரிய அரசுதான்! ஆரியத்தின் இரட்டைப் பிள்ளைகள்தாம் காங்கிரசும், பா.ச.க.வும்! பாண்டியராசன் போன்றவர்கள் பாரதமாதாவின் நிரந்தரப் பாதந்தாங்கிகள்!

தமிழ்த்தேசியம் – எந்த மாற்று இனத்தாரையும் சிறுபான்மை மொழி பேசுவோரையும் எதிரியாகக் கருதவில்லை. நாம் எல்லோரும் சேர்ந்த வடிவம்தான் தமிழ்நாடு! அதேவேளை, தமிழ் இன அடையாளத்தை மறைக்க அல்லது மறுக்க, தமிழ் இனத்தை – தமிழ் மொழியை ஆதிக்கம் செய்ய எந்த இனம் வந்தாலும் எந்த மொழி வந்தாலும், எந்தப் பெயர் வந்தாலும், யார் வந்தாலும் எதிர்ப்போம்; முறியடிப்போம்! அந்த வகையில்தான் ஆரியத்தையும் அது பெற்றெடுத்த திராவிடத்தையும் எதிர்க்கிறோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.