ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மதுக்கடை மூடலும், மாற்று வருமானமும் - பாவலர் முழுநிலவன்




மதுக்கடை மூடலும், மாற்று வருமானமும்
பாவலர் முழுநிலவன்
பொதுச்செயலாளர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

முருகன் பெட்டிக்கடையில் எனக்கு முன் நின்ற முதியவர் கடைக்காரரிடம் செய்யது பீடி ஒரு கட்டு வாங்கிக் கொண்டே சொல்கிறார். “ஒரு கட்டு முப்பத்தி ஆறு ரூவா ஏறிட்டாஇதுவும் பெட்டிக்கடையில கிடைக்காம இருந்திருந்தா இதையும் விட்டுத் தொலைச்சிருப்பேன்.. வேலைக்கு போன காலத்திலிருந்தே குடிக்கிறேன்.. பொன்டாட்டி புள்ளைங்க கிட்ட பல தடவ சத்தியம் பண்ணியிருக்கேன், குடிக்கிறத விட்டற்றேன்னு ஒரு தடவ கூட சொன்னபடி நடந்ததில்லை..!”.

“கொரோனாவுக்காக டாஸ்மாக்கை மூடுனானுங்க.. ந்தா விட்டாச்சி.. நாலு நாளு ஏக்கமாத்தான் இருந்துச்சி.. எங்கயும் கிடைக்காது, எவனுக்கும் கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் மனசு ஏத்துகிட்டு.. ஒரு நாளைக்கு 200 ரூவா மிச்சம்.. குடும்பத்துலயும் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சிஎன்றார்.

கொரோனாவின் ஊரடங்கு காலம் என்பது குடிகாரர்களிடமும், குடிநோயாளிகளிடமும் ஓரளவுக்கு மனதை தயார்படுத்திவிட்டது. எவன் பொன்டாட்டி தாலி அறுத்தா என்ன? அரசாங்கத்துக்கு வருமானம் வந்தா போதும்னு அரசுதான் இனி மாற வேண்டும்!

ஊழலாலும், தேவையற்ற இலவசங்களாலும் நொடித்த அரசின் வருமானத்தை ஈடுகட்ட டாஸ்மாக்கை விட்டால் வழியில்லை என ஆளும் அரசுகளால் நம்ப வைக்கப்படுகிறது. ஏன்?

மதுபான ஆலைகளை நடத்துபவர்களாக .தி.மு.. - தி.மு..வின் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே இருக்கிறார்கள். கொள்ளை இலாபத்துடனும், தொழிலில் எதிர்கட்சிகளுடன் இணக்கமான கூட்டணி அமைத்தும் செயல்படுவதால் நட்டத்திற்கு வாய்ப்பே இல்லாத தொழிலாக மதுபான ஆலைத் தொழில் உள்ளது. ஆதரவாளர்களுக்கு பார் அனுமதி! காவல்துறை ஆசியுடன் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் கள்ள விற்பனை!

இப்படியொரு வலைப்பின்னலில் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் கொழுத்த இலாபம் பார்ப்பதால், மதுப்பிரியர்களும், குடிநோயாளிகளும் குடிப்பதை நான் நிறுத்திவிட்டேன் என பெற்ற பிள்ளையின் தலையில் சத்தியம் செய்தாலும், முத்திரைத் தாளில் எழுதி கையொப்பமிட்டாலும் டாஸ்மாக்கை மூடமாட்டார்கள்!

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை செயல்படுத்தவோ அல்லது பெருமளவுக்கு குறைக்கவோ கொரோனா ஊரடங்கை விட சிறப்பானதொரு சந்தர்ப்பம் வாய்க்கப் போவதில்லை!

உண்மையில், தமிழ்நாட்டை ஆட்சி செய்ய டாஸ்மாக் மதுக்கடை வருமானத்தை விட்டால் வழியில்லையா? நிறைய இருக்கிறது!

எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு மாற்றைப் பார்ப்போம். தமிழ்நாடு அரசு மது விற்பனையை நிறுத்திவிட்டு பால் விற்பனையை கையிலெடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டின் ஒருநாள் பால் தேவை - ஒரு கோடியே ஐம்பது இலட்சம் லிட்டர்.  நிறுவனங்கள் மூலமாகவும், கூட்டுறவு பால் சங்கங்கள் மூலமாகவும் பெறப்படும் பால் மட்டும்தான் இந்தக் கணக்கு. இதில்ஆவின்நிறுவனத்தின் பங்களிப்பு - ஒரு பங்கு இருபது விழுக்காடு மட்டுமே. அதற்கே ஆவினின் ஆண்டு வருமானம் 6,000 கோடி ரூபாய்!

சற்றொப்ப தமிழ்நாட்டின் 80 விழுக்காடு பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையை தனியார் நிறுவனங்கள் தான் வைத்திருக்கின்றன. அதில் ஹட்சன் டைரி என்ற தமிழக நிறுவனம் ஆவினுக்கு இணையான சந்தையை வைத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ஆந்திர நிறுவனங்களான திருமலா பால், டோட்லா, சந்திரபாபு நாயுடுவின் ஹெரிடேஜ் போன்ற நிறுவனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களும் உள்ளன.

கர்நாடக அரசின் நந்தினி பால் மட்டும் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 75,000 லிட்டர் பால் விற்கிறது. தயிர், நெய் போன்ற பால் பொருட்கள் தனி!

தமிழ்நாட்டின் தொடர் வண்டி நிலையங்களில் ஆந்திர அரசின் விஜயா பால் தான் பெருமளவுக்கு கடைகள் வைத்துள்ளன. ஆவின் இல்லை!

ஆவினின் 20 சதவீத சந்தையென்பது பாலில் மட்டும்தான். வெண்ணெய், தயிர், நெய், மோர் போன்ற பால் பொருட்களில் தனியார் நிறுவனங்கள் தான் தமிழகச் சந்தையை கட்டுக்குள் வைத்துள்ளன.

ஒரு நாளைக்கு சென்னையின் தயிர் விற்பனை மட்டும் இரண்டரை இலட்சம் லிட்டர் (1 லிட்டர் - ரூபாய் 45). ஒரு மாதத்துக்கு சென்னையின் நெய் விற்பனை மட்டும் 400 டன் (1 கிலோ - ரூபாய் 400). அதேபோல வெண்ணெய் 200 டன். மற்றவை தனி! பால் பொருட்களில் தனியார் நிறுவனங்கள் தான் கோலோச்சுகின்றன. (இவை மட்டுமல்லாமல் பால் சார்ந்த மூலப் பொருட்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், இனிப்பு மற்றும் அடுமனை சார்ந்த சந்தை என்பது மிகப்பெரியது! வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டுத் தேவையும் அதிகம்). ஆண்டுக்கு 20 விழுக்காட்டு வளர்ச்சியைக் கொண்டது பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தை!

டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் 30,000 கோடி ரூபாய். தமிழ்நாட்டின் உடனடி பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையென்பது சற்றொப்ப 40,000 கோடி ரூபாய்!

இதையொன்றும் நாம் கற்பனையில் எழுதவில்லை. சமகால நடப்புகளோடு பொருத்திப் பார்த்துதான் சொல்கிறோம். குசராத் அரசின் பால் நிறுவனமான அமுல் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 38,500 கோடி ரூபாய் (2018 – 2019). அதே போல் கர்நாடக அரசின் பால் நிறுவனமான நந்தினியின் ஆண்டு வருமானம் 15,500 கோடி ரூபாய் என்பதை நினைவில் கொள்க.

அது மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பால் கெட்டுப் போகாமலிருக்க கூடுதலாக வேதிப் பொருட்களை சேர்க்கின்றன என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது. அதே போல் பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) போன்றவற்றில் உடலுக்கு தீங்கிழைக்கும் சுவையூட்டியும், மணமூட்டியும் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. வாடிக்கையாளரை தக்க வைக்கவும், சந்தைப் போட்டியில் முன் செல்லவும் அறமற்ற இந்த செயல்களை தனியார் நிறுவனங்கள் துணிந்து செய்கின்றன. அரசே இதை ஏற்று நடத்தும் போது மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் குறைவான விலைக்குக் கிடைக்கும். அரசுக்கும் வருமானம் கூடும்!

பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பென்பது வேளாண்மையின் முகாமையான கூறு. அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு, சிறப்பான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் பால் உற்பத்தி, இறைச்சி மற்றும் வேளாண்மைக்கான இயற்கை உரம், அதையொட்டிய நஞ்சில்லா உணவு உற்பத்தியென பல் பொருள் விளைச்சலை அது ஏற்படுத்தும்!

பெருந்தொகை கிராமபுற மக்கள் நேரடி பயனாளிகளாக இருப்பார்கள். நகர்ப்புற மக்களுக்கும் நல்ல பால், உணவு, இறைச்சி போன்றவை உறுதி செய்யப்படும்!

மதுபான கடைகள் குடிப்பவர்களைக் கொல்கிறது. அவர் சார்ந்த குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறது. மதுபான ஆலைகள் குடிக்காதவர்களையும் கொல்கிறது. அது அமைந்திருக்கும் சுற்றுப்புற கிராமங்களின்  மக்களை நடுத்தெருவில் நிறுத்துகிறது. மதுபான ஆலைகள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு நீரின்றி மக்களை வறுமைக்குத் தள்ளுகிறது!

உலகத் தண்ணீர் நாளையொட்டி ஸ்டாக்குாமில் நடந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது - 500 மில்லி பீர் உற்பத்தி செய்ய 148 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறதாம்! சாராய ஆலைகள் நீர் மாசு ஏற்படுத்துவதில் முகாமையானப் பங்கு வகிக்கின்றன.

2018 – 2019 நிதியாண்டில் டாஸ்மாக் வெளியிட்ட அறிவிப்பைப் பாருங்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு விற்கப்பட்ட பீர் மதுபானத்தின் அளவு 35 இலட்சத்து 58 ஆயிரம் பெட்டிகள் (1 பெட்டி – 7.8 லிட்டர்) வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட அளவு 26,918 பெட்டிகள்!

தமிழ்நாட்டில் விற்கும் மூன்று போத்தல்களில் ஒன்று பீர் மதுபானம் என்கிறது புள்ளி விவரம். ஒரு லிட்டர் பீர் உற்பத்தி செய்ய 296 லிட்டர் தண்ணீர் தேவை என்பதையும் நினைவில் கொள்க!

எந்த வகையிலும் மதுவை - மதுபானக் கடைகளை - மதுபான ஆலைகளை விட்டுவைப்பதென்பது தமிழ்நாட்டுக்கு கொரோனாவைவிட ஆபத்தானதே! தமிழ்நாடு அரசு மதுக்கடை மூடல் குறித்து சிந்திக்க இதுவே சரியான தருணம்!


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.