ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சூழலியல் தாக்க விதிகள் – 2020 மேக்கேத்தாட்டை அனுமதிக்கும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


சூழலியல் தாக்க விதிகள் – 2020
மேக்கேத்தாட்டை அனுமதிக்கும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் *கி. வெங்கட்ராமன் அறிக்கை!


எட்டுவழிச் சாலைக்கும், மேக்கேதாட்டு அணைக்கும் இன்னும் சூழல் பேரழிவுத் திட்டங்கள் பலவற்றுக்கும் எளிதில் அனுமதி அளிக்கும் வகையில், “சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் – 2020” என்ற புதிய அறிவிக்கை வரைவை இந்திய அரசு முன்வைத்திருக்கிறது.
நடப்பிலுள்ள 2006 – அறிவிக்கையில், இந்த இடைப்பட்ட காலத்தில் சில பிற்போக்கான திருத்தங்களையும், புதிய பல விதிகளையும் ஒன்றிணைத்து இந்த புதிய அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
முக்கியமாக, இதில் மூன்று சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முன்வைக்காமலும், மக்கள் கருத்து கேட்காமலும் செய்யப்படும் புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தண்டத் தொகையுடன் தொடர வழி ஏற்படுத்தப்படுகிறது.
இரண்டு, 70 மீட்டர் வரையிலும் சாலையை அகலப்படுத்தும் சாலை விரிவாக்கத் திட்டங்கள், நீராதார கட்டமைப்புகள், பொது தூய்மையாக்கல் நிலையங்கள், போன்ற 14 வகை சூழல் பகைத் திட்டங்கள் இனி சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்க வேண்டியதோ, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டியதோ இல்லை! இதுமட்டுமின்றி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமான திட்டங்கள் என இந்திய அரசு அறிவிக்கும் எந்தக் கட்டமைப்புக்கும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை முன்வைக்க வேண்டிய தில்லை. சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றில் மக்கள் கருத்துக் கேட்பும் நடக்காது.
இவை போதாதென்று, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மண்டலங்கள், கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டுமானங்களுக்கோ, பழைய கட்டுமானங்களின் விரிவாக்கத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் இவ்விதி கூறுகிறது.
கட்டமைப்புகளை உருவாக்குகிறவர்கள் தாங்களே முன்வந்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைப்பார்களாம். அதை அதற்குரிய ஆய்வுக்குழு ஆய்வு செய்யுமாம்! தொடர்புடைய பகுதி மக்களோ, மக்கள் சார்ந்த அறிவியலாளர்களோ, மக்கள் இயக்கங்களோ, தொண்டு நிறுவனங்களோ சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, சூழலியல் பாதிப்பு தொடர்பான புகார்களை முதலில் அளிக்க முடியாது. இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் விசாரணைக் குழு கருத்துக் கேட்டால் மட்டும்தான், மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும்.
இந்த விதி மாற்ற அறிவிக்கை கொரோனா கெடுபிடிகளுக்கிடையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் மட்டும் வரைவாக முன்வைக்கப்பட்டு, 2020 மே 12ஆம் நாளுக்குள் மக்கள் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சிகளிலோ, ஏடுகளிலோ இதுகுறித்த விளம்பரங்கள், இதன் சாரமான செய்திகள் என எதுவும் வெளியாக வில்லை!
ஓசையின்றி வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிக்கை வரைவு சட்டமானால், சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை, காவிரியில் கர்நாடகத்தின் மேக்கேத்தாட்டு அணை, முல்லைப் பெரியாற்றில் கேரளம் திட்டமிடும் புதிய அணை, சாகர் மாலா துறைமுகங்கள் போன்ற பேரழிவுத் திட்டங்கள் அனைத்தும் தங்குதடையின்றி செயலுக்கு வந்துவிடும்.
இத்திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையிலேயே இசைவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிபந்தனை நீக்கப்பட்டுவிட்டால், இந்தப் பேரழிவுத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறி தமிழ்நாட்டை உருக்குலைத்துவிடும். இந்தியாவின் பிற பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற பல பேரழிவுத் திட்டங்கள் செயல்பட்டு, பெருந் தொகையான மக்கள் சூழலியல் அகதிகளாக இடம்பெயர நேரிடும்.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நரேந்திர மோடி அரசு, இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்க விரும்புகிறது.
தமிழ்நாட்டிற்கும், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பேரழிவை உண்டாக்க வகை செய்யும் இந்த “சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் – 2020”-ஐ வரைவு நிலையிலேயே இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.