ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டுத் தொழிலாளிகளை வழங்க தனி வாரியம் அமைக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


தொழில் நிறுவனங்களுக்கு
தமிழ்நாட்டுத் தொழிலாளிகளை வழங்க
தனி வாரியம் அமைக்க வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில்கள் தொடங்குவதற்குரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நடந்த “ஒளிரும் தமிழ்நாடு” நிகழ்ச்சியில் நேற்று (06.06.2020) பேசிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், வெளி மாநிலத் தொழிலாளிகள் வெளியேறிவிட்டதால், தமிழ் நாட்டிலுள்ள மண்ணின் மக்களை வேலையில் சேர்த்து தொழில்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளிகளுக்கு தொழில் திறன்களை வளர்ப்பதற்கு தமிழ்நாடு திறன்வளர்ச்சிக் கழகம் பயிற்சி அளிக்கும் என்றும் உறுதி கூறியிருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது!

ஒவ்வொரு தொழிலுக்கும் தேவைப்படும் தொழிலாளிகளை உள்ளூர் வட்டாரத்திலிருந்து தேர்வு செய்து கொடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு புதிதாக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். “அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்பது போன்ற உள்ளடக்கத்துடன் அந்நிறுவனம் செயல்பட வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் தாங்களே உள்ளூர் வட்டாரத் தொழிலாளிகளைத் தேடிச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விட்டுவிடாமல், தமிழ்நாடு அரசே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளில் வேலைக்குச் சேர தகுதியாக உள்ளவர்களை பட்டியலெடுத்து சேமித்து வைக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் பல்வேறு தகுதிகளில் தொழிலாளிகள் தேவை என்று தொழில் நிறுவனங்கள் கேட்டால், அவர்களை இந்த நிறுவனம் அத்தொழில்களுக்கு வழங்க வேண்டும்.

குறிப்பாக, இதில் இடைத்தரகர்களை அனுமதிக்கவே கூடாது! இடைத்தரகர்களை அனுமதித்தால் அவர்கள் தொழிலாளிகளின் சம்பளத்தைக் கணிசமாக எடுத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமின்றி, வட மாநிலத் தொழிலாளிகளை அழைத்து வந்து விடுவார்கள்.

கொரோனா தொற்று தீவிரமடைந்து கொண்டிருக்கும் நேரத்தில், மீண்டும் வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளிகள் வந்தால், தமிழ்நாடு தாங்காது! வெளி மாநிலத் தொழிலாளிகளாலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாலும்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக அதிகமாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே இந்த நான்கு மாவட்டங்களும் ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது. மறுபடியும், வெளி மாநிலத் தொழிலாளிகளை தாராளமாக அனுமதித்தால், தமிழ் நாடு முழுவதும் சென்னை மண்டலத்தைப் போல் கொரோனாவில் சிக்கித் தவிக்க நேரிடும்!

அத்துடன், வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளிகள் பெரும்பாலும் இந்தி மண்டலங்களைச் சேர்ந்தவர்கள். மிகை எண்ணிக்கையில் அவர்கள் வரும்போது, தமிழ்நாடு காலப்போக்கில் தமிழர்களின் தாயகம் என்ற நிலையை இழந்து கலப்பின மண்டலமாக மாறிவிடும். தமிழ் மொழியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் பொது மொழியாக இந்தி மாறிவிடும்.

தமிழ்நாட்டுத் தலைமைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை தரக்கூடிய இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்டுக் கோப்பும் மாறிவிடும்; வட இந்திய தலைமைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் இங்கு மேலாதிக்கம் செய்யும் நிலை உருவாகும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட அனைத்துக் காரணங்களையும் கணக்கில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள தொழில்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளிகளை வழங்கக்கூடிய ஏற்பாட்டை தமிழ்நாடு அரசே செய்யுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.