ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது! தமிழ்நாடு முதல்வருக்கு பெ. மணியரசன் கோரிக்கை!


வடமாநிலத் தொழிலாளர்களை
மீண்டும் அழைக்கக் கூடாது!

தமிழ்நாடு முதல்வருக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) - www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.