"நம் எதிர்காலம் நம் கையில்!" - “இலக்கு” இதழுக்கு ஐயா பெ. மணியரசன் அளித்த நேர்காணல்!
"நம் எதிர்காலம் நம் கையில்!"
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து..
“இலக்கு” இதழுக்கு - தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அளித்த நேர்காணல்!
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, அனைத்துலக ஊடக மையம் சார்பில் “இலக்கு” வார மின்னிதழுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல் அளித்துள்ளார். அதன் முதல் பகுதி 2020 ஆகத்து (இதழ் 92) இதழில் வெளியாகியுள்ளது. அது வருமாறு :
வினா : இலங்கைக்குள் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாற்றுப் போய்விட்ட அரசியல் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுக்குள்ள வேறு தெரிவுகள் குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில் : "அண்மையில் (2020 ஆகத்தில்) நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து, “அரசியல் தீர்வு” என்பது நிரந்தரமாக சாத்தியமற்றுப் போய்விட்டது என்ற முடிவுக்கு வரக்கூடாது.
நமக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தல் வழியாக வருவது அல்ல. ஈழத்தமிழர் தாயகத்தில் – அதாவது வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் கருத்து வாக்கெடுப்பு வழியாக வருவதாகும்!
இன்றைய இலங்கை என்ற “நாட்டு வடிவம்” சிங்கள ஆக்கிரமிப்பாளர்களாலும், ஐரோப்பியக் காலனி ஆதிக்கவாதிகளாலும் உருவாக்கப்பட்டது. இந்த இலங்கைக்குள் தமிழ் ஈழம் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழர் தாயகமான தமிழீழத்தில் தமிழர்கள் பெரும்பான்மையினர்; சிங்களர் சிறுபான்மையினர்!
ஆக்கிரமிப்பாளர்களால் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்ட இனங்கள் உலகெங்கும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களும் அப்படித்தான் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் மக்கள் தொகை பிரித்தானியா மக்கள் தொகையை விட – பிரான்சு மக்கள் தொகையைவிட அதிகம்!
உலகெங்கும் பார்த்தால், இவ்வாறு சிறுபான்மை ஆக்கப்பட்ட தேசிய இனங்கள், போராடிப் போராடி விடுதலை பெற்று வருகின்றன.
எத்தியோப்பியாவில் சிக்கிக் கொண்டிருந்த எரித்திரிய தேசிய இனம் தனது எரித்திரிய தாயகத்திற்குள் நடந்த கருத்து வாக்கெடுப்பில் மிகப்பெரும்பான்மை பெற்று, 1993இல் விடுதலை அடைந்தது.
இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்பில் இருந்த “சிறுபான்மை” கிழக்குத் திமோர் மக்கள், 1999இல் உலகநாடுகளின் மேற்பார்வையில் கிழக்குத் திமோருக்குள் மட்டும் நடந்த கருத்து வாக்கெடுப்பில் பெரும்பானமை பெற்று விடுதலை அடைந்தனர்.
சூடானில் “சிறுபான்மை” ஆக்கப்பட்ட தெற்கு சூடானியர் – 2011இல் தங்கள் தாயகத்திற்குள் மட்டும் நடந்த கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வடக்கு சூடானியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றனர்.
எரித்திரியா, கிழக்குத் திமோர், தெற்கு சூடான் ஆகியவற்றில் விடுதலைக்காக ஆயுதப்போர் நடந்தது. அதனால்தான் கருத்து வாக்கெடுப்பு நடந்தது. தமிழீழத்தில் ஆயுதப்போர் முடிந்து விட்டதே, இங்கு எப்படி கருத்து வாக்கெடுப்பு வரும் என்று கருதக்கூடாது.
உலகத்தின் இருபெரும் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கிய சோவியத் ஒன்றியம் 1990 – 1991இல் 15 நாடுகளாகப் பிரிந்ததற்கு ஆயுதப் போராட்டங்களோ, கருத்து வாக்கெடுப்புகளோ அடிப்படைக் காரணமல்ல; அங்கெல்லாம் இரசிய இன மேலாதிக்கத்தால் – இரசிய மொழி ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டிருந்த தேசிய இனங்களின் மக்கள் எழுச்சி ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் எழுந்தது. இரசிய வல்லரசுக்கு எதிராக இருந்த வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவு அந்த மக்களுக்குக் கிடைத்தன. பதினைந்து தேசிய இன நாடுகள் இறையாண்மையுடன் பிரிந்தன. செக்கஸ்லோவோக்கியா எந்தப் போராட்டமும் குருதி சிந்தலும் இல்லாமலே இரு நாடுகளாகப் பிரிந்தது.
பிரித்தானியாவிலிருந்து பிரிய வேண்டும் என்று அண்மைக்காலத்தில்தான் ஸ்காட்லாந்தியர் விடுதலை முழக்கமெழுப்பினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 2014இல் பிரித்தானிய அரசு ஸ்காட்லாந்தில் மட்டும் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.
குறைந்த வாக்கு வேறுபாட்டில் ஸ்காட்லாந்து விடுதலை இயக்கத்தினர் தோல்வி கண்டனர். ஆனால், எதிர்காலத்தில் நடைபெறும் இன்னொரு கருத்து வாக்கெடுப்பில் அல்லது வேறொரு ஏற்பாட்டில் ஸ்காட்லாந்து பிரியும் வாய்ப்பு உண்டு!
இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய பன்னாட்டு நெருக்கடியைப் பயன்படுத்தி, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் வட அமெரிக்காவின் உதவியோடு உருவாக்கியதுதான் இசுரேல் என்ற யூதர்களுக்கான நாடு! தமிழீழம் அமைவதற்கு, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் காத்திரமான பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கிறது என்ற பொறுப்புணர்வை தமிழர்கள் அனைவரும் பெற வேண்டும்.
உலக ஆதிக்க நாடுகளிடையே முரண்பாடுகள் வரும்போதும், அண்டை நாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்போதும், தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்போ அல்லது வேறு ஏற்பாடோ தமிழர்களுக்குத் தனிநாடு பெற்றுத்தரும். அதுவும் அரசியல் தீர்வே!
உலகெங்கும் தாயக இறையாண்மைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. நாம் தனியே இல்லை என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும்".
வினா : எல்லாமே கைமீறிப் போய்விட்டதான ஒரு ஏமாற்றமும் விரக்தியும் எம் மக்களிடம் இந்தத் தேர்தலுக்குப் பின்னால் ஏற்பட்டிருப்பதான ஒரு பார்வை மேலெழுந்து நிற்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : "அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவால் எல்லாமே கைமீறிப் போய்விட்டதாக நினைக்க வேண்டியதில்லை. இராசபட்சே குடும்பம் தோற்று, இரணில் கட்சியோ அல்லது சஜித் பிரேமதாசா கட்சியோ, அல்லது புதிய கூட்டணி ஒன்றோ வென்று அரசு அமைந்திருந்தால் எல்லாமே ஈழத்தமிழர்களின் கையடக்கத்திற்குள் வந்திருக்குமா?
தமிழர் தாயகத்தை மறுப்பதில், வடக்கு கிழக்கை இணைக்க மறுப்பதில், இலங்கையின் எதேச்சாதிகார ஒற்றையாட்சி முறையைக் கூட்டாட்சியாக மாற்ற மறுப்பதில், வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தைத் தீவிரப்படுத்துவதில், சிங்களத் திணிப்பைத் தீவிரப்படுத்துவதில் மேற்கண்ட மூன்று பிரிவினர்க்கும் இடையே வேறுபாடு உண்டா? இல்லை!
சம்பந்தரின் தமிழ்த்தேசியக் கூட்டணி மீண்டும் 16 இடங்களை அல்லது அதற்கும் மேலாகப் பெற்றிருந்தால் தமிழர் உரிமைகளை மீட்டுத் தருமா? குறைந்தது, ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015இல் நிறைவேற்றிய போர்க் குற்றங்களுக்கான உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் கலப்பு புலனாய்வு மன்றம் அமைக்க வலியுறுத்திப் பெற்றுத் தருவாரா? நடக்காது; நடக்காது!
புதிதாக உருவாகி வரும் தமிழர் சனநாயக எழுச்சியைப் பாருங்கள்! கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் “தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி” கட்சி இரண்டு இடங்களையும், விக்கினேசுவரன் அவர்களின் “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி” கட்சி ஓர் இடமும் பெற்றுள்ளன. இவ்விருவர் கட்சிகளும் தோற்ற தொகுதிகளில் கூட கணிசமாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். தமிழ் ஈழத்தமிழர்களிடையே சனநாயக எழுச்சி – வெகுமக்கள் எழுச்சி உருவாகியுள்ளது. மாணவர்களிடையே இவ்வெழுச்சி தெரிகிறது.
இந்த எழுச்சியை மேலும் வளர்ப்பதும் ஒருங்கிணைப்பதும் மிகமிகத் தேவை!
எதிர்ப்பக்கம் – சிங்கள அரசியலில் – இராசபட்சே குடும்ப எதேச்சாதிகாரத்திற்கு எதிராக – இதர சிங்களக் கட்சிகளின் போராட்டங்களும் – அவற்றை ஒடுக்கும் அரசின் வன்முறைகளும் தீவிரப்படும். இலங்கையைத் தன்தன் முகாமில் வைத்துக் கொள்ள, இந்திய – சீன அரசுகள் கொடுக்கும் நெருக்கடிகள் – அமெரிக்க வல்லரசின் தலையீடுகள் எனப்பல வெளி அழுத்தங்களுக்கு சிங்கள அரசு உள்ளாகும். குழுச் சண்டை அரசியலில் சிங்களம் சிதறும் சூழலும் எழலாம்!
வரலாறு நமக்காக எவ்வளவோ வாய்ப்புகளை வைத்திருக்கிறது. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள, அமைப்பு வழிப்பட்ட (Organisational) ஆற்றலையும், உத்தி வழிப்பட்ட (Strategical) திறமையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்கினேசுரன் ஆகியோர் கூட்டணியாகச் செயல்பட முயல வேண்டும். மலையகத் தமிழர்களை இணைக்க வேண்டும். அவர்களின் அமைப்புகளுடன் பேசி – ஒருவருக்கொருவர் துணை நிற்கும் உறவை வளர்க்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் (2015) தீர்மானத்தைச் செயலுக்குக் கொண்டு வருதல், வடக்கு - கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுதல், வடக்கு - கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்தல், சனநாயக உரிமைகள் - குடிமை உரிமைகள் முதலியவற்றை மீட்டல், தமிழை முழுமையான ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக செயல்படுத்த வலியுறுத்தல், தமிழர்கள் தனித்தேசிய இனம் என்ற நிலைபாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவது, அவ்வப்போது எழும் மக்கள் கோரிக்கைகளுக்குப் போராடுதல் போன்ற செயற்பாடுகளைக் கொண்டு, தமிழீழத் தேசிய வெகுமக்கள் இயக்கத்தைக் கட்டுக் கோப்பாக வளர்க்க வேண்டும். இந்த சனநாயகப் போராட்டங்களிலும் ஈகங்கள் செய்ய வேண்டி வரும். அதற்கு முகம் கொடுக்கும் அமைப்பாக வளர வேண்டும்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இலட்சிய உறுதியும், இலட்சியத்திற்கான முழு ஒப்படைப்பும், அறிவுக் கூர்மையும், அறச் சிந்தனையும், வீரச் சொற்களும் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
மாவீரர் நாள் உரையில் தலைவர் சொன்னார் : தமிழ் ஈழ விடுதலை இலட்சியம் எமது தலைமுறையில் நிறைவேறவில்லை என்றால், அந்த இலட்சியத்தை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்போம்! போராட்ட வடிவம் மாறலாம்! ஆனால் ஈழ விடுதலைப் போராட்டம் வெல்லும் வரை தொடரும்.
இன்றும் அவர் வழிகாட்டுகிறார் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். நம் எதிர்காலம் நம் கையில் என்று நம்புங்கள்!".
(நேர்காணலின் அடுத்த பகுதி, அடுத்த இதழில் வெளியாகும்)
“இலக்கு” - ஆகத்து இதழை முழுமையாகப் படிக்க
http://www.ilakku.org/ilakku-weekly-epaper-92-august-23-2020
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment