இராயக்கோட்டை உழவர் போராட்டம் வெற்றி! - தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம் வெற்றி!
கிருட்டிணகிரி மாவட்டம் – இராயக்கோட்டையில் தமிழ்நாடு மின்சார வாரியம் உழவர்களுக்குக் குறைவழுத்த மின்சாரம் வழங்கியதால், வேளாண்மைக்கு மோட்டார் இயக்கித் தண்ணீர் பெற முடியாமல் உழவர்கள் தவித்து வந்தனர். புதிதாக துணை மின் நிலையம் அமைத்து, இராயக்கோட்டை மின்சார வாரியத்தை கிருட்டிணகிரி மாவட்டத்தோடு இணைத்தால்தான் மின் வழங்கல் சரியாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இதற்காக உழவர்களைத் திரட்டிப் போராட தமிழக உழவர் முன்னணி முயற்சி மேற்கொண்டது. இன்று (26.08.2020) காலை இராயக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் முன்பு இராயக்கோட்டை உழவர்களைத் திரட்டி, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இராயக்கோட்டை மின்சார வாரியத்திற்கு உட்பட்ட நெல்லூர், தேவசந்திரம், தொட்டமெட்ரை, சின்னமெட்டரை, கருக்கனஹள்ளி, பந்தாரப்பள்ளி, அளேசீபம், சஜ்ஜலப்பட்டி, பிள்ளையார் அக்ரகாரம், லிங்கனம்பட்டி, கடவரஅள்ளி, கோனேரி அக்ரகாரம், கொப்பக்கரை, பால்னாம்பட்டி, முகளூர், சொன்னியம்பட்டி, தொட்டிலாம்பட்டி, புதுப்பட்டி, தொட்டதிம்மனஹள்ளி, கோணம்பட்டி, முத்தம்பட்டி, பாறையூர், பெரியதோட்டம், கொட்டாயூர், பழையூர் ஆகிய கிராமங்களுக்கு உடனடியாகக் குறைவழுத்தம் (Low Voltage) மின்சாரப் பற்றாக்குறையை நீக்கி உழவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டும், இராயக்கோட்டை துணை மின் நிலையத்தை உடனடியாக கிருட்டிணகிரி மாவட்டத்தோடு இணைக்க வேண்டும், 2009ஆம் ஆண்டு வரை மின் இணைப்பு கேட்டோருக்கு வழங்கியதைப் போல், 2015ஆம் ஆண்டு வரை மின் இணைப்பு கேட்ட அனைத்து உழவர்களுக்கும் மின்சார திட்டம் - ரூ. 10,000, ரூ. 25,000, ரூ. 50,000 மற்றும் இலவச மின்சாரம் உடனடியாக வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் தூ. தூருவாசன் மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரசு விவசாய அணித் தலைவர் திரு. எஸ். அரிபாபு சம்பங்கி ஆகியோர் தலைமை தாங்கினர். கெலமங்கலம் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. கணேசன், பா.ம.க. ஒன்றியச் செயலாளர் திரு. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் முருகப்பெருமாள் (த.தே.பே.) ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்.
கிருட்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஏ. செல்லக்குமார், தமிழக உழவர் முன்னணி கிருட்டிணகிரி மாவட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. முருகன் (தி.மு.க.), கெலமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திரு. விருமாண்டி (பா.ம.க.), திரு. இராசேந்திரன் (தே.மு.தி.க.), தருமபுரி நகர த.தே.பே. செயலாளர் தோழர் விசயன், தமிழக உழவர் முன்னணி கிருட்டிணகிரி ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகேசன், தருமபுரி ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். தொட்டமெட்டரை துணைத் தலைவர் திரு. திம்மராயன் நன்றி கூறினார். கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் திரு. அரியப்பன் (தி.மு.க.), ஓசூர் த.தே.பே. தோழர்கள் துரைமுருகன், வனமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உழவர்களும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமிழ்நாடு மின்சார வாரிய கிருட்டிணகிரி மின்சார வாரிய செக்சன் பொறியாளர் திரு. சூரிய நாராயணன், தருமபுரி செயற்பொறியாளர் (பொது) (Executive Engineer - General) திருமதி. கனகலட்சுமி, பாலக்கோடு இணைப் பொறியாளர் (DE) திருமதி. வனிதா ஆகியோரை போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துப் பேசினர். அப்போது, உழவர்களுக்கு இதுவரை வழங்கி வந்த குறைவழுத்த 210 Voltage மின்சாரத்தை, நேற்று மாலை முதல் 400 Voltage ஆக உயர்த்திவிட்டதாகவும், தொட்டமெட்டரை பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க முடிவெடுத்து, அதற்கான இடத்தை நேற்று மாலையே ஆய்வு செய்து விட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுக்குப் பிறகு துணை மின் நிலையத்தை விரைந்து அமைத்து இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். புதிய மின் இணைப்புக் கோரிக்கை குறித்த நம் கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்லக்குமார் அவர்கள் கைப்பேசியில் கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தொட்டமெட்டரை துணை மின்நிலையம் குறித்துத் தகவல் தெரிவித்து, துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு விரைவான ஒப்புதல்களை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இரண்டே நாட்களில் இடத்தை மின்சார வாரியத்திற்கு அளித்து விடுவேன் என மாவட்ட ஆட்சியர் அப்போது ஒப்புதல் அளித்தார்.
மக்களைத் திரட்டிப் போராடினால், கோரிக்கைகளை வென்று காட்ட முடியும் என்பதை தமிழக உழவர் முன்னணி மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகிறது! உழவர்கள் ஒருங்கிணைந்தால் எதுவும் சாத்தியம்!
Leave a Comment