ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பிரசாந்த் பூசன் - நெடுங்குன்றமாய் நிமிர்ந்து நிற்கிறீர்கள்! - ஐயா பெ. மணியரசன் கட்டுரை!


பிரசாந்த் பூசன் -
நெடுங்குன்றமாய் நிமிர்ந்து நிற்கிறீர்கள்!


ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொப்டே அவர்களின் சில தீர்ப்புகளையும், பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்கால செயல்பாடுகளையும் விமர்சிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ( Prashant Bhushan ) இரண்டு சுட்டுரைகளை (ட்விட்டுகளை) வெளியிட்டிருந்தார்.

அவை உச்ச நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக, உச்ச நீதிமன்றம் தானாக முடிவு செய்து, பூசன் மீது வழக்குத் தொடுத்தது. நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரித்து அண்மையில் (14.08.2020) குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தது.

பிரசாந்த் பூசன் குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்டு, தண்டனை விவரத்தை 20.08.2020 அன்று அறிவிப்போம் என்று அருண் மிஸ்ரா அமர்வு அறிவித்தது.

இந்தியா முழுவதுமிருந்து முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகளும், மூத்த வழக்கறிஞர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், ஊடகத்தார்களும், அறிவாளர்களும், குடிமை உரிமை இயக்கங்களும் அருண் மிஸ்ரா அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, அறிவார்ந்த விமர்சனங்களும் விவாதங்களும் நடத்தி வருகின்றனர்.

இன்று (20.08.2020) உச்ச நீதிமன்றத்தில் நேர்நின்ற பிரசாந்த் பூசன் அளித்த வாக்குமூலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது! இளந்தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டியது. இதோ பிரசாந்த் பூசனின் வீரவரிகள் – தன்மான வரிகள் – சனநாயகக் காப்புச் சொற்கள் சில :

“நான் மனம் வருந்தினேன்; தண்டிக்கப்படப் போகிறேன் என்பதற்காக அல்ல! நான் நீதிபதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதற்காக!

“நான் அதிர்ச்சி அடைந்தேன் எதற்காக? “கெடுநோக்கம், இழிவுபடுத்தும் எண்ணம் ஆகியவற்றால் திட்டமிட்டு நீதித்துறையைத் தாக்கினேன்” என்று நீதிபதிகள் வந்த முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

”நான் இக்குற்றங்களைச் செய்தேன் என்பதற்கு எந்தச் சாட்சியமும் தராமல் – நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதே என்று மட்டும் குழம்பிப் போனேன்.

“நான் மீண்டும் சொல்கிறேன்; இரு சுட்டுரை விமர்சனங்களை எனது நேர்மையான நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே முன்வைத்தேன். சனநாயகத்தில், எந்த உயர் அமைப்பின் மீதும் வெளிப்படையான விமர்சனம் தேவை. அதுவே அவற்றைப் பாதுகாக்கும்.

“காந்தியடிகள் நீதிமன்றத்தில் சொன்னவற்றையே நான் இப்போது சொல்கிறேன் :

“நான் உங்களிடம் கருணை கோரவில்லை. உங்களின் பெருந்தன்மைக்கு நான் வேண்டுகோள் வைக்கவில்லை. நான் இங்கு இருக்கிறேன்; உங்களின் எந்தத் தண்டனையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் செய்தது குற்றம் என்று சட்ட வரையறைப்படி நீதிமன்றம் முடிவுக்கு வந்தால், அத்தண்டனையை ஒரு குடிமகனின் பெருமைக்குரிய கடமை என்று ஏற்கிறேன்”.

பிரசாந்த் பூசன், நெடுங்குன்றமாய் நிமிர்ந்து நிற்கிறீர்கள்; வாழ்த்துகள்!

(குறிப்பு : பிரசாந்த் பூசன் மன்னிப்புக் கேட்க உச்ச நீதிமன்றம் மூன்று நாள் அவகாசம் கொடுத்து தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.