ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஐவர்வழி வேம்பையன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! - பெ. மணியரசன் இரங்கல்!ஐவர்வழி வேம்பையன் மறைவு
ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


முதுமையிலும் மூச்சும் பேச்சும் தமிழாய் – தமிழினமாய் வாழ்ந்த ஐயா ஐவர்வழி வ. வேம்பையன் அவர்கள் நேற்று தி.பி. 2051 ஆவணி 12 (28.08.2020) வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தி, பெரும் துயரமளிக்கிறது!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றியபோது, அங்கேயே இன உணர்வாளர்களைக் கொண்ட மன்றம் அமைத்து பகுத்தறிவு, தமிழின உணர்வு, தமிழ் மொழி உணர்வு, சமூகநீதி ஆகிய இலட்சியங்களுக்காகத் தொடர்ந்து கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தி வந்தார் ஐயா வேம்பையன் அவர்கள்.

பெரியாரிய பகுத்தறிவுச் சிந்தனையில் தோய்ந்து, மக்கள் பணியாற்றி வந்த ஐவர்வழி வேம்பையன் அவர்கள், மிகச்சிறந்த தமிழ்த்தேசியராக மலர்ச்சி பெற்றார். திருக்குறளை முதன்மைப்படுத்தி, அதன் கருத்துகளைப் பரப்பும் பணிகளில் ஈடுபட்டார்.

திருவள்ளுவர், பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப்பாவாணர் ஆகியோர் கருத்துகளைப் பரப்புவதற்குரிய குறியீடாக “ஐவர்வழி வேம்பையன்” என்று தமது பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார்.

திருவள்ளுவர் ஆண்டைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் தைப் பொங்கலையொட்டி, திருவள்ளுவர் ஆண்டு உருவான வரலாற்றையும், தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக் கொண்ட வரலாற்றையும் சிறு வெளியீடாகவும் வெளியிட்டுப் பரப்பி வந்தார். அதில், நாட்களை தூயதமிழில் எழுதினார். இப்பணிகளின்வழி ஐயா வேம்பையன் அவர்களுடன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு, குறிப்பாக எனக்கு நல்ல உறவு ஏற்பட்டது. நாங்கள் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை நிதி அளித்து வந்தார்.

மறைமலை நகரில் அவர் வசித்து வந்த போது, மற்ற தமிழின உணர்வாளர்களுடன் இணைந்து “திருவள்ளுவர் மன்றத்தை” உருவாக்கி, அதன் பணிகளில் ஆர்வத்தோடு பங்கெடுத்து வந்தார். அத்திருவள்ளுவர் மன்றம் மிகச்சிறந்த கருத்தரங்குகள் பலவற்றையும், கூட்டங்களையும் நடத்தி வந்தது – நடத்தி வருகிறது.

பிற்காலத்தில், முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையிலும், விடாமல் தமிழ்ப்பணியாற்றி வந்தார். திருவள்ளுவர் ஆண்டு பரப்புரை வெளியீடுகளைக் கொண்டு வந்தார். உடல் முடியாத நிலையிலும், கருத்தரங்குகளில் கலந்து கொண்டார்.

ஐயா ஐவர்வழி வ. வேம்பையன் அவர்களின் மறைவு, அவர் ஆற்றி வந்த தமிழர் – தமிழ் உரிமைப் பணிகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஐயா வேம்பையன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், கருத்தொருமித்த தோழர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.