ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் வேலை உரிமைக் கோரிக்கையில் வி.சி.க.வுக்குக் குழப்பம் ஏன்? - தோழர் க. அருணபாரதி அறிக்கை!தமிழர் வேலை உரிமைக் கோரிக்கையில்
வி.சி.க.வுக்குக் குழப்பம் ஏன்?

தோழர் க. அருணபாரதி
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென 1991ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து வந்த முழக்கம், இன்று மக்கள்மயமாகியுள்ளது. கடந்த ஆண்டு (2019) மே 3 அன்று, திருச்சி பொன்மலையில் “#தமிழகவேலைதமிழருக்கே” என்ற முழக்கத்தோடு நாம் நடத்திய முற்றுகைப் போராட்டமும், சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கமும் இந்திய அளவில் பேசுபொருளான பிறகு, தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இக்கோரிக்கையில் கவனம் செலுத்தத் தொடங்கின.

கொடிய கொரோனா நோய் மக்களை அச்சுறுத்தி வரும் இக்காலகட்டத்திலும், திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட வடநாட்டவர்கள் பணியமர்த்தப்பட்டதைக் கண்டித்து, கடந்த 04.08.2020 அன்று, பொன்மலை பணிமனையை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நாம் முற்றுகையிட்டுப் போராடினோம்.

இதனையடுத்து, “தமிழக வேலை தமிழருக்கே!” என்ற முழக்கத்தோடு - கடந்த 08.08.2020 அன்று, நாம் தமிழர் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 10.08.2020 அன்று தி.மு.க.வினரும், 19.08.2020 அன்று, ம.தி.மு.க.வினரும் பொன்மலையில் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர். 16.08.2020 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி “தமிழக வேலை தமிழருக்கே!” என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. நேற்று (24.08.2020), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், “தமிழ்நாட்டு அரசு வேலை தமிழ்நாட்டு மக்களுக்கே” என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் தன் தொண்டர்களின் இல்லங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நம் கோரிக்கை மக்கள்மயமாகியுள்ளதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளில் தெரியும் சில முரண்பாடுகளை இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி கடந்த 24.08.2020 அன்று வெளியிட்ட முகநூல் அறிக்கையில், “தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் உள் மாநிலத் தொழிலாளர்களுக்கு “முன்னுரிமை” வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்” என்று கூறுகிறார். (காண்க : https://www.facebook.com/thirumaofficial/posts/3074826029443410)

அதே பதிவில் இன்னொரு இடத்தில், ”தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்களை கொண்டு வந்து பணியமர்த்தம் செய்கின்றனர். இதனால் அத்தகைய தனியார் தொழிற்சாலைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்.

ஆம், இந்த நிலை உண்மைதான்! இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்? அவரே சொல்கிறார் “தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்கிறார் திருமா.

அதாவது, தமிழ்நாட்டிற்குள் வந்துள்ள இந்தப் புலம்பெயர் வெளிமாநிலத் தொழிலாளிகள் ஆக்கிரமித்துள்ள இடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு, அவர்கள் வெளியேறிய இடங்களில், தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால், தோழர் திருமாவளவன் அவர்களோ, “புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது” என்கிறார். தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் “முன்னுரிமை” வழங்கினால் போதும் என்கிறார்.

தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு எவ்வித “பாதிப்பும்” வராமல், தமிழ்நாட்டிலுள்ள வேலைகளை “தமிழ்நாட்டு மக்க”ளுக்கு வழங்க முடியுமா? புலம் பெயர்ந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு, அவரவர் மண்ணில் வேலை உறுதி செய்ய வேண்டுமெனக் கோரினால் அது ஞாயமானது! ஆனால், அவர்கள் புலம் பெயர்ந்து வந்துள்ள தமிழ்நாட்டில் – அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், மண்ணின் மக்களுக்கு வேலையை உறுதி செய்ய வேண்டுமெனக் கூறினால், அது தன் முரண்பாடாகத் தெரியவில்லையா?

ஏன் இந்தக் குழப்பம்? சிறுத்தைகளுக்கு உள்ள இந்தியத்தேசிய ஒருமைவாதத்தால் விளைந்த குழப்பம் இது! ஒருபக்கம் இந்தியத்தேசிய ஒருமைவாதப் பற்று, இன்னொரு பக்கம் பல்தேசிய இன இந்தியாவில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரம்!

தமிழ்நாடு – பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றுத் தாயகம்! இங்கு அரசுப் பணியில் மட்டுமல்ல, தனியார் வேலைகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்! புலம் பெயர்ந்து தமிழ்நாடு வந்துள்ள வெளிமாநிலத் தொழிலாளிகளை வெளியேற்றாமல் இதைச் செய்ய முடியாது என்பதே உண்மை. ஆனாலும், தனது இந்தியத்தேசிய ஒருமைவாதப் பற்றையும் வெளிப்படுத்தியாக வேண்டிய சூழலில், சிறுத்தைகள் இவ்வாறு குழப்புகின்றனர்.

இந்தியா ஒரு தேசமல்ல, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. இந்த உண்மையை ஏற்றுக் கொண்டுதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் என்று சொல்லாமல், ஓர் ஒன்றியம் என்று கூறுகிறது. ஆனால், ஆரியத்துவாவாதிகள் இந்தியாவை ஒற்றைத் தேசமாகப் புனைந்து, “ஒரே தேசம் – ஒரே மொழி – ஒரே சட்டம்“ என்று வெறியாட்டம் போடுகின்றனர். இதை எதிர்க்க வேண்டிய நாம், இந்தியாவில் பல்தேசிய உரிமையை முழங்க வேண்டும். ஆனால், சிறுத்தைகளோ ஆரியப் புனைவான ஒற்றை இந்தியத்தேசியவாதத்தை ஏற்றுக் கொண்டு, கடந்த 2020 பிப்ரவரியில் “தேசம் காப்போம்” எனப் பேரணி நடத்தினர்.

இந்த ஒற்றை இந்தியத்தேசிய மயக்கம், சிறுத்தைகளுக்கு இன்னும் தொடர்வதால்தான், “தமிழர்களுக்கே வேலை” என்ற முழக்கம் “தமிழ்நாட்டு மக்களுக்கே” என்று திரிபடைகிறது. ”புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல்” எனப் பம்முகிறது. நெடுங்காலமாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் பிறமொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியே “தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது. எனவே, தேசிய இனம் சார்ந்த “தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற இம்முழக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் சிதைக்க வேண்டியதில்லை! இதில் குழம்பத் தேவையில்லை!

புலம் பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு அவரவர் சொந்த மாநிலங்களில் வேலை அளித்துப் பாதுகாக்க வேண்டியது, அந்தந்த மாநில அரசுகளின் கடமை! அதுவே அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. அந்த பாரத்தை நாம் சுமக்க முடியாது! எனவே, தமிழ்த்தேசியத் தெளிவுடன் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே” எனக் குழப்பமின்றி முழங்குமாறு விடுதலைச் சிறுத்தைகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.