ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சூரியா அறிக்கை நீதிமன்ற அவமதிப்பல்ல சமூகநீதித் தவிப்பு! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை




சூரியா அறிக்கை  நீதிமன்ற அவமதிப்பல்ல
சமூகநீதித் தவிப்பு!

பெ.மணியரசன், 
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வான நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

நடப்பாண்டு நீட் தேர்வு 13.09.2020 அன்று நடைபெறவிருந்த நிலையில், அதன் மீதுள்ள அச்சத்தின் காரணமாக ஒரே நாளில் 11.09.2020 அன்று மட்டும் ஒரு மாணவி உட்பட மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு மடிந்தார்கள். தமிழர்களிடையே இந்தத் தற்கொலைகள் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தின. 

இந்தப் பின்னணியில் நீட் தேர்வைக் கைவிட வலியுறுத்தி அகரம் அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நடிகருமான சூரியா 13.09.2020 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டார். 

சூரியாவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் அவமதித்துள்ளதாகவும் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும் அதன் தலைமை நீதிபதி ஏ.பி. சாகி அவர்கட்கு, அதே உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 

சூரியா அறிக்கையிலிருந்து நீதிபதி சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ள குற்றச்சாட்டு, “கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் தேர்வு எழுத ஆணையிடுகிறது” என்ற பகுதியாகும். 

கொரோனாவில் நீதிபதிகளுக்குரிய பாதுகாப்பு மட்டுமின்றி, வழக்கறிஞர்கள், வழக்கிற்கு உரிய மக்கள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் முதலிய அனைவர்க்குமான பாதுகாப்புக் கருதித்தான், நீதிமன்றங்கள் காணொலி மூலம் இயங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை இட்டது. எனவே, சூரியா சுட்டிக்காட்டியுள்ள “உயிருக்குப் பயந்து” என்ற தொடர் நீதிபதிகளை மட்டுமே குறித்தது ஆகாது.

அடுத்து, இந்தக் கொரோனா பொது முடக்கக் காலத்தில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்களும், மக்களும் வைத்தனர். இது தொடர்பாக நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு நடத்த அனுமதி அளித்துத் தீர்ப்பளித்தது. 

இந்தியா முழுவதும் 15 இலட்சத்திற்கு மேல் மாணவ மாணவிகள் பங்கேற்கும் நீட் தேர்வை நடப்புக் கொடிய கொரோனா காலத்தில் நடத்தாமல் அம்மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து, மருத்துவக் கல்லூரிகளில் சேர உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருக்கலாம். விடுதலை பெற்ற இந்தியாவில் 1947லிருந்து 2014 வரை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் கடைபிடித்து வந்த நடைமுறை இதுதான்!

கொரோனாக் கொடிய முடக்கத்தில் விதிவிலக்காக இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கெனவே நீண்டகாலமாக இருந்து வந்த நடைமுறையைப் பின்பற்ற உச்ச நீதிமன்றம் ஆணை இட்டிருக்கலாம் என்ற விமர்சனம்தான் சூரியாவின் அறிக்கையின் சாரம்! இந்த விமர்சனம் நீதிபதிகளின் தீர்ப்பிற்கு எந்தக் கெட்ட உள்நோக்கமும் கற்பிக்கவில்லை. 

உள்நோக்கம் கற்பிக்காமலும் நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தாமலும் தீர்ப்புகளை விமர்சிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. 

சூரியா அறிக்கை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் வராது என்றும், அவ்வாறு சூரியா மீது வழக்குத் தொடுக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சாகி அவர்கட்கு வேண்டுகோள் விடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதிகள் கே. சந்துரு, கே.என். பாஷா, டி. சுதந்திரம், து. அரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் கடிதம் எழுதியிருப்பது பாராட்டிற்குரிய முன்னெடுப்பாகும்! 

தமிழ்நாட்டு பா.ச.க.வினர் வழக்கம்போல் தமிழர்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள். 

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனைத்திந்திய அளவில், “நீட்” என்ற நுழைவுத் தேர்வு நடத்துவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அரசுப் பள்ளி மாணவர்களை வடிகட்டி, கழித்துக் கட்டுவதற்கான வர்ணாசிரம உத்தி என்பதை தமிழ்நாட்டில் எல்லோரும் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த உணர்வைத்தான் “நீட்” போன்ற “மனுநீதி”த் தேர்வுகள், எங்கள் மாணவர்களின் வாய்ப்பை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது” என்று மிகச் சரியாகச் சொல்லியுள்ளார் சூரியா! 

“அகரம்” அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களின் படிப்பிற்குரிய படிக்கட்டுகள் அமைத்துத் தரும் சூரியா, அம்மாணவர்களின் மருத்துவக் கல்லூரி வாய்ப்பையும் உயிரையும் பறிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன அறிக்கை விடுத்தது பாராட்டத்தக்க செயலாகும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.