ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கண்ணீர் சிந்துவதே பயங்கரவாதமா? தோழர் பாலன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்க! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



கண்ணீர் சிந்துவதே பயங்கரவாதமா?

தோழர் பாலன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், அவ்வமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கோ. சீனிவாசன், தோழர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2021 பிப்ரவரி 7ஆம் நாள் அதிகாலை 4.30 மணியளவில், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் செய்த “குற்றம்” – கேரள அதிரடிப்படையினரால் போலி மோதலில் கொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டு தோழர் மணிவாசகம் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான்! 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிவாசகம் உட்பட 4 மாவோயிஸ்ட்டுகள் கடந்த 2019 அக்டோபர் 28இல் “தண்டர்போல்ட்” என்ற கேரள சிறப்பு அதிரடிப்படையினரால் போலி மோதலில் கொல்லப்பட்டனர். 

இவர்களில் மணிவாசகத்தின் உடல் 2019 நவம்பர் 14ஆம் நாள் நள்ளிரவில், சேலம் மாவட்டம் – ஓமலூர் அருகிலுள்ள அவரது சொந்த ஊரான கணவாய்புதூரில் எரியூட்டப்பட்டது. அந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதுதான் தோழர் பாலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. 

இந்த இரங்கல் நிகழ்வு தொடர்பாக சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் 14 / 2020 என்ற குற்றவழக்கு புனையப்பட்டது. அந்த வழக்கில்தான், இப்போது அடுத்தடுத்து தோழர் பாலன் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சதிக்குற்றம் (120B), அரசைக் கவிழ்க்க சதி (124A), தடை செய்யப்பட்ட சட்டவிரோத அமைப்பில் உறுப்பினராய் இருத்தல் (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் - UAPA – ஊபா பிரிவு 10), சட்ட விரோத நடவடிக்கைகள் (பிரிவு 19), பயங்கரவாதச் செயல் (பிரிவு 15), பயங்கரவாத சதி (பிரிவு 18) உள்ளிட்ட கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

தோழர் பாலனோ, அவர் தலைமையிலான தமிழ்த்தேச மக்கள் முன்னணியோ மாவோயிஸ்ட்டுப் பிரிவினர் அல்லர் என்பது காவல்துறைக்குத் தெரியாதது அல்ல. மாவோயிஸ்ட்டுகளின் கொள்கை – நடைமுறைகளில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் பல்வேறு மாற்றுக் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றவர்கள்தான்! தோழர் பாலனும், அவரது அமைப்பும் வெளிப்படையாக இயங்கி வருபவைதான்! 

ஆயினும், மோதல் கொலையில் மரணமடைந்தார் என்பதற்காக அந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவ்வளவே! 

இராசீவ்காந்தி இறந்தாலோ, வாச்பாய் இறந்தாலோ கண்ணீர் சிந்தினால், அது தேசபக்தி; மாவோயிஸ்ட்டு மணிவாசகத்திற்கு கண்ணீர் சிந்தினால், அது பயங்கரவாதம் என தரம் பிரிப்பது அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறல் ஆகும்! 

ஒருவர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்போர் எல்லாம் அவரது கருத்திலோ, இயக்கத்திலோ உடன்பாடு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இது ஊரறிந்த பண்பாடு! 

மோடி ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் அனைவருமே “நகர்ப்புற நக்சல்பாரிகள்” என்றும், பயங்கரவாதிகள் என்றும் குற்றம்சாட்டப்பட்டு ஏதோவொரு காவல் நிலையத்தில் புனையப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து கைது செய்து கொண்டே செல்வது என்பது மோடி பாசிச ஆட்சியின் வழக்கமாகிவிட்டது. 

கொடுமையாகத் திருத்தப்பட்ட ஊபா சட்டத்தின்படி, ஒரு டி.எஸ்.பி.யின் முன்னால் ஒருவர் அளிக்கும் வாக்குமூலமே வேறு எவரையும் கைது செய்வதற்கு போதுமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஒருவரைக் கைது செய்து தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு, தங்கள் விருப்பத்திற்கு யாரை வேண்டுமானாலும் அந்தக் குற்றப் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்குக் காவல்துறையினருக்கு இது வழி ஏற்படுத்துகிறது. 

ஊபா சட்டத்தின்கீழ் பயங்கரவாதச் செயல் அல்லது பயங்கரவாதச் சதி என ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட உடனேயே அதுகுறித்த குற்றவழக்கு அதிகாரத்தை மாநிலக் காவல்துறையிடமிருந்து இந்திய அரசின் “தேசிய விசாரணை முகமை” (என்.ஐ.ஏ.) எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கையும் என்.ஐ.ஏ.தான் எடுத்து நடத்துகிறது. 

தோழர் பாலனும், அவரது தலைமையில் இயங்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியினரும் பா.ச.க.வை இத்தேர்தலில் தோற்கடிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். அந்தக் கருத்தில் உடன்பாடு உள்ளவர்களை இணைத்துக் கொண்டு பரப்புரை செய்து வருகிறார்கள். 

இந்த உத்தியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு உடன்பாடு இல்லை. 

ஆயினும், இவ்வாறு பரப்புரை செய்வது அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையாகும். அதை மறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்தக் கைது முற்றிலும் சனநாயக விரோதமானதாகும். இந்தப் பாசிச நடவடிக்கையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

தோழர் பாலன் உள்ளிட்ட அனைவரின் மீதான வழக்கைக் கைவிட்டு, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.