ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்! 


தமிழ்நாட்டில் இயங்கும் நெய்வேலி நிலக்கரிப் பழுப்பு நிறுவனம் பட்டதாரிப் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு பட்டயக் கணக்காளர்கள், மனித வளப் பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு மின்துறை, சுரங்கத்துறை, கணினி, நிதி, மனித வளம் போன்ற துறைகளுக்கான 259 நிரந்தரப் பணிகளுக்கு கடந்த 13.03.2020 அன்று (விளம்பர எண் : 2 / 2021), விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு கொடுத்திருந்தது. 

கொரோனா தொற்று காரணமாக இதற்கான நேர்முகத் தேர்வு மூன்றுமுறை நாள் குறிப்பிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு, இறுதியில் கடந்த 2021 நவம்பரில் நடத்தப்பட்டது. 

இத்தேர்வுகளை உத்திரப்பிரதேசத்தின் நொய்டா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “எஜூகேசன் கன்சல்டேசன் இந்தியா லிமிடெட்“ (Ed.C.I.L.) என்ற வடநாட்டு அரசுத்துறை நிறுவனம் நடத்தியது. 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இத்தேர்வின் முடிவில் நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை இந்நிறுவனம் அளித்து, அதனை 30.01.2021 அன்று என்.எல்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டது.  

259 காலியிடங்களுக்கான 1582 பேர் அடங்கிய இந்தப் பெயர் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் தான்! நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களிலேயே 8 பேர்தான் தமிழர்கள் என்றால், ஒருவரைக்கூட நேர்முகத் தேர்வில் பணிக்குத் தேர்வு செய்வார்களா என்பது ஐயம்!

தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்களையோ, அந்நிறுவனப் பணியிலிருந்து இறந்தோரின் வாரிசுகளையோ, பழகுநர் பயிற்சி முடித்தவர்களையோ முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்திக்காரர்களையும் வடநாட்டுக்காரர்களையும் தொடக்க ஊதியமே 60,000 ரூபாயுள்ள இந்த நிரந்தரப் பணிகளில் சேர்ப்பது தற்செயலானது அல்ல – திட்டமிட்ட தமிழின ஒதுக்கல் கொள்கை ஆகும்! இது கடும் கண்டனத்திற்குரியது! 

எனவே, என்.எல்.சி. நிறுவனம் இந்த நேர்முகத் தேர்வை இரத்து செய்துவிட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு இப்பணிகளுக்கு 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களையே சேர்க்கும் வகையில் ஒதுக்கீடு வழங்கி, பணியமர்த்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.