ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னைப் பல்கலையில் சைவ சித்தாந்த முதுகலைப் படிப்பு தொடர வேண்டும்! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!சென்னைப் பல்கலையில் சைவ சித்தாந்த
 முதுகலைப் படிப்பு தொடர வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!

சென்னைப் பல்கலைக்கழகம் சைவ சித்தாந்தம், சைவ ஆகமங்கள் மற்றும் பன்னிரு திருமுறை செவ்விலக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்ட முதுகலை மெய்யியல் படிப்பை நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. உரிய எண்ணிக்கையில் மாணவர்கள் சேராததே காரணம் என்று பல்கலைக் கழகம் கூறியுள்ளது மிகவும் துயரமளிக்கிறது! 

சைவ சித்தாந்த மெய்யியல் மிக நுட்பமான அறிவாற்றலையும், தருக்கத்தையும் கொண்டது. மனித நேயம் – மனித சமத்துவம் கொண்டது. சைவ சித்தாந்தத்தின் உயிர் சிவநெறியும், தமிழும் ஆகும். அப்படிப்பை முதுகலையில் கற்க மாணவர்கள் வரவில்லை என்பது, அதிர்ச்சி அளிக்கிறது. 

சைவ சித்தாந்த மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்குத் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் சைவ சித்தாந்த ஆய்வு இருக்கை உருவாக்க வேண்டும். மாணவர்களை இக்கல்விக்கு ஈர்ப்பதில் பல்கலைக்கழகம் கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். அப்படிப்பை மூடிவிடுவது எளிது; சிக்கல்களுக்கிடையே அப்படிப்பை தொடர்வதுதான் ஆளுமைத்திறன்! 

சென்னைப் பல்கலைக்கழகம் அந்த ஆளுமைத்திறனைப் பயன்படுத்த வேண்டும். முதுகலை மெய்யியலில் சைவ சித்தாந்த படிப்பைத் தொடர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டு மாணவர்கள் மெய்யியல் கல்வியின் மேன்மையை உணர வேண்டும். அதிலும் சைவ சித்தாந்தம் என்ற மிக நுட்பமான தமிழ் மொழி – தமிழ் இனம் சார்ந்த ஆற்றல்மிகு மெய்யியலைக் கற்க ஆவல் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அவ்வழியில் ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.