ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயலும் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயலும் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவராகவும், பேரியக்கம் உறுப்பு வகிக்கும் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் தோழர் பெ. மணியரசன் அவர்களை தாக்கும் நோக்கத்தோடு, கடந்த மூன்று நாட்களாக ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் முகநூல், ட்விட்டர் ஆகியவற்றில் மிரட்டல் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். 

ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு, அதன் பொறுப்பிலுள்ள வரலாற்றுப் புகழ் வாய்ந்த 40,000க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறார். 

தெய்வத் தமிழ்ப் பேரவையின் பொறுப்பாளர்கள் கூட்டம் 13.04.2021 அன்று காலை சென்னையில் கூடி, ஜக்கி வாசுதேவின் பரப்புரை குறித்து ஆய்வு செய்தது. 

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உள்ள சில குறைபாடுகளை களைவதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அறநிலையத்துறையையே கலைப்பது - தமிழ்நாட்டுக் கோயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற ஜக்கி வாசுதேவின் பரப்புரை, சைவம் – வைணவம் – குல தெய்வ வழிபாடு உள்ளிட்ட தமிழர் ஆன்மிகத்திற்கு எதிரான கெட்ட உள்நோக்கம் கொண்டது என இக்கூட்டம் முடிவு செய்தது. 

மாறாக, சைவ சமய ஆகமங்களுக்கு எதிராக தியான லிங்கத்தை அமைத்து, ஆதியோகி என்ற பெயரால் சைவ நெறிக்கு மாறான சிவன் சிலையை நிறுவி, தலைவர் சிலை திறப்பது போல திறப்பு விழா நடத்தியதையும் தெய்வத் தமிழ்ப் பேரவைக் கூட்டம் கண்டித்தது. சைவ சமய நெறிகளுக்கு எதிராகவும், சட்ட மீறல்களிலும் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்று நடத்துமாறு வலியுறுத்துவது என்றும் அக்கூட்டம் முடிவு செய்தது. சட்ட மீறல்களில் ஈடுபட்ட ஜக்கி வாசுதேவின் மீது தமிழ்நாடு அரசு குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கூட்டம் கோரியது. 

இக்கூட்டத்தின் முடிவுகளை விளக்கி, கடந்த 13.04.2021 காலையில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தோழர் பெ. மணியரசன் பேசினார். 

இதில் ஆத்திரமடைந்த ஜக்கி வாசுதேவின் ஆட்கள் - தோழர் பெ. மணியரசன் அவர்களை தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுப்பது, முகநூல் – ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பொய்ப் பரப்புரை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அவரது தஞ்சை இல்லத்தைக் குறிப்பிட்டு அவரை வீடு புகுந்துத் தாக்கத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பி வருகிறார்கள். 

மரபுவழிபட்ட இந்து மதத்தைச் சேர்ந்த தோழர் மணியரசன் அவர்களை, டேவிட் என்றும் கிறித்துவர் என்றும் பொய்யுரைகளை வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள். அவர் பிறந்த ஊரையும், அவரது அரசியல் பயணங்களையும் குறிப்பிடத்தெரிந்த அந்த நபர்கள், இவர் கிறித்துவர் அல்லர் - இவர் பெயர் டேவிட் அல்ல என்பது மட்டும் தெரியாமல் இருக்கிறார்கள் என நம்புவதற்கில்லை! 

ஒருவர் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னால், அவர் மீது தீவிரமான பொய் பரப்புரை மேற்கொள்வது என்ற ஆரியத்துவப் பாசிஸ்ட்டுகளின் வழக்கமான உத்தியைத் தான் இவர்களும் கடைபிடிக்கிறார்கள். 

தோழர் பெ. மணியரசன் கிறித்துவர், நகர்ப்புற நக்சலைட், மதவிரோதி என்பன போன்ற கட்டுக் கதைகளைப் பரப்புவது இதேவகை உத்தியைச் சேர்ந்ததுதான்! 

இவ்வாறு பொய்யுரை பரப்பி இந்து சமூகத்திலிருந்து அவரைத் தனிப்படுத்துவது, அவரது தலைமையிலான தெய்வத் தமிழ்ப் பேரவையின் மீது அவதூறு பரப்புவது என கெட்ட நோக்கத்தோடு ஜக்கி வாசுதேவின் ஆட்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். 

அன்றாடம் மக்கள் நலம் காக்க பொதுவெளியில் வெளிப்படையாக செயல்பட்டு வரும் எங்கள் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் அவர்களுக்கு வந்துள்ள இந்த கொலை மிரட்டல்களை – அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தி, அவருக்குப் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

இதுகுறித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் மீது தமிழ்நாடு காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஆயினும், இந்தக் கொலை மிரட்டல்கள் – அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு எப்போதும் போல் சனநாயக வழியில் தலைவர் பெ. மணியரசன் அவர்களும், அவரது தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கமும் தொடர்ந்து செயல்படும் என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.  


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.