ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!" - தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!"

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


பெரும் ஆரவாரத்தோடு இந்திய நாடாளுமன்ற நடுமண்டபத்தில் 30.06.2017 அன்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்டு 2017 சூலை 1 முதல் செயலுக்கு வந்த “சரக்கு மற்றும் சேவை வரி” (ஜி.எஸ்.டி.) என்ற புதிய வரிமுறை, எல்லா முனையிலும் தோல்வி அடைந்து விட்டது.

கூட்டுறவுக் கூட்டாட்சி முறைமைக்கு (Co-operative Federalism) மகத்தான எடுத்துக்காட்டு, ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்பதால் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை குறையும், சேவைகளின் கட்டணம் குறையும், சிறுதொழில் வளர்ச்சிக்குப் புதிய ஊக்கம் கிடைக்கும், வரி ஏய்ப்பு இருக்காது என்று ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கோபுரம் ஏறி கொக்கரித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்து இந்த ஐந்தாண்டுகளிலேயே அத்தனை முனைகளிலும் படுதோல்வி அடைந்திருப்பதை 15ஆவது நிதி ஆணையமும், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையும் கூட ஒத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. 

கடந்த 28.05.2021 அன்று நடைபெற்ற சரக்கு சேவை வரி மன்றத்தின் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) 43ஆவது கூட்டம், ஜி.எஸ்.டி. வரிமுறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சான்று கூறியது. 

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு வணிகமுறை மரபுகள், வணிக வரலாறுகள் கொண்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் சரக்கு சேவை வரி என்பது, சிறுதொழில் மற்றும் சிறு வணிக நிறுவனங்களை ஊக்கப் படுத்துவதற்கோ, விலை ஏற்றத்தைத் தவிர்ப்பதற்கோ, வரி ஏய்ப்பைத் தடுப்பற்கோ பயன்படாது. மாறாக, தேசிய இன ஒடுக்குமுறைக்கான வலுவான கருவியாக மட்டுமே செயல்படும் என்று இந்த வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நாம் எச்சரித்தோம். (விரிவிற்குக் காண்க : “தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்”, கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).

ஐந்தாண்டு கடைசியில் கணக்குப் பார்த்தால், ஜி.எஸ்.டி. வரி வசூல் எதிர்பார்த்ததைவிட 4 இலட்சம் கோடி ரூபாய் குறைவாக வந்திருக்கிறது. “இந்த வரி முறைமையைப் பற்றி ஆழமாக மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பதினைந்தாவது நிதி ஆணையம் தனது இடைக்கால அறிக்கையில் எச்சரிக்கை செய்தது. 

காங்கிரசு ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டு, மோடி ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு மாநில அரசுகளை வளைத்து கடைசியாக தமிழ்நாடும் அந்த வலையில் வீழ்ந்ததற்குப் பிறகு சரக்கு சேவை வரி கொண்டு வரப்பட்டது. 

கூட்டுறவு கூட்டாட்சி அல்ல ஒற்றையாட்சியே
 
இதற்கு முன் இருந்திராத வகையில் 122ஆவது திருத்தம் என்ற ஒற்றைத் திருத்தத்தின் வழியாக ஒரே அடியில் அரசமைப்புச் சட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய இன மாநிலங்களுக்கு இருந்த அரைகுறை நிதி அதிகாரங்களும், முற்றிலும் பறிக்கப்பட்டு ஒற்றையாட்சி நிறுவப்படும் நிகழ்வாக அது அமைந்தது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற மயக்கும் முழக்கத்தின் கீழும், அந்தந்த மாநிலத்தில் இதுவரை வசூலான மாநில வரியைவிட ஆண்டுக்கு ஆண்டு 14% கூடுதல் வரித் தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியும் மாநில அரசுகள் இணங்க வைக்கப் பட்டன. 

ஐந்தாண்டு படிப்பினைகளைப் பார்த்தால், இது முற்றிலும் மோசடியான கண்கட்டு வித்தை என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற கோட்பாட்டுக்கு சரக்கு சேவை வரி மன்றம் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) அமைக்கப் பட்டிருப்பதே மிகப்பெரிய சான்று என மோடி அரசு தம்பட்டம் அடித்தது. 

அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றம் பற்றி விரிவாகக் கூறுகிறது. மேல் தோற்றத்தில் பார்த்தால், மாநிலங்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டதுபோல் தெரியும். ஆனால், சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள வாக்குகளின் மதிப்பளவு (Weightage) பிரிக்கப்பட்டிருப்பதிலும், இந்த மன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்குத் தேவை யான குறைந்தபட்ச வாக்குகளின் மதிப்பளவும் வரையறுக்கப்பட்டதிலும்தான் நுட்பமான சூழ்ச்சி இருக்கிறது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசின் சார்பில் வாக்குரிமை உள்ள இரண்டு பேராளர்கள் இருப்பார்கள். அவர்களில் இந்திய நிதியமைச்சர் இந்த மன்றத்தின் தலைவராக இருப்பார். 28 மாநிலங்களின் பேராளர்களும், சட்டமன்றத்துடன் கூடிய மூன்று ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலிருந்து 3 பேராளர்களும் இருப்பார்கள். 

அதாவது, மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 2 பேர் மட்டும் ஒன்றிய அரசின் பேராளர்களாக இருப்பார்கள். மற்ற 31 பேர் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் பேராளர்களாக இருப்பார்கள். தோற்றத்தில் பார்த்தால், மாநிலப் பேராளர்களுக்குத்தான் கூடுதல் வாய்ப்பு இருப்பது போலத் தெரியும். ஆனால், வாக்குகளின் மதிப்பளவு பிரிக்கப்பட்டிருப்பதில்தான் சூழ்ச்சியே இருக்கிறது. 

ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு பேராளர்கள்தான் என்றாலும், ஒன்றிய அரசின் வாக்கு மதிப்பு 33.3 விழுக்காடு ஆகும். மீதமுள்ள 66.7 விழுக்காடு மதிப்பு  வாக்கு என்பது 28 மாநிலங்களுக்கும், மூன்று ஒன்றியப் பிரதேசங்களுக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது, ஆனால், இந்த மன்றத்தில் எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும், அதற்கு குறைந்தளவு 75 விழுக்காடு மதிப்பளவு வாக்குகள் கிடைத்தாக வேண்டும். இல்லையென்றால், அத்தீர்மானம் நிறைவேறாது!

எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து 66.7 விழுக்காடு மதிப்பளவு. ஆனால், தீர்மானம் நிறைவேறுவதற்கோ 75 விழுக்காடு மதிப்பு தேவை! 

பல்வேறு கட்சிகள், கருத்தோட்டங்கள் உள்ள 31 மாநிலங்களும் ஒரே கருத்தில் உடன்படுவது அரிதிலும் அரிதானது. அப்படியே அனைத்து மாநிலங்களும் ஒரே ஒத்த கருத்தில் நிற்பதாக கற்பனையில் கருதிக் கொண்டாலும், அப்போதும் அவற்றின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 66.7 விழுக்காடு தான்! 

பெரும்பான்மை வாக்கு மதிப்பு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது போல தோற்றம் காட்டி, ஒன்றிய அரசு தனது கைகளில் இரத்து அதிகாரத்தை (VETO POWER) வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை நிலை! 

இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டிருக்கிற முறையே மாநிலங்களை செல்லாக் காசாக்குகிறது என இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பேராளர்கள் சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் அபாயக்குரல் எழுப்பினார்கள். 

“நீ அரிசி கொண்டு வா.. நான் உமி கொண்டு வருகிறேன்! இரண்டு பேரும் ஊதிஊதித் தின்னலாம்” என்றழைப்பதுபோல், வரி வருமானம் அதிகம் வழங்குகிற மாநிலமும், வரி வசூலில் எந்தத் திறமையுமற்று பின்தங்கியிருக்கிற மாநிலங்களும் சம வாக்கு மதிப்பு பெற்றிருப்பது வரித் திறனுள்ள மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டை தண்டிப்பதாக இருக்கிறது. இந்த நிலைமையைக் குறிப்பிட்டுத்தான் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் இந்தக் கூட்டத்தில் தெளிவாக வாதம் செய்தார். 

சரக்கு சேவை வரி மன்றத்தின் கட்டமைப்பே இந்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வாய்ப்பளிக்கிறது. அத்துடன், அதிகம் ஜி.எஸ்.டி. திரட்டித் தரும் மாநிலங்கள் தண்டிக்கப்படுவதற்கும் வழி கோலுகிறது. இதுவே கூட்டுறவு கூட்டாட்சி முறைமை என்று இதற்கு சொன்ன பளபளப்பான பரப்புரையை வீழ்த்திவிட்டது. 

இதுபோதாதென்று ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழு (GST Implementation Committee) என்ற பெயரால் முற்றிலும் அதிகாரிகளைக் கொண்ட குழுவை இடையிலேயே ஏற்படுத்தினார்கள். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் செய்யப்படும் முடிவுகளை முறையாக செயல்படுத்துவதற்கான குழுதான் இது என முதலில் கூறப்பட்டது. 

ஆனால், நடைமுறையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மேலதிகாரம் படைத்ததாக இந்தக் குழு மாற்றப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி. மன்றத்தைத் தவிர்த்து விட்டு, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடியதாக இந்தக் குழு மாறியது. ஏனெனில், ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இந்திய நிதியமைச்சகம் தனித்தனி அறிவிப்புகளாக வெளியிடத் தொடங்கி விட்டது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய செய்திகள் எல்லாம் இவ்வாறு தனித்தனியான அரசு அறிவிப்புகளாக வெளிவரத் தொடங்கியது. 

இதற்கு மேலும் இந்திய மறைமுக வரி வாரியமும், அதன் வரி ஆய்வு அமைப்பும் (Tax Research Unit) தன்னிச்சையான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் செயலுக்கு வந்தபிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஒப்புக்காக ஒப்புதலுக்கென்று வைக்கப்படுகிறது. 

இதனால்தான், “ஜி.எஸ்.டி. கவுன்சில் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பாக தாழ்த்தப்பட்டுவிட்டது” என தமிழ்நாடு நிதியமைச்சரும், பஞ்சாப் நிதியமைச்சரும் ஆவேசமாகக் குரலெழுப்பினார்கள். 

அரசமைப்புச் சட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றத்திற்கு மாநிலப் பேராளர்களிலிருந்து ஒருவர் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறுகிறது. ஆனால், ஐந்தாண்டு ஆகியும் மாநிலப் பேராளர்களிடமிருந்து இவ்வாறு ஒரு துணைத் தலைவர் தேர்வு செய்யப்படவே இல்லை! இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாட்டாண்மையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் நடப்பதற்கான நடைமுறை ஏற்பாடு இது! 

மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் 2015 - 2016ஆம் ஆண்டின் வரி வருவாயை விட 14 விழுக்காடு கூடுதலாக வரி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியின்போதுதான் பெரும்பாலான மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரி முறையை ஏற்றுக் கொண்டன. ஆனால், இந்த வரி விதிப்பு தொடங்கிய இரண்டாம் ஆண்டி லிருந்தே இழுபறி தொடங்கிவிட்டது. 

மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இயல்பான வரிப் பங்கையும் (State GST) முழுமையாகத் தராமல் இந்த 14 விழுக்காடு இழப்பீட்டையும் தராமல் இந்திய அரசு இழுத்தடிக்கத் தொடங்கியது. தமிழ்நாடு உள்ளிட்ட தொழில் வளர்ச்சியுள்ள பிற மாநில அரசுகளும் கொள்ளையாக வரியைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, இழப்பீட்டுத் தொகைக்காக கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலைமைக்கு வீழ்ந்தன. 

இதற்குமேல், சட்டப்படி வாக்குறுதி அளிக்கப்பட்ட 2021 - 2022 நிதி ஆண்டிற்கு இழப்பீட்டுத் தொகையோ, பங்குத் தொகையோ தர முடியாது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கைவிரித்தார். 

“கொரோனா பெருந்தொற்று கடவுளின் செயல். இதில் வந்த வரி வசூல் வீழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. எனவே, பங்குத் தொகையும் தர முடியாது” என்று ஆண்டவனைக் காட்டி ஆணவப் பேச்சுப் பேசினார் நிர்மலா சீத்தாராமன்! வேண்டுமானால், மாநிலங்கள் கடன எழுப்பிக் கொள்ளட்டும் என்று கைகழுவி விட்டார். 

கடந்த மே 28ஆம் நாள் (2021) நடைபெற்ற 43ஆவது மன்றக் கூட்டத்தில், பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியதற்குப் பிறகு 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசு கடன் எழுப்பி, அதனை மாநில அரசுகளுக்கு கடன் தொகையாக வழங்கும் என்றும், பின்னால் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கில் அது சரி செய்து கொள்ளப்படும் என்றும் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். பங்குத் தொகை பறிபோனது போனதுதான். கடன் தொகைக்கு தான் ஒப்புதல் வந்திருக்கிறது. 

இந்தச் சூழலில், 2022-டோடு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிறுத்தக்கூடாது, குறைந்தது மேலும் ஐந்தாண்டுக்காவது நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்து கின்றன. இந்திய அரசு அதற்கு செவிசாய்க்கும் வாய்ப்பு தெரியவே இல்லை! 

ஏனெனில், ஏற்கெனவே மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையையோ, இழப்பீட்டுத் தொகையையோ தரவில்லை என்பது மட்டுமின்றி, மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்குத் தொகையை குறைப்பதற்காக சூதான வழிமுறைகளில் இந்திய அரசு இறங்கிவிட்டது. 

122ஆவது சட்டத் திருத்தப்படி சரக்கு மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வரித் தொகையில்தான் மாநிலங்களுக்குப் பங்கு பிரித்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டு விட்டது. இதைத் தவிர்ப்பதற்காக நேரடியாக சரக்கு மற்றும் சேவை ”வரி” (Tax) என்று அழைப்பதை மாற்றி, பல்வேறு சரக்கு சேவை வரிகளுக்கு தீர்வை (Cess) என்றும், மேல் வரி (Surcharge) என்றும் பெயர் மாற்றம் செய்து, இந்திய அரசு வசூலிக்கத் தொடங்கி விட்டது. 

இந்தத் தீர்வைக்கும், மேல் வரிக்கும் “வரி” (Tax) என்ற பெயர் இல்லாததால், அதில் மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டியதில்லை என்ற கொல்லைப்புற வழியை மோடி அரசு தேர்ந்தெடுத்தது, 

மோடி தலைமையமைச்சராகப் பதவி ஏற்றதற்குப் முன்னால், 2013 - 2014 நிதியாண்டில் இவ்வாறு பல சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு இருந்த தீர்வை மற்றும் மேல் வரி என்பது 6% ஆக இருந்தது. ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்ததற்குப் பிறகு, இப்போது 2020 - 2021ஆம் நிதியாண்டில் தீர்வை மற்றும் மேல் வரி 19.9 விழுக்காடாக தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்தத் தொகை 5 இலட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்! 

மறைமுக வரியான ஜி.எஸ்.டி.யில் மட்டுமின்றி, மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டிய நேர்முக வரியிலும் இதே வகையான சூதான நடைமுறையை இந்திய அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. 

கடந்த 14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரை குறித்து விளக்கமளித்த இப்போதைய 15ஆவது நிதி ஆணையம், தனது இடைக்கால அறிக்கையில் இதனை தெளிவுபடுத்தியது. 

14ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை வரலாறு காணாத அளவில், 42 விழுக்காடாக உயர்த்தி விட்டது எனக் கூறப்பட்டது. ஆனால், மாநிலங்களுக்குப் பங்கு தர தேவையில்லாத தீர்வை மற்றும் மேல் வரியைக் கழித்து விட்டால், ஒட்டுமொத்த வரி வசூலில் மாநிலங்களின் பங்காகக் கிடைத்தது வெறும் 32.4 விழுக்காடு தான் என 15ஆவது நிதி ஆணையம் விளக்கியது. 

இவ்வாறு வரிக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு விட்டதால் தமிழ்நாடு ஆண்டுதோறும் 88 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பங்கை இழந்து வருகிறது என்று சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறியிருப்பது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாகும். 

ஜி.எஸ்.டி. வரி வருமானமும், நேரடி வரி வருமானமும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும் முறையே தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் வகையில் அமைந் திருக்கிறது. சிறிய மாநிலங்களை மட்டுமல்ல, இந்தி மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான் ஆகிய இந்தி மாநிலங்கள் அளிக்கும் வரி வருவாய் இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 14.6 விழுக்காடு மட்டுமே ஆகும். ஆனால், அந்த மாநிலங்கள் பெறுகிற பங்குத் தொகையோ மொத்த வரி வருவாயில் 41.86 விழுக்காடு (2020 - 2021 ஒன்றிய பட்ஜெட் புள்ளி விவரங்கள்) ஆகும். அதேநேரம், தமிழ்நாடு பெறுகிற பங்குத் தொகை 4.189 விழுக்காடு மட்டுமே ஆகும். 

மக்கள் தொகை என்ற கணக்கின்படி பார்த்தாலும், மேற்சொன்ன இந்தி மாநிலங்களின் மக்கள் தொகை இந்திய நாட்டு மக்கள் தொகையில் 36.7 விழுக்காடு தான்! தமிழ்நாட்டு மக்கள் தொகையோ ஏறத்தாழ 6 விழுக்காடாகும். வரி வசூலில் முதல் வரிசை மாநிலம் தமிழ்நாடு என்பது சொல்லத் தேவையில்லை. 

வரி வசூலில் மிகப் பின்தங்கியிருக்கிற இந்தி மாநிலங்களுக்கு அவர்கள் வசூலிப்பதைவிட கிட்டத் தட்ட மூன்று மடங்கு வரிப் பங்கு அளிக்கப்படுகிற தென்றால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வர வேண்டிய தொகையைப் பிடுங்கி இந்தி மாநிலங்களைக் கொழுக்க வைக்கிறார்கள் என்பதுதானே பொருள்! 

இது ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு மட்டுமல்ல, கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் அநீதிதான்! ஆயினும், இவ்வளவு மிகைத் தொகை அம்மாநிலங் களுக்கு ஒதுக்கப்பட்ட பின்னும் அவற்றையெல்லாம் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் செலவு செய்து விட்டார்களே தவிர முன்னேறிய மாநிலங்கள் வரிசைக்கு வந்தபாடில்லை. 

வரி வசூலிலோ, தொழில் மற்றும் வேளாண்மை வளர்ச்சியிலோ எந்தப் பங்களிப்பும் செய்யாமல், உட்கார்ந்த இடத்தில் இவ்வளவு தொகை கிடைக்கும் போது, அவர்கள் ஏன் முன்னேற முயற்சி செய்யப் போகிறார்கள்? சாதிச் சண்டையிலும், மதச் சண்டை யிலும் குழந்தைகளை வல்லுறவு கொண்டுக் கொல்வ திலும் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். 

அதற்குத் தமிழ்நாடு பலியிடப்படுகிறது! 

இவை அனைத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பானது, ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலுள்ள நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டே செயல்படுகிறது. 

எல்லா நாடுகளிலும் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே வரிப் பங்கீட்டில் முரண்பாடு கள் எழுவது இயல்பு. ஆயினும், பல்வேறு நாடுகளில் அச்சிக்கல்கள் ஏதோவொரு வகையில் இணக்கமாகத் தீர்க்கப்படுகிறது. இவ்வாறு ஜி.எஸ்.டி. ஓரளவுக்கு வெற்றிகரமாக செயல்படும் நாடுகளை உற்று நோக்கினால் அவை பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள் அல்ல என்பது தெளிவாகும். 

இன்றைக்குள்ள நவீன பொருளியல் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு என்பது, “நடத்தைப் பொருளியல்” (The Behavioral Economics) என்ற புதிய போக்காகும். இந்த புதிய வகைப் பொருளியல் கோட்பாட்டிற்காக 2017ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலெ கூறுவது கவனிக்கத்தக்கது. 

“சந்தைப் பொருளியல் உறவில் பகுத்தறிவு வழிப் பட்ட முடிவுகளைவிட ஒரு தரப்பின் மீது இன்னொரு தரப்பு வைக்கிற நம்பிக்கையின் மீதுதான் (Trust) பொருளியல் உறவு கட்டப்படுகிறது” என பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் ரிச்சர்ட் தாலே விளக்கிக் கூறுகிறார். 

தனிநபர் ஊடாட்டமுள்ள சந்தையைவிட பல தேசிய இனங்களைக் கொண்ட கூட்டுச் சந்தையில் இரு தரப்பினருக்கு இடையே இந்த நம்பிக்கை மிக முக்கியமானது. 

ஆனால், அறிவிக்கும்போதே ஒற்றைச் சந்தை என்ற எக்காளத்தோடுதான் ஜி.எஸ்.டி வரி முறையே அறிவிக்கப் பட்டிருக்கிறது. மிக நெளிவு சுளிவான முதிர்ச்சியான சனநாயகப் பண்புள்ள பல தேசிய இன நாடுகளில் கூட கூட்டாட்சி முறை தோல்வி அடைந்து விட்டதைப் பார்க்கிறோம். 

மெய்நிலை இவ்வாறு இருக்க, ஒன்றிய அரசு மேலாதிக்கம் செய்யும் ஜி.எஸ்.டி. வரிமுறை பல்தேசிய இன நாடான இந்தியாவிற்குப் பொருந்தவே பொருந்தாது. இதைத்தான் ஒன்றிய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கைக் குலைவு எடுத்துக்காட்டுகிறது. 

நடந்து முடிந்த 43ஆவது சரக்கு சேவை வரி மன்றக் கூட்டம், இந்த உண்மையை ஐயத்திற்கு இடமின்றி புலப்படுத்திவிட்டது! 

ஜி.எஸ்.டி.யின் கூட்டுறவுக் கூட்டாட்சி முறை என்ற அடிப்படையான நம்பிக்கையே தகர்ந்துவிட்ட பிறகு, ஜி.எஸ்.டி. வரிமுறை நீடிப்பது ஆபத்தானது. 

விலைவாசியும் குறையவில்லை
 
ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தும்போது, மோடி அரசு அளித்த இன்னொரு நம்பிக்கை “வரி மேல் வரி” என்ற பழைய முறையை நீக்கி, ஜி.எஸ்.டி. செயலுக்கு வரும்போது “விலைவாசி குறையும்” என்பதாகும். 

ஒரு பொருள் அல்லது சேவை உருவாகும் இடத்திலிருந்து பல கைகள் மாறி நுகர்வோரை அடையும்போது, இந்த சங்கிலித் தொடரில் முதலாமவர் செலுத்திய வரித்தொகை இரண்டாமவரிடம் கழித்துக் கொள்ளப்படும் என்ற முறை ஜி.எஸ்.டி.யில் உள்ளது. ஆயினும், நுகர்வோரை வந்தடையும்போது அதிகபட்ச சில்லறை விலையில் (MRP), அது பிரதிபலிக்கவில்லை. இதனை 15ஆவது நிதி ஆணையமே குற்றச்சாட்டாகக் குறிப்பிடுகிறது. “வரி மேல் வரி” இல்லை என்பதன் பலன், நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை. விலையேற்றம் தொடர்கிறது. 

இந்த வகையிலும் ஜி.எஸ்.டி. வரிமுறை தோல்வி அடைந்துவிட்டது! 

சிறுதொழில்களை அழித்த ஜி.எஸ்.டி.
 
ஜி.எஸ்.டி. வரி செயலுக்கு வந்தபிறகு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நொடித்து, மூடப்பட்டு வருவதை சென்னை, திருவள்ளூர், திருப்பூர், கோவை, மதுரை என்று திரும்பிய பக்கமெல்லாம் பார்க்கிறோம். 

பெரிய நிறுவனங்கள் பெரும் செலவு செய்து, விளம்பரங்கள் வழியே தங்களது  வணிக முத்திரையை (பிராண்ட்) மக்கள் மனங்களில் ஏற்றி விடுகின்றனர். மேலே குறிப்பிட்ட “நடத்தைப் பொருளியல்” விதிகளின்படி, விளம்பரங்களை நம்பும் நுகர்வோர் அந்தப் பொருட்களின் மீதும் - சேவைகளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். அது அந்த நிறுவனங்களின் வணிகத்தைப் பெருமளவு உயர்த்துகிறது. 

அதே தரத்தில், அதே பொருளை உற்பத்தி செய்யக்கூடிய சிறுதொழில் முனைவோர் இவ்வாறு தங்கள் தயாரிப்புகளை விளம்பரங்களின் மூலம் நிலைநிறுத்த முடிவதில்லை. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே சதவிகித ஜி.எஸ்.டி. தான்! இச்சூழலில், செலவு செய்து விளம்பரங்களின் மூலமாக சந்தையில் நிலைபெறும் பெரிய நிறுவனங்களிடம் தங்கள் சந்தையையும் விட்டுவிட்டு, சிறுதொழில் முனைவோர் வெளியேறும் சூழலே நிலவுகிறது. 

போராடி சந்தையில் நிற்க முனைகிற சிறுதொழில் முனைவோர் வேறு வழியில்லாமல் ஆள்குறைப்பு செய்கிறார்கள். முடிந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு தொழிலை ஓட்டுகிறார்கள். அதில் முடியாதவர்கள் தங்கள் தொழில் உற்பத்திக் கருவிகளை “காயலாங்கடைக்கு” விற்றுவிட்டு வெளியேறுகிறார்கள். 

மதுரையிலும், ஈரோட்டிலும் இன்னும் பல நகரங்களிலும் விசைத்தறி உரிமையாளர்கள் இவ்வாறு தங்களது விசைத்தறிகளை வந்தவிலைக்கு “காயலாங் கடைக்கு” விற்றுவிட்டு தொழிலிலிருந்து வெளியேறி யதைத் தமிழ்நாடு கண்டது. 

ஜி.எஸ்.டி. வரிக்கான பலவிதமான படிவங்களை இணையவழியில் நிரப்பி அனுப்புவதற்கே தொழில் நுட்பப் பணியாளர்களை கூடுதல் ஊதியம் கொடுத்து சிறுதொழில் முனைவோர் அமர்த்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதிகாரிகளிடம் விளக்கம் சொல்வதற்கே காலம் விரையமாகிறது. மன உளைச்சலும் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. வந்தபிறகு சிறுதொழில் முனை வோர் அன்றாடம் நெருப்பில் நடந்து செல்கிறார்கள். 

வரி ஏய்ப்பு தொடர்கிறது
 
ஜி.எஸ்.டி. வந்தவுடன் எல்லோரும் வரி வலையத் திற்குள் வந்துவிடுவார்கள், எல்லாம் தொழில்நுட்ப மயமாகி இருந்தால் வரி ஏய்ப்பும் இருக்காது - அதிகாரிகளின் ஊழலும் பெருமளவு குறையும் என்றார்கள். 

ஆனால், தயாரிப்பு மையங்களிலிருந்து, மொத்த வணிகத்திலிருந்து கீழ்நிலையில் வரையிலும் கணக்கில் வராத இணைப் பொருளாதாரம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை 2018 - 2019 ஆம் ஆண்டின் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (CAG Report) எடுத்துக்காட்டியது. ஜி.எஸ்.டி. வந்ததனால், வரி ஏய்ப்பு ஒன்றும் குறையவே இல்லை என்று அந்த அறிக்கை உறுதிபடக் கூறியது. 

ஊழல் அதிகாரிகளின் கடைக்கண் பார்வை இல்லாமல், இவ்வாறான கணக்கில் காட்டாத இணைப் பொருளா தாரம் நடக்கவே முடியாது. ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு வரி ஏய்ப்பும் குறையவில்லை; ஊழலும் குறையவில்லை! 

ஜி.எஸ்.டி.யைக் கைவிடுக!
 
எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்ட, தேசிய இனங்களை நசுக்கி ஒற்றை அதிகாரத்தை நிறுவுகிற ஜி.எஸ்.டி. வரிமுறையைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது! 

2021 சூலை மாதம் நடைபெறவிருக்கிற சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியைக் கைவிடுவது, ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கலைப்பது என்பதுதான் அந்த மன்றம் இந்திய அரசுக்கு முன்வைக்க வேண்டிய பரிந்துரையாக இருக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.