ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வழக்காடுவதே பயங்கரவாதமா?

 வழக்காடுவதே பயங்கரவாதமா?

==========================

தோழர் கி. வெங்கட்ராமன்,

பொதுச்செயலாளர், 

தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

==========================



குசராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, 2002ஆம் ஆண்டில் - ஆட்சியாளர்களின் நெருக்கமான துணையோடு காவல்துறையின் ஒத்துழைப்போடு, 2000க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் மதப் படுகொலை செய்யப்பட்டதை உலகமே அறியும். 


இக்கொலைவெறித் தாண்டவத்தின் ஆகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இசுலாமியக் குடியிருப்பு ஒட்டுமொத்தமாக தீக்கிரையாக்கப்பட்டு, 68 பேர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதும், எப்படியோ தப்பி வந்த முசுலீம் கர்ப்பிணி பெண் வயிறு கிழிக்கப்பட்டு அதன் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிசு துள்ளத்துடிக்க நெருப்பில் வீசப்பட்டதும் உலகத்தையே உலுக்கியது. 


இதுகுறித்து, நீதி கிடைக்காத வண்ணம் சாட்சிகளை மிரட்டி மாற்றியும், ஒட்டுமொத்தக் காவல்துறை விசாரணை அறிக்கையையே திரித்து எழுதியும், குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டார்கள் என்பதையும் நாடறியும். 


இந்த குல்பர்க் சொசைட்டி கொலைவெறியாட்டத்தில், சிக்கி மடிந்த அன்றைய காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பார்சன் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா பார்சன் ஜாப்ரி மிகுந்த மன உறுதியோடு, விடப்பிடியாக கடந்த 16 ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகிறார். 


ஜக்கியா ஜாப்ரிக்குத் துணையாக, உலகறிந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் உச்ச நீதிமன்றம் வரை இவ்வழக்கை நடத்தினார். 


கடந்த 24.06.2022இல், இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏ.என். கன்வில்கர், தினேஷ் மகேசுவரி, சி.டி. இரவிக்குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து, அன்றைய குசராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயரதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது. 


நீதிக்கான போராட்டம் இவ்வாறு தோல்வியில் முடிவது சட்டப்போராட்டத்தில் புதிதல்ல. ஆனால், இதுவரை வரலாறு கண்டிராத வகையில், பாதிக்கப்பட்டோருக்காக உறுதியாக நின்று வழக்காடிய மனித உரிமைச் செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டும், மனசாட்சியோடு உண்மையைக் கூறிய அன்றைய கூடுதல் டி.ஜி.பி. சிறீக்குமாரும் குற்றவாளிகளாக்கப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள். 


எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டதுபோல் நடந்தேறி இருக்கிறது. 24.06.2022 அன்று காலை உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்குகிறது. அன்று மதியமே உள்துறை அமைச்சர் அமித்சா, “குசராத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தித் தந்த சதிகாரர்கள் தீஸ்தாவும், சிறீக்குமாரும் சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள்” என்று செய்தியாளர்களிடத்தில் கூச்சல் எழுப்புகிறார். அன்று இரவே ஆமதாபாத் நகரக் காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு ஆய்வாளர் தீஸ்தாவின் மீதும் மற்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்கிறார். 


அடுத்தநாள், 25.06.2022 அன்று, பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மும்பையில் வசிக்கும் தீஸ்தா செதல்வாட் வீட்டிற்குள் புகுந்து தரதரவென இழுத்து வந்து, காவல் வண்டியில் ஏற்றுகின்றனர். இரவோடு இரவாக அகமதாபாத் கொண்டு வரப்பட்டு, அவரை காவல்துறை காவலில் 14 நாட்களுக்கு அனுப்புகிறார்கள். 


தீஸ்தா உள்ளிட்டோர் மீது “போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அப்பாவிகள் மீது குற்றச்சாட்டு புனைந்து அவர்களைக் கொலைக் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்த சதி செய்தது” என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு!


அதற்கான முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) எது என்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தான் என்கிறது காவல்துறை ஆவணம்! 


இதுவரையிலும் எந்தத் தீர்ப்பிலும் கூறப்படாத வகையில், வழக்குத் தொடுப்பவர்களைக் கிரிமினல் குற்றவாளிகளாக இத்தீர்ப்பு சித்தரிக்கிறது. குசராத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் மீது கொண்ட தீராத வன்மத்தின் காரணமாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் புனைந்து – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தரும் போர்வையில், நடந்த குற்றத்தை அரசியலாக்கி, நெருக்கிப் பணிந்துவிடாமல் பார்த்துக் கொண்டவர்தான் தீஸ்தா என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளை இவ்வாறு தவறாகப் பயன்படுத்திய அனைவரும் சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள் என்றும் நீதிபதிகள் தீர்ப்புரையின் ஊடாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். 


தீர்ப்புரையின் இந்த வாசகங்கள்தான் வழக்குக்கான முதல் தகவல் அறிக்கை! 


இதிலும்கூட, பயங்கரவாதக் குற்றச்சாட்டு எதுவும் இல்லை! புனையப்பட்ட வழக்கிலும் இல்லை! ஆனால், தீஸ்தாவைக் கைது செய்வதற்கு பயங்கரவாதத் தடுப்புப் படை அனுப்பப்பட்டு, இதனை “தேசியப் புலனாய்வு முகமை” (என்.ஐ.ஏ.) கையாள்கிறது என்றால், மாநிலக் காவல்துறை அதிகாரங்களைக்கூட காலில் போட்டு மிதித்துவிட்டு, எல்லாவற்றையும் “நாட்டுக்கு எதிரான பயங்கரவாத சதி” என சித்தரித்து, இந்திய அரசே அவ்வழக்குகளை நடத்துவது என்ற போக்கின் வெளிப்பாடுதான் இது! 


நாடு முழுவதுமுள்ள மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகங்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோர் இந்த அநீதியைக் கண்டித்துள்ளனர். 


இந்திரா காந்தி அவசரநிலையைப் பிறப்பித்த அதே சூன் 25இல்தான், இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலும் அரங்கேறி இருக்கிறது. 


மோடி ஆட்சியில், சட்டத்தின் ஆட்சிக்கு வேலை இல்லை! அறிவிக்கப்படாமலேயே அவசரநிலை செயல்படுகிறது என்பதற்கான சான்றுதான் தீஸ்தா செதல்வாட் – சிறீக்குமார் ஆகியோரின் கைது! 


ஆரியத்துவ பாசிச மோடி ஆட்சியின், இந்த அநீதியான கைதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! அவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்! 


காலவரம்பற்று நீடித்து நிற்கும் என்று கருதப்பட்ட இந்திரா காந்தியின் அவசரநிலை பேயாட்சியை குறுகிய காலத்திலேயே மக்கள் போராட்டம் முறியடித்தது! மோடியின் அறிவிக்கப்படாத அவசரநிலையும் அவ்வாறே முறியடிக்கப்படும்! 


( இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2022 சூலை இதழின் ஆசிரியவுரையாக எழுதப்பட்டது).



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.