காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
காவிரி ஆணையக் கூட்டத்தில்
தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா?
முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
====================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=====================================================
தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் – அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு 02.01.2022 அன்று புதுதில்லி சென்று ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் அவர்களைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை அனுமதி பற்றி விவாதிக்கக் கூடாது என்றும் அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு துரைமுருகன் குழுவினரிடம் ஒன்றிய அமைச்சர் செகாவாத் மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்திய அரசின் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளதாகப் பதில் அளித்தார். செகாவாத்தின் இப்பதில் பற்றி துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறி அது வெளியாகி உள்ளது. அந்த அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்று தமிழ்நாடு சட்ட வல்லுநர்கள்- கூறியுள்ளதாகத் துரைமுருகன் பதில் மறுப்புக் கூறியதற்கு, வரும் ஆணையக் கூட்டத்தில் அந்த சட்ட விவரங்கள் பற்றி விவாதியுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். இச்செய்தியையும் துரைமுருகன் கொடுத்துள்ளார்.
அப்படி என்றால் 05.07.2022 அன்று புதுதில்லயில் நடைபெறும் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்குமா என்ற வினா எழுகிறது.
காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை பொருள் நிரலில் (அஜண்டாவில்) சேர்க்கப்பட்டால் அக்கூட்டத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எடுத்த நிலைபாட்டைக் கைவிட்டு விட்டாரா? அவ்வாறு கைவிட்டால் அதற்கான புதிய காரணங்கள் என்ன?
ஒரு காரணத்தைச் சொல்கிறார் துரைமுருகன். காவிரி ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதித் தீர்மானத்தை தமிழ்நாடு தோற்கடித்துவிடும்; அந்த அளவு தமிழ்நாட்டுக்கு ஆணையத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ள பொறுப்பாளர்கள் ஒன்பது பேர் மட்டுமே. இந்த ஒன்பது பேரில் இந்திய அரசு அதிகாரிகள் நான்கு பேர், ஆணையத்தின் தலைவரையும் சேர்த்தால் ஆக இந்திய அரசு சார்பானவர்கள் ஐந்து பேர்! கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களுக்கு தலா ஒரு வாக்கு!
இந்திய அரசுதான் மேக்கே தாட்டு அனுமதிப் பொருளை ஆணையக் கூட்டத்தில் முன்வைக்கிறது. இந்திய நீராற்றல் துறை அமைச்சரும் துரைமுருகனிடம் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு கலந்து கொண்டு விவாதிக்க வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசு அதிகாரிகள் 5 + கர்நாடக வாக்கு 1 ஆக மொத்தம் 6 வாக்குகள் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாகக் கிடைத்து விடும்.
கேரளத்தின் 1 வாக்கு மேக்கேதாட்டுக்கு எதிராகப் போட்டாலும் அத்துடன் + தமிழ்நாடு + புதுவை சேர்த்தால் மூன்று வாக்குகள் மட்டுமே நமக்கு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு ஆணையத்தில் பெரும்பான்மை உள்ளது என்று எந்தக் கணக்கை வைத்துத் துரைமுருகன் சொன்னார்?
வாக்கெடுப்பு நடத்துவதற்கான அடிப்படைக் கோரம் 6 பேர்! எனவே தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அதிகாரிகள் வெளி நடப்புச் செய்து விட்டாலோ அல்லது கூட்டத்தைப் புறக்கணித்தாலோ – ஆணையக் கூட்டத்தை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான அடிப்படைக் “கோரம்” (குறைந்தபட்ச கூட்ட உறுப்பினர்) தேவையை இந்திய அரசும் கர்நாடகமும் நிறைவு செய்ய முடியும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது என்று செகாவாத் சொன்னதாக துரைமுருகன் கூறுகிறார். உண்மையான மனநிலையில் அவர் கூறினால், தமிழ்நாடு அரசு வராவிட்டாலும் ஆணையக் கூட்டத்தை நடத்தி அணைப் பற்றி பேசுவோம் என்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் எந்த துணிச்சலில் சொல்கிறார்?
இந்திய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் கைவிரித்து விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது. மேக்கேதாட்டை எப்படித் தடுக்கப்போகிறது என்பதை முதலமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
Leave a Comment