ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தமிழர் மரபு வேளாண்மை மாநாடு" பெண்ணாடம் – இரத்தின மகால் – 30.07.2022

 "தமிழர் மரபு வேளாண்மை மாநாடு"

பெண்ணாடம் – இரத்தின மகால் – 30.07.2022

மாநாட்டுத் தீர்மானங்கள்!



==================================


தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை (Organic Framing Policy) அறிவிக்கக் கோரி தமிழக உழவர் முன்னணி நடத்திய “தமிழர் மரபு வேளாண்மை மாநாடு” – 30.07.2022 மாலை பெண்ணாடத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 


தீர்மானம் - 1

-----------------------

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை (Organic Framing Policy) அறிவிக்க வேண்டும்!


“நவீனம்”, “வளர்ச்சி” என்ற பெயரால் நம்மீது திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி உழவர்களைக் கடனாளியாக்கியது. வேளாண்மையை விட்டு உழவர்களை வெளியேற்றி வருகிறது. நீர், நிலம், காற்று நஞ்சானது. உண்ணும் உணவிலும் நஞ்சு கலந்தது.  


வீரிய வித்துகள் என்ற பெயரால் உழவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒட்டுவிதைகள் வெள்ளத்தையோ வறட்சியையோ நோய்களையோ தாங்க முடியாத நோஞ்சான் பயிர்களையே உருவாக்கின. 


வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கும், பசுமைப் புரட்சியின் அழிவிலிருந்து வேளாண்மையைத் தற்காத்துக் கொள்ளவும் தமிழர் மரபு வேளாண்மைக்கு மாற வேண்டிய தேவை உழவர்களுக்கு ஏற்பட்டது. 


வள்ளுவர் முதல் வள்ளலார் வரை சொல்லிச் சென்ற உயிர்ம வேளாண்மையை – நமது தமிழ் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்த் தெடுத்த ஐந்திணைகளுக்கு ஏற்ற தற்சார்பு வேளாண்மையை - மீட்டெடுக்க வேண்டிய தேவையை முற்போக்கு உழவர்கள் உணரத் தொடங்கினார்கள். 


இந்த முயற்சியில் தமிழ்நாட்டு உழவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் வேளாண் பேரறிஞர், மரபு வேளாண்மைப் போராளி ஐயா நம்மாழ்வார் விளங்கினார். அவருடைய வழிகாட்டுதலில் தமிழர் மரபறிவைக் கொண்டு உயிர்ம வேளாண்மை முயற்சிகள் இன்று விரிவடைந்துள்ளன. 


ஆயினும், அரசின் பங்கேற்பும் ஆதரவும் இருந்தால்தான் இந்தத் தற்சாற்பு வேளாண்மையை பெருமளவு பாதுகாத்து வளர்க்க முடியும். இன்று சூழல்பேரழிவும், புவி வெப்பமாதல் சிக்கலும், உழவர் தற்கொலையும் அச்சுறுத்திக் கொண்டுள்ள சூழலில், உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண் கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.


வேளாண்மையை இலாபகரமான தொழிலாகவும், வளங்குன்றா வேளாண்மையாகவும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவித்து செயல்படுத்த வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தவே தமிழக உழவர் முன்னணி தமிழர் மரபு வேளாண்மை மாநாட்டை நடத்துகிறது.


வேளாண்மையை வளம் குன்றாத-இலாபகரமான-மதிப்புமிக்க தொழிலாகப் பாதுகாப்பதற்கு, கிராமங்களில் இருந்து நகரம் நோக்கிய புலம்பெயர்வை மட்டுப்படுத்துவதற்கு, நிலத்தின் உயிர்ம வளத்தையும், உற்பத்தித் திறனையும் வளர்ப்பதற்கு, உழவர் தற்சார்பையும் அதன் வழியாக தமிழ்நாட்டின் தற்சார்பையும் உறுதிப்படுத்துவதற்கு, நிலம், நீர், காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு நஞ்சில்லா உணவும் வேளாண் உற்பத்திப் பொருட்களும் கிடைப்பதற்கு, உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிப்பு மிகவும் தேவையாகும். 


தமிழர் மரபு அறிவில் காலூன்றி நின்று உயிர்ம வேளாண்மை தொடர்பான நவீன அறிவியல் அறிவையும் ஏற்று வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் உயிர்ம வேளாண்மைக் கொள்கை அமைய வேண்டும்.


வேளாண்மையோடு ஆடுமாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு, தேனி வளர்ப்பு போன்ற வேளாண்மைத் துணைத் தொழில்களும் ஒன்றிணைந்த திட்டமாக உயிர்ம வேளாண் கொள்கை இருக்க வேண்டும். 


பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழின மரபு அறிவு இந்த மண்ணோடு இயைந்து உருவாக்கிய மரபு விதைகளை உற்பத்தி செய்யும் விதைகிராமங்கள், விதைவங்கிகள், விதைக்கூட்டுறவு அமைப்புகள், தமிழர் மரபு வேளாண்மை சுயஉதவிக் குழுக்கள் அவற்றிற்குரிய உயிர்ப்பு நிதி, உயிர்ம வேளாண் விளை பொருட்களை சேமித்துப் பாதுகாத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கான தற்சார்பு கட்டமைப்புகள், உயிர்ம விளைபொருள் சான்றளிப்பு, உயிர்ம வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை பாதுகாக்கப்பட்ட வள ஆதாரங்களாக அறிவித்தல், பன்மைப் பயிர் சாகுபடி, அரசு விழாக்களில் மரபு உணவுப்பண்டங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் புவிகாப்பிலும் பங்காற்றுவதால் தமிழர் மரபு விளை பொருட்களுக்கு மதிப்புக் கூட்டு விலை என்ற வகையில் கூடுதல் கொள்முதல் விலை வழங்குதல், திணை சார்ந்த தமிழர் மரபு வேளாண்மையை பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை பாடத்திட்டத்தில் சேர்த்தல், இரசாயன வேளாண்மையிலிருந்து தமிழர் மரபு உயிர்ம வேளாண்மைக்கு மாறும் உழவர்களுக்கு குறைந்தது முதல் மூன்றாண்டுகளுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடு, உள்ளிட்டவை அரசின் உயிர்ம வேளாண் கொள்கையில் உள்ளீடுகளாக விளங்க வேண்டும்.


உயிர்ம வேளாண் கொள்கையை உறுதியாகச் செயல்படுத்துவதற்கு உரிய நிதியும் அதிகாரமும் பெற்ற உயர்மட்ட உயிர்ம வேளாண்மை வாரியமும் ஊராட்சி வரையிலும் அதற்குரிய கீழ்மட்ட அமைப்புகளும் நிறுவப்பட வேண்டும்.


இவ்வாறான உயிர்ம வேளாண் கொள்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! 


தீர்மானம் – 2

------------------------

அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச இலாபத்துடன் கூடிய அடிப்படை ஆதார விலையை இந்திய அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும்!


இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து வரும் வேளாண் விளைபொருள்களுக்கான அடிப்படை ஆதரவு விலை (Minimum Support Price – MSP) வேளாண்மையை மேலும் மேலும் இழப்பை சந்திக்கும் தொழிலாக அழுத்தி வருகிறது. 


வேளாண்மைக்கும் உழவர்களுக்கும் எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்தும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக அறிவிக்கக் கோரியும்தான் வீரம்செறிந்த உழவர்களின் தில்லி முற்றுகைப் போராட்டம் நடந்தது. 


இறுதியில் வேறுவழியின்றி இக்கோரிக்கைகளை ஏற்று, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி இம்மூன்று சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்ததோடு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை கொள்கை அறிவிப்பாக அறிவிப்பதாகவும் வாக்குறுதி வழங்கினார். அதன்பிறகே, அப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. 


ஆனால், இன்றுவரை இந்திய அரசு ஏற்றுக் கொண்டபடி குறைந்தபட்ச ஆதரவு விலை, சட்ட உரிமையாக அறிவிக்கப்படும் அறிகுறியே ஏதுமில்லை! இது இந்தியா முழுவதிலுமுள்ள உழவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. 


எடுத்துக்காட்டாக, இந்த சூன் மாதம் இந்திய அரசு பல்வேறு வேளாண் விளை பொருள்களுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை இந்திய அரசு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாது என்ற வலுவான ஐயத்தை ஏற்படுத்துகிறது. 


தமிழ்நாட்டில் நல்ல பாசன வசதியுள்ள பகுதிகளிலேயே ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு அடிப்படை செலவு ரூபாய் 1,937 வருகிறது என்று எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி மிகக்குறைந்த அடிப்படை விலை நெல்லுக்குக் குவிண்டாலுக்கு 2,905 ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசு அறிவித்திருப்பதோ 2,040 ரூபாய் தான்! 


இதே கணக்கீட்டின்படி பருத்திக்கு 6,561 ரூபாய்க்கு மாறாக, 6,080 ரூபாய் கொள்முதல் விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 


எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி நேரடி உற்பத்தி செலவு + உழவர்களின் குடும்ப உழைப்புக்கான கூலி மதிப்பு + உழவுக் கருவிகள் மற்றும் நிலத்தின் வளத்தேய்மானம், முதலீட்டுக்கான வட்டி உள்ளிட்ட மறைமுகச் செலவுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதற்கு மேல் குறைந்தபட்ச இலாபமாக 50% வைத்து (C2 + 50%) என்ற வகையில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price) சட்டமாக அறிவிக்க வேண்டும். இந்தக் குறைந்தபட்ச விலைக்குக் கீழ் அரசோ, தனியாரோ கொள்முதல் செய்தால், அது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! 


இதற்கேற்ப தமிழ்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கும் வகையில் அரசும், தனியாரும் தமிழ்நாட்டில் விளையும் வேளாண் விளைபொருட்களுக்கே முன்னுரிமை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது! 


தீர்மானம் – 3

------------------------

உழவர்களுக்கு நேரடி வருமானம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உழவர் வருவாய் ஆணையத்தை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும்!


பெருமளவு நிலக்குவியல் உள்ள அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் கூட வேளாண் நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசுகள் நேரடி வருவாய் வழங்கி வருகின்றன. 


எடுத்துக்காட்டாக, பிரிட்டனின் எலிசபெத் இராணி கூட வேளாண் மானியமாக ஆண்டுக்கு 6 கோடியே 15 இலட்சம் ரூபாய் பெறுகிறார். அமெரிக்க பருத்தி உற்பத்தியாளர்கள் 300 கோடி டாலர் மதிப்புள்ள பருத்தியை விளைவித்துக் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக 390 கோடி டாலர் வேளாண் மானியமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். 


இந்தியாவில் தெலுங்கானாவில் “ரயத்துபந்து” என்ற பெயராலும், ஒடிசாவில் “காலியா” என்ற பெயராலும் உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கும் திட்டங்கள் செயலில் உள்ளன. தெலுங்கானவில் கடந்தாண்டு இத்திட்டத்தின்கீழ் ஏக்கருக்கு 10,000 ரூபாய் நேரடி வருவாயாக வழங்கப்பட்டது. ஒடிசாவிலும் இவ்வாறான தொகை ஒவ்வொரு ஆண்டும் 2 தவணையாக வழங்கப்படுகிறது. 


இந்தியாவிலேயே உழைத்துக் கொடுக்கும் உழவர்கள் கடனாளிகளாக இருப்பதில் முதல் வரிசை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதன் காரணமாக, உழவர்கள் வேளாண்மையிலிருந்து வெளியேறும் போக்கு, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் விரைவாக நடந்து வருகிறது. இந்த விபரீதப் போக்கைத் தடுத்து நிறுத்தி, உழவர்களைப் பாதுகாக்க வேண்டுமானால், இதே போன்ற நேரடி வருவாய்த் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்! 


உழவர்களுக்கு, ஏக்கருக்கு ரூபாய் 12,000 வீதமும், நிலமற்ற உழவுத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு 12,000 ரூபாய் வீதமும், நேரடி வருவாயாக வழங்க வேண்டுமென்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கோருகிறது! முதல் கட்டமாக, 15 ஏக்கர் நிலவுடைமை வரையிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம். இவ்வாறான நேரடி வருவாய்த் திட்டத்தின் வழியாக ஆண்டுக்கு 27,840 கோடி ரூபாய் தான் செலவாகும். 


தமிழ்நாட்டில் வேளாண்மையைச் சார்ந்திருக்கிற 1 கோடியே 50 இலட்சம் வேளாண் சார் மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரம் வழங்குவதாக இத்திட்டம் அமையும். கிராமங்களை விட்டு உழவர்கள் நகரங்களுக்குப் புலம் பெயர்வதை மட்டுப்படுத்தவும் பேருதவியாக இருக்கும். 


எனவே, உழவர்களுக்கு மேற்சொன்ன நேரடி வருவாய் வழங்கும் திட்டத்தை அறிவித்து, இவற்றைச் செயல்படுத்தவும் அவ்வப்போது மேம்படுத்தவும் உழவர் வருவாய் ஆணையம் (Farmers Income Commission) ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது! 


மாநாட்டின் நேரலைக் காட்சிகள் 

https://www.facebook.com/thamizhagauzhavar/videos/577385437203858


==============================

செய்தித் தொடர்பகம்,

தமிழக உழவர் முன்னணி

==============================

பேச: 9443904817, 9585573610, 9443291201.

==============================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.