ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உயிர்ம வேளாண்மைக் கொள்கை கோரி திருச்சியில் எழுச்சியுடன் நடந்த உழவர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

 உயிர்ம வேளாண்மைக் கொள்கை கோரி

திருச்சியில் எழுச்சியுடன் நடந்த 

உழவர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! 

=================================
















தமிழ்நாடு அரசு - உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவித்துச் செயல்படுத்த வேண்டுமெனக் கோரி திருச்சியில் தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம் சார்பில் உழவர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. 


இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண் கொள்கையை அறிவித்து மரபுவழிப்பட்ட இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதுபோல், தமிழ்நாட்டிலும் வேளாண்மையை இலாபகரமான தொழிலாகவும், வளங்குன்றா வேளாண்மையாகவும் நடத்துவதற்கும் - தமிழர் மரபுவழி வேளாண்மையைப் பாதுகாக்கவும் - தமிழ்நாடு அரசு உடனடியாக உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, பல்வேறு தன்னார்வச் செயல்பாட்டாளர்கள் மற்றும் உழவர்களை ஒருங்கிணைத்து “தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம்” உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் சார்பில், இன்று (28.11.2022)  திருச்சியில் உழவர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. 




அதன்படி, இன்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இயற்கைவழி வேளாண்மை உழவர்களும், செயல்பாட்டாளர்களும் எழுச்சியுடன் பங்கேற்றனர். 


ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். திரு. பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம்), சுயாட்சி இயக்கத் தலைவர் திரு. கே. பாலகிருட்டிணன், தாளாண்மை உழவர் இயக்கம் திரு. நடராசன், திரு. காரைக்கால் பாசுகர் (திரு நெல்லப்பர் மரபு வழி வேளாண்மை பண்ணை மற்றும் மரபு விதை வங்கி), திரு. இரமேசு கருப்பையா (தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம்), திரு. சுரேசுக்குமார் (சிதம்பரம் வண்டல் மண் குழு), திரு. அறச்சலூர் செல்வம் (இயற்கை விவசாயிகள் சங்கம்), பேராசிரியர். கோச்சடை, திரு. யோகநாதன் (பசுமை சிகரம் சுற்றுச்சூழல் அமைப்பு), மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி, செயசீலன், சிவாஜி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார். 


தமிழக உழவர் முன்னணி தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு க. முருகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். 


தமிழ்நாடு அரசே! 

உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவி


==============================

செய்தித் தொடர்பகம்,

தமிழக உழவர் முன்னணி

==============================

பேச: 9443904817, 9585573610, 9443291201

==============================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.