தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் - வழக்குப் பதிவு செய்க!
தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
=====================================
தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி யைச் சேர்ந்த மாணவர்கள், அங்கு படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களைத தாக்கியதும் காயப்படுத்தியதும் மதவெறியுடன் கலந்த இனவெறிப் பாசிசத்தின் வன்முறை வெறியாட்டமாகும்.
“நூறு மலர்கள்” என்ற பெயரில் இயங்கும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள், அப்பல்கலையில் மாணவர்கள் நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கில் சமூக நோக்கிலான ஒரு இந்திப் படத்தைத் திரையிட இருந்தபோது அங்கு வந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு மாட்டப்பட்டிருந்த பெரியார், காரல் மார்க்ஸ், லெனின் போன்ற தலைவர்களின் படங்களை கழற்றி உடைத்துள்ளனர். அவ்வெறிச் செயலைத் தடுத்த மாணவர்களை ஏபிவிபி மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறை ஆய்வு மாணவராக உள்ள “தமிழ் நாசர்” என்று அழைக்கப்படும் நாசர் முகமது மொய்தீனை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இளையகுமார் என்ற தமிழ் மாணவரையும் தாக்கியுள்ளனர். காயம் பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சில் ஏற்றியபோதும் ஏபிவிபி வன்முறையாளர்கள் தாக்கியுள்ளனர்.
மேற்கண்டவாறு வன்முறையில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர்களைப் பல்கலை நிர்வாகம் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப்படி அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோடி அரசின் மோசமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்த ஆட்சி இது! தமிழ் மாணவர்கள் ஏபிவிபி இந்தி மாணவர்களால் தாக்கப்படும்போது இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது அந்த வன்முறைக்குத் துணை போவதுபோல் ஆகும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை கோரி பல்கலை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைப்பது மட்டும் போதாது. இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வற்ற அரசியல் மேலோங்கி இருப்பதால் தமிழர்களுக்கு வெளிமாநிலங்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அன்றாடம் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டுள்ளன. கட்சி கடந்து தமிழ் இன உணர்வு தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்பதை இங்குள்ள மக்கள் உணர வேண்டும்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
================================
Leave a Comment