ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"சென்னையில் காவல்துறையினர் மீது வடமாநிலத்தவர் தாக்கு! வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு அபாயத்தின் வெளிப்பாடு! உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையைக் (Inner Line Permit) கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனே செயல்பட வேண்டும்!"

 


"சென்னையில் வடமாநிலத்தவர் காவல்துறையினரைத் தாக்கியது வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு அபாயத்தின் வெளிப்பாடு! உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையைக் (Inner Line Permit) கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனே செயல்பட வேண்டும்!" 

============================

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்! 👇👇

============================

"தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் இன்று (2023) அக்டோபர் 28 – காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ.ஆனந்தன், துணைத் தலைவர் தோழர் க.முருகன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ.இராசேந்திரன், கோ.மாரிமுத்து, க.விடுதலைச்சுடர், பி.தென்னவன், மு.தமிழ்மணி, வே.க.இலக்குவன், இரா.வேல்சாமி, மா.மணிமாறன், வெற்றித்தமிழன், கதிர்நிலவன், மூ.த.கவித்துவன், வெ.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைவுற்ற கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.இராசு, கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன. 👇👇


தீர்மானம் – 1

===============

வெளி மாநிலத்தவர் நுழைவைத் தடுக்க தமிழ்நாடு அரசு உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையைக் (ILP) கொண்டு வர உடனடியாக செயல்பட வேண்டும்!


தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் மிக வேகமாகக் குடியேறி வருகின்றனர். இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், பல்வேறு முறைகேடுகளை மேற்கொண்டு, புதிய பணியிடங்களிலெல்லாம் வெளி மாநிலத்தவரே நிரப்பப்பட்டு வருகின்றனர். கூலி வேலைகள் தொடங்கி, தனியார் துறை தொழிற்சாலைப் பணிகள் உட்பட பலவற்றிலும் வெளி மாநிலத்தவரே அபகரித்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டுத் தாயகத்திற்குள்ளேயே தமிழர்கள் வேலை மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப் படுகின்றனர். வெளி மாநிலத்தவரின் மிகை நுழைவு தமிழ்நாடு தமிழர் தாயகமாக நீடிக்குமா என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்திக்காரர்களின் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன.


கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை அம்பத்தூரில், துர்கா பூஜைக் கொண்டாடி, தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அணி பிரிந்து தாக்கிக் கொண்ட இந்திக்காரர்கள், அங்கு விசாரிக்க வந்த காவலர்களைக் கடுமையாகத் தாக்கிய நிகழ்வில், இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, ஈரோட்டில் 2022 ஏப்ரல் மாதம், ஒரு தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரிக்க வந்த பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்டக் காவல்துறை யினரைக் கடுமையாகத் தாக்கிய வடமாநிலத்தவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போது, தலைநகர் சென்னையிலேயே காவல்துறையினரைத் தாக்குமளவிற்கு வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் பெற்றுள்ளதையே அம்பத்தூர் நிகழ்வு வெளிப்படுத்துகிறது. 


தமிழ்நாட்டிற்குள் தாங்கள் தாக்கப்படுவதாக பீகாரிகள் ஒரு பொய் வதந்தியை திட்டமிட்டுப் பரப்பி, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தியபோது, தமிழ்நாடு அரசு பீகாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக் காவல்துறையினரையே வடமாநிலத்தவரின் பாதுகாப்புப் படை போல மாற்றியது. இதன் காரணமாக, தமிழ்நாட்டுக் காவல்துறையினரையே தாக்கும் அளவிற்கு வெளி மாநிலத்தவர்கள் துணிச்சல் பெற்றுள்ளனர். 


எனவே, தமிழ்நாடு அரசு இந்த நேரத்திலாவது தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க நேர்மையுடன் சிந்திக்க வேண்டும். இந்தியாவிற்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் எனக் கூறும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 19, அதன் உட்பிரிவான 19(1)(d)இன் வழியே, அந்தந்த மாநில மக்களின் பொதுநலன் கருதி, இதற்கு நிபந்தனைகள் விதித்துக் கொள்ளவும் உரிமை அளிக்கிறது. அதன்படிதான், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும், ஒன்றியப் பகுதியாக உள்ள இலட்சத்தீவுக்கும், இந்தியாவின் பிற மாநிலத்து மக்கள் செல்ல வேண்டுமெனில் உள் நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Liner Permit) வாங்கிச் செல்ல வேண்டுமென்ற நடைமுறையை  இந்திய உள்துறை அமைச்சகம் செயல்படுத்திக் கொண்டுள்ளது. 


இதேபோல், தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டைப் பாதுகாக்க, உடனடியாக உள் நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Liner Permit) முறையை தமிழ்நாட்டிற்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் முன் அனுமதி இல்லாமல் வெளி மாநிலத்தவரை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற உறுதியோடு, இதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! 


தீர்மானம் – 2

================

நவம்பர்'1 தொடங்கி மாதம் முழுவதும் தமிழர் தாயகப் பரப்புரை!


நவம்பர்'1 - தமிழர் தாயக நாள்! 1956 நவம்பர்'1ஆம் நாள்தான் தமிழர்களின் தாயகமாக - ஒரு மாநிலமாக - தமிழ்நாடு, இந்தியச் சட்டப்படி அமைக்கப்பட்டது. வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே நம் முன்னோர்கள், “தமிழ்நாடு தமிழர்க்கே என்று கோரிக்கை வைத்தார்கள். குறிப்பாக 1937-இல் திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் முதல் முதலாக முறைப்படி “தமிழ்நாடு தமிழர்க்கே” தீர்மானம் நிறைவேற்றினார்கள்.


மராட்டியத்தின் நாகபுரியில், 1920-ஆம் ஆண்டு நடந்த அனைத்திந்தியக் காங்கிரசு மாநாட்டிலேயே, இந்தியாவை மொழிவழி மாநிலங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரசுக் கட்சி, 1947-இல் ஆட்சிக்கு வந்த பின் அதைச் செயல்படுத்த மறுத்தது. அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடும் ஆந்திரமும் இருந்தன. 


தெலுங்கர்கள் ஆந்திர மாநிலம் கோரி போராடினர். மொழி - இனவழி முதல் மாநிலமாக ஆந்திரப்பிரதேசம் 1953 அக்டோபர் 1-ஆம் நாள் உருவானது. தமிழர் தாயகமாகத் தமிழ்நாட்டை அமைக்க ம.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கழகம் கோரியது. ஆனால், காங்கிரசு ஆட்சி அதை மறுத்தது. அப்போது தெலுங்கர், கன்னடர், மலையாளி என்ற திராவிட மிக்சரில் (mixture) தமிழினத்தைக் கரைத்து திராவிடம் கேட்டது தி.க-வும் தி.மு.க-வும்! தமிழர் போராட்டத்தின் காரணமாக 1956 நவம்பர் 1 அன்று, மொழி – இனவழி மாநிலமாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டுமென்று ம.பொ.சி. வலியுறுத்தினார்.


அப்பொழுதும் இப்போழுதும் தி.க., தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளும், காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும், தமிழ்நாடு நாளைக் கடைபிடிப்பதில்லை. ஆனால் காங்கிரசு, பா.ச.க., ஆளும் கர்நாடகத்திலும், காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் ஆளும் கேரளத்திலும் 1956 நவம்பர் 1-ஆம் நாளை முறையே “ராஜ்யோற்சவ” நாளாகவும், “கேரளீய” நாளாகவும் அரசு விழாக்களாகக் கொண்டாடுகிறார்கள். நடப்பாண்டிலும் மேற்படி மாநிலங்களில் அந்நாளைக் கொண்டாடுகின்றனர். கர்நாடகத்தில் அம்மாநிலத்திற்குரிய தனித் தேசியக் கொடியை அனைவரும் ஏற்றுகின்றனர்!


“இந்தியா” என்று வெள்ளையன் தந்த புனைபெயரையும் மாற்றி “பாரத்” என்று ஆரியப் புராணப் புளுகுப்பெயரைச் சூட்டப் போகிறதாம் பா.ச.க. ஆட்சி! 


தமிழ்நாட்டைத் தமிழகம் என்று மாற்றத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். இரவி! தமிழ் நாட்டை மூன்று ஒன்றிய மண்டலங்களாக மாற்றிவிடத் துடிக்கிறது பா.ச.க.!


இனப்பகைகள், இனத்துரோகங்கள் எத்தனை வந்தாலும் தூளாக்கச் சூளுரைப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!


1. தமிழே எங்கள் ஆட்சிமொழி, கல்விமொழி, தொடர்பு மொழி! ஆங்கிலம் விருப்ப மொழிப்பாடமாக மட்டும் தொடரட்டும். தூய தமிழில் பெயர் சூட்டுவோம் - பேசுவோம்!


2. தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை, கல்வி அனைத்தும் தமிழர்களுக்கே! பன்னாட்டு மற்றும் வடநாட்டுத் தொழில் வணிக நிறுவனங்களை வரம்பு வைத்து வெளியேற்றுவோம்.


3. தமிழ்நாட்டு வேலை வாய்ப்பில் அனைத்திந்தியத் தேர்வு எந்தத் துறைக்கும் கூடாது. நீட் தேர்வை நீக்க வேண்டும். 


4. வேதி உர வேளாண்மை தவிர்ப்போம்! மரபு வேளாண்மை வளர்ப்போம்! மண்ணுக்கேற்ற சிறு – நடுத்தரத் தொழில்களை வளர்ப்போம்! 


5. சாதி உயர்வு - தாழ்வு, ஆண் - பெண் உயர்வு - தாழ்வு நீக்குவோம்! மதவெறி மாய்ப்போம்! சமூகச் சமநிலை கொணர்வோம்!


6. கார்ப்பொரேட் மற்றும் கங்காணி அரசியல் தவிர்ப்போம்! பணம் – பதவி - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சிய அரசியல் வளர்ப்போம்!


மேற்கண்ட கோரிக்கைகளை அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் வலியுறுத்தும் வகையில், வரும் நவம்பர்'1 - தமிழர் தாயக நாள் தொடங்கி, மாதம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனமாகத் தீர்மானிக்கிறது!" 👍👍

============================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

============================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

============================

- தமிழ்த்தேசியப் பேரியக்கம்,  👍

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.