ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்




பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்?

பெ. மணியரசன்



பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
“புரட்சிப் பாவலர்” என்று போற்றப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைத் தமிழர்கள் உரியவாறு கொண்டாடவில்லையே, ஏன்?
இப்போக்கு பாவேந்தர்க்கு மட்டும் நேர்ந்த விபத்தல்ல! தமிழர்களின் உளவியல் ஊனத்தின் ஒரு பகுதி இது!
ஜக்கி வாசுதேவின் சர்க்கஸ் ஆன்மிகத்தைத் தமிழர்கள் கொண்டாடுவார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களின் முற்போக்கு – சமநிலை - தமிழர் ஆன்மிகத்தை அந்த அளவுக்குக் கொண்டாட மாட்டார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிராமணியத்தின் வர்ணாசிரமவாதத்தை மறுத்து, வேத – ஆகமங்களை மறுத்து, தற்சார்புச் சமநிலை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி, அக்கொள்கையைப் பரப்பினார் வள்ளலார். ஆனால், வள்ளலாரை விட அதிகமாக சாயிபாபாக்களைக் கொண்டாடுகிறது தமிழ்நாடு!
பாரதியார் அளவிற்குப் பாவேந்தரைத் தமிழர்கள் கொண்டாடதது ஏன்? பார்ப்பன குலத்தில் பிறந்தாலும் பார்ப்பனியத்தை – கடுமையாகச் சாடியவர் பாரதியார்!
“இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்
இவர் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்!
பேராசைக் காரணடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை எனில் வேர்ப்பான்
***
”பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளை – பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே”
என்றெல்லாம் பார்ப்பனரைக் கண்டனம் செய்து பாடினார். ஆனால், பாரதியார் “பாரத நாடு” தெய்வம் என்றதும், சமற்கிருத வேதங்களின் உயர்வைப் பாடியதும், எழுதியதும், ஆரிய மேன்மையை அதிகம் புகழ்ந்ததும், பிராமணர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. எனவே, பாரதியின் இந்த முகத்தை வெளிக்காட்டுவோம் என்று பிராமணர்களும், பிராமணிய ஊடகங்களும் பாரதியைக் கொண்டாடுகின்றனர். அவரின் பிறந்தநாளை திசம்பர் 11, நினைவு நாளான செப்டம்பர் 11 ஆகிய நாட்களில் பல்வேறு வடிவங்களில் தமிழ்நாடெங்கும் பாரதியார் விழாக்கள் நடக்கின்றன.
பிராமணர்களின் பொறுப்புகளில் உள்ள ஏடுகள், நாளேடுகள், பாரதியார் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. சிறப்புக் கட்டுரைகள் வெளியிடுகின்றன. ஆனால், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான ஏப்ரல் 21, பிறந்த நாளான ஏப்ரல் 29 இரு நாட்களிலும் தமிழ்நாட்டில் பரவலாக பாவேந்தர் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை! நாளேடுகளும் ஏடுகளும் இதர ஊடகங்களும் பாவேந்தர் நினைவாக எந்தச் செய்தியும், படைப்பும் வெளியிடுவதில்லை!
பாவேந்தருக்கு மட்டுமல்ல, வ.உ.சி.க்கும் தமிழர்கள் வழங்கும் “சிறப்புகள்” இதேதான்! அதே செப்டம்பர் 5இல், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் – பிறந்தநாள் என்பதால் அவர்க்கு நினைவேந்தல், நிகழ்வுகள் அதிகம்; கட்டுரைகள் – படைப்புகள் பலப்பல!
பாரதியாரையும் இராதாகிருஷ்ணன் அவர்களையும் கொண்டாடாதீர்கள் என்று நாம் கூறவில்லை! தமிழர்கள் பாவேந்தரையும் வ.உ.சி.யையும் அலட்சியப்படுத்துவது ஏன் என்றுதான் கேட்கிறோம்.
தமிழ்க் கவிதையை 20ஆம் நூற்றாண்டிற்கேற்ப வளர்த்தவர் பாரதியார். பாரதியாரின் தொடர்ச்சியாகப் பாவேந்தர், தமிழ்க் கவிதையை – பல்வேறு வடிவங்களில் மிகப்பெரும் பாய்ச்சலுடன் புதிய சிகரங்களுக்குக் கொண்டு போனவர் பாரதிதாசன்! பாரதிதாசன் பரம்பரை என்றே அடுத்தடுத்து தமிழ்க் கவிஞர் பட்டாளம் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றது.
சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று – இதில்
ஒரு பாதியை நாடு மறந்தால்
மறுபாதி துலங்கு வதில்லையாம்!
***
பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டின்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே!
***
எல்லார்க்கும் எல்லாம் என்ற
இடம்நோக்கி நகர்கின்ற திந்த வையம்!
***
***
பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே வெளியே வா!
***
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
***
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
***
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு போன்ற தனித் தொகுப்புகள் உளவியல் நுட்பமும், அழகியல் நுட்பமும் அணிவகுக்கப் புனையப்பட்ட பாவேந்தர் கவிதைப் படைப்புகள்! இப்படி எத்தனையோ!
ஏற்றமிகு இளந்தலைமுறையே, என் அன்புப் பெரியோரே, இப்போது நடப்பது தமிழ்த்தேசிய எழுச்சி யுகம்! அதிலும் 2025 தமிழ்த்தேசிய எழுச்சி ஆண்டாகத் தொடர்ந்து கொண்டுள்ளது.
இவ்வாண்டு (2025) ஏப்ரல் 21 – பாவேந்தர் நினைவுநாள்; ஏப்ரல் 29 பாவேந்தர் பிறந்தநாள்! வாய்ப்புள்ள நாளில், பாவேந்தர் நினைவுகளை பாவரங்கமாக – உரையரங்கமாக – மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியாக மற்றும் பல்வேறு வடிவங்களில் கடைபிடியுங்கள்!
தமிழ் இனத்தின் மீது படிந்துள்ள கறைகளைத் துடைத்துத் தூய்மையாக்குங்கள்! பாவேந்தர் நாளைக் கடைபிடிப்பது நன்றிக் கடன் மட்டுமல்ல – நம் தலைமுறையின் அடிமைத் தளைகளை அறுத்தெறிவதும் அதற்குள் உள்ளடக்கம்!
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.