கூட்டரசு மாநாட்டிற்குக் கொள்கைப் பிடிப்பால் கூட்டெழுச்சி! பெ. மணியரசன்
கூட்டரசு மாநாட்டிற்குக்
கொள்கைப் பிடிப்பால் கூட்டெழுச்சி!
பெ. மணியரசன்
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================================
தஞ்சையில் 10-5-2025 அன்று நடைபெற உள்ள “கூட்டரசுக் கோட்பாடு” சிறப்பு மாநாடு பெருமளவில் தமிழ் நாட்டுத் தமிழர்களின் - பன்னாட்டுத் தமிழர்களின் - கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இவ்வாறு இம் மாநாட்டுச் செய்தி பரவி இருப்பதற்கு முதன்மையான காரணங்கள் இரண்டு:
ஒன்று, பன்னாட்டுத் தமிழர்களின் தலைமைத் தாயகமாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் - தமிழ், தமிழினம், தமிழர் தாயகம் இம் மூன்றின் உரிமைகளும் பறிக்கப்பட்டும் , சீரழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அவலம்!
இன்னொன்று, இம்மாநாட்டை முன்னெடுத்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரும், தோழமை இயக்கங்களைச் சேர்ந்தோரும், இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன உணர்வாளர்களும் அவரவர் பங்கிற்கு இம்மாநாட்டுச் செய்திகளையும், இதன் தேவையையும் பரப்பி வரும் பாங்கும், அக்கறையும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தமிழ்நாடு தழுவிய அளவில், அங்கங்கே தன்னெழுச்சியாக மாநாட்டுப் பணிகள் ஆற்றிவருகிறார்கள்! மாநாட்டிற்குத் திரளாகத் தமிழின உணர்வாளர்களை - ஆண்கள் - பெண்கள் - இளையோர் - முதியோர் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்துவர முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.
எண்ணிப்பாருங்கள்! எவ்வளவு பெரும் கட்சியாக இருந்தாலும் வாடகை உந்துகளில் வாடகைக்கு மக்களை ஏற்றி வரும் காலம் இது!
உண்மையான ஓர் இலட்சியம் மக்களின் மனதைக் கவ்விவிட்டால், அது சிந்தனை வடிவம் கடந்து, மக்கள் ஆற்றலாய் பருண்மை வடிவில் பாய்ச்சல் கொள்ளும் என்பார் காரல் மார்க்ஸ்!
அப்படித்தான், தமிழ்த்தேசியம் என்ற சிந்தனை தமிழர்களின் வடிவில் மனித ஆற்றலாக வெளிப்படுகிறது!
தமிழ்த்தேசியம் வேறு, தமிழன், தமிழச்சி வேறல்ல; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் குருதியில், தமிழர் மனத்தில் எழுந்தது தமிழ்த்தேசியம்!
தமிழ்நாடு, தமிழகம் என்று சங்க இலக்கியங்கள், பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்றவை கூறுகின்றன!
அப்போதென்ன ஒற்றைத் தமிழ் அரசா தமிழ்நாடு முழுமைக்கும் நிலவியது? இல்லை! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “தேசம் (Nation) “வரையறுத்த மூதறிஞர்கள் தமிழர்கள்! தமிழ் பேசப்படாத அயல் நாடுகளையும், அதனதன் பெயரில் தேசம் என்றார்கள்! அவற்றை தமிழ் பேசப்படாத “மொழி பெயர் தேயம்” - அயல்தேசம் என்று ஏற்றவர்கள் தமிழர்கள்!
நம்முடைய முதல் தமிழ்த்தேசியக் காப்பியம், சிலப்பதிகாரம்! நம்முதல் தமிழ்த்தேசியப் பாவலர் இளங்கோவடிகள்! அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் மன்னர்களான சேர - சோழ - பாண்டியர்கள் கூடிக் குலாவிக் கொண்டா இருந்தார்கள்? முரண்பாடுகள், முனுமுனுப்புகள், மோதல்கள் கொண்ட தனித்தனி தமிழ் அரசுகள் சேர - சோழ - பாண்டிய அரசுகள்! அவர்கள் சேர்ந்திருந்த காலம் மிகச் சிறிது!
மூன்று தமிழ் அரசுகளையும் இணக்கமாக ஒன்றிணைத்து, மூன்று நாட்டையும் சமமாகப் பாராட்டி சிலப்பதிகாரம் என்ற காப்பியம் வடித்தார் - நம் தமிழ்த்தேசியப் பெரும்பாவலர் - பிறப்பால் இளவரசர் - இளங்கோவடிகள்!
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய”வர் இளங்கோவடிகள்!
எந்திர முதலாளிகள் சந்தையில் உருவாக்கியதே “தேசியம்” என்று மாரக்சிய அறிஞர்கள் கூறியது தமிழ் இனத்திற்குப் பொருந்தாது!
“தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா” என்றார் பாரதியார்!
“இனத்தைச் செய்தது மொழிதான் - இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான்” என்று மிகச் சரியாகச் சொன்னார் பாவேந்தர் பாரதிதாசன்!
மொழி-இனம்-தாயகம் மூன்றும் இயற்கையின் படைப்பு; வரலாற்றின் வடிவமைப்பு!
இந்த வரையறுப்பு எத்தனை இனங்களுக்குப் பொருந்துகிறது என்று சிலர் கேட்கக் கூடும்!
“எங்களுக்குப் பொருந்துகிறது; நாங்கள் மிடுக்கோடு, கம்பீரமாகச் சொல்கிறோம்” என்று கூறுங்கள் தமிழ்ப் பிள்ளைகளே!
இந்த வரையறை மற்ற இனங்களுக்குப் பொருந்தவில்லை என்றால் அவர்கள் மாற்றாக ஒன்றைக் கூறிக் கொள்ளட்டும். தமிழர்கள் மற்ற இனங்களைக் குறைவாக - இழிவாகப் பேசுவதில்லை! எங்களை இழிவுபடுத்தியோரை ஒருவேளை எங்களவர்களும் இழிவு படுத்தியிருக்கலாம்! நாம் மற்ற இனங்களை ஒரு போதும் குறைவாகக் கூறுவதில்லை.
காலங்காலமாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் - பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட - மக்களை நாம் அயலாராகக் கருதவில்லை. அவர்களும் மண்ணின் மக்களே! ஆந்திராவில், தெலுங்கானாவில் தெலுங்கு தேசியம், கர்நாடகாவில் கன்னட தேசியம், கேரளத்தில் மலையாள தேசியம் மேலாண்மை செலுத்துவது போல் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் தலைமை தாங்க வேண்டும் என்கிறோம். தமிழ்த்தேசியம் அனைவரையும் அரவணக்கும்! அதே வேளை, அயலாருக்கு அடிமையாவதை வெறுக்கும்!
*அன்பான தமிழர்களே!*
===========================
தஞ்சை மாநாட்டிற்கு ஊர்திகளில் வரும்போது கவனமாக வாருங்கள். நாம் ஊர்திகளில் வருவது பயணமே தவிர, பந்தயம் அல்ல!
கவனத்துடன் வாருங்கள்.
8.5.2025 அன்புடன்,
*(பெ.மணியரசன்)*
*நிகழ்வுகள்*
=============
மாநாடு காலை 9.00 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன் ஏற்றி வைப்பதுடன் தொடங்குகிறது.
சிறப்பான இரு கருத்தரங்குகள்
“தமிழர் தொன்மையும் வன்மையும்” என்ற தலைப்பில் ஆய்வறிஞர், முனைவர் கோ. தெய்வநாயகம் பேசுகிறார். “தமிழ் - தமிழர் மறுமலர்ச்சியில் தமிழ்ச் சங்கங்களின் - மதுரை (1901), கரந்தை (1911) – பங்களிப்பு” என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் மு. இளமுருகன் உரையாற்றுகிறார். “தமிழர் ஆன்மிகமொழி தமிழே” என்ற தலைப்பில் வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் பேசுகிறார். “தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் - அவதூறும்” என்ற தலைப்பில் தமிழிய வரலாற்று ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் பேசுகிறார்!
“தமிழ் மேல் ஆணை” என்ற தலைப்பில் நடைபெறும் பாவரங்கு திரைப் பாவலர் கவிபாஸ்கர் தலைமையில் நடைபெறுகிறது. பாவலர்கள் மூ.த. கவித்துவன், நா. இராசாரகுநாதன், முழுநிலவன், பிரகாசுபாரதி ஆகிய பாவலர்கள் பாவீச்சு தருகிறார்கள்.
புயல் கிளப்பும் புதுநூல் வெளியீடு
ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியுள்ள “பஃறுளி முதல் சிந்து வரை” (ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. வின் சிந்தரிவிலிருந்து வைகைவரை நூலுக்கு மறுப்பு) என்ற புத்தம் புது நூல் வெளியிடப்படுகிறது.
இந்நூலை ராவணா வலையொலி நிறுவனர், திரு. ஏகலைவன் அவர்கள் வெளியிடுகிறார்.
அடுத்து “கூட்டரசுக் கருத்தரங்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி - “வரிவிதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில் பேசுகிறார். “ஆட்சி மொழி” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி இடும்பாவனம் கார்த்தி பேசுகிறார். “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில் இத்துறையில் களச் செயல்பாட்டாளராகத் திகழும் தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார் சிவா பேசுகிறார். “கூட்டரசில் ஆளுநர் பதவி” என்ற நெருக்கடியான தலைப்பில் மகளிர் ஆயப் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி பேசுகிறார். த.தே.பே. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் நெறியாள்கை செய்கிறார்.
மிகமிக முகாமையான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
*நிறைவரங்கம்!*
================
மாநாட்டின் நிறைவரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எழுச்சி நாயகர் செந்தமிழன் சீமான் அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் விடிவெள்ளிச் சிந்தனையாளர் கி. வெங்கட்ராமன் அவர்களும், நானும் (தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்) பேசுகிறோம்.
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்க வரலாற்றுக் கண்காட்சி என இரு கண்காட்சி அரங்குகள் திறக்கப்படுகின்றன. பன்மைவெளி புத்தக விற்பனை அரங்கம் செயல்படுகிறது.
சிலம்பாட்டம், மல்லர் கம்பம், மரபு இசை முதலிய கலைநிகழ்ச்சிகள் மேடையில் களைகட்ட உள்ளன!
பன்முகச் செழிப்போடு, கூட்டரசுச் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.
வாருங்கள் தமிழர்களே!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Leave a Comment