மேக்கேத்தாட்டு அணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! மக்கள் போராட்டமே தீர்வு! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!
மேக்கேத்தாட்டு அணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
மக்கள் போராட்டமே தீர்வு!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாட்டின் எல்லைக்கருகில் கர்நாடக அரசு, தனது எல்லையான மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே, 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவில், மிகப்பெரிய புதிய அணை கட்டுவதற்கான திட்டம் உச்ச நீதிமன்றக் காவிரித் தீர்ப்பிற்கு எதிரானது என்று கூறித் தடை கோரி – தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை அப்போதைய அண்ணா தி.மு.க. ஆட்சி தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் இதை விசாரிக்காமல் நிரந்தரமாகக் கிடப்பில் போட்டது.
இப்போதுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பூஷன் இராமகிருஷ்ணா கவாய் (பி.ஆர். கவாய்) வரும் 23.11.2025 அன்று பணி ஓய்வு பெறும் நிலையில், அவசரமாக எடுத்து, விசாரித்து, கர்நாடகம் மேக்கேதாட்டில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report – DPR) அளிக்கவும், அதை இந்திய அரசின் நீர்வளத்துறை அனுமதிக்கு அனுப்பவும் தடை இல்லை என்று கூறி, தமிழ்நாடு அரசு 2018இல் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோரைக் கொண்ட அமர்வு இது!
இதற்கு முன் இதே தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அமர்வு – முல்லைப் பெரியாறு அணையை முடக்கக் கோரிய கேரளத்தின் வழக்கை எடுத்து, 13.10.2025 அன்று விசாரித்து, "முல்லைப் பெரியாறு அணை மிகமிகப் பழைய அணைகளில் ஒன்று. புதிய அணை கட்டுவது பற்றியும் ஆய்வு செய்வோம்" என்று தீர்ப்பளித்தது. அதாவது, கேரளக் காப்புப் படையணி (Save Kerala Brigade) மற்றும் கேரள அரசு கூறிய வாதத்தை அப்படியே ஏற்றுத் தீர்ப்பளித்தது.
இப்போது காவிரிச் சிக்கலில், 2018இல் போடப்பட்ட வழக்கைப் பணி ஓய்வுக்கு முன் அவசரமாக எடுத்து, விசாரித்து, மேக்கேதாட்டு அணைக்கான தொடக்கப் பணிகளுக்குத் தடை இல்லை என்று பி.ஆர். கவாய் அமர்வு தீர்ப்பளித்து, தடை கோரிய தமிழ்நாடு அரசு வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கம்போல், தமிழ்நாடு அரசின் நீராற்றல் துறை அமைச்சர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றம் மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதித்தவிட்டதாகக் கூறுவது தவறு, மத்திய நீர்வளத்துறையிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் தனது வலுவான வாதங்களைத் தமிழ்நாடு அரசு முன் வைக்கும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய நீர்வளத்துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் ஏற்கெனவே கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையை (DPR) ஏற்றுக் கொண்டு விட்டன என்ற உண்மையை மறைக்கிறார் துரைமுருகன்!
இந்திய நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் தலைமை அதிகாரியாக எஸ்.கே. ஹல்தர் இருந்தபோது, அவரே கர்நாடக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை (DPR) அளிக்குமாறு விரும்பிக் கேட்டுப் பெற்றார். அதன் பிறகு, அதை ஏற்க வலியுறுத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்தார். அந்த நிலையில், அவர் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுபெற்ற அவரை, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வேண்டுமென்றே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 5 ஆண்டுகளுக்குத் தலைவர் ஆக்கினார்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மேற்படி ஹல்தர் தலைமையில் 01.02.2024 அன்று நடந்தபோது, கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டார். தமிழ்நாடு, புதுச்சேரி அதிகாரிகள் எதிர்த்து வாக்களித்தனர். மொத்தம் 9 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இதில் 5 பேர் இந்திய அரசு அதிகாரிகள். எனவே, மிகப் பெரும்பான்மை ஆதரவுடன் மேக்கேதாட்டு அணை விரிவான திட்ட அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக – இந்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) துறைக்கு அனுப்பப்பட்டது.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் துரைமுருகன், மேக்கேத்தாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் எந்த முயற்சியையும் முளையிலேயே தமிழ்நாடு அரசு கிள்ளி எறியும் என்று நெஞ்சாரப் பொய் சொல்கிறார்.
ஆனால், கர்நாடக அரசு வனப்பகுதிகளில் இந்த அணையைக் கட்டுவதற்கான தளம் அமைத்தால் போன்ற அடிப்படைப் பணிகளுக்காக மட்டும் இதுவரை சற்றொப்ப 1000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! அணைக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 14 ஆயிரம் கோடி ரூபாய்!
கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் இந்திய அரசின் ஒப்புதல் பெறாமலும், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியும் காவிரி நீர் வரத்துகளின் குறுக்கே ஏமாவதி, ஏரங்கி, கபிணி அணைகளைக் கட்டி முடித்தது கர்நாடகம்!
இப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தடவைக் கூட செயல்படுத்தி ஆண்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்குக் காவிரியில் திறந்துவிட்டதில்லை!
பருவமழைப் பிறழ்ச்சிகளால் கடந்த சில ஆண்டுகளாகப் பெருமழை பெய்து, கர்நாடகத்தால் தேக்க முடியாத மிகை வெள்ளம் மேட்டூர் அணையை நிரப்பி வருகிறது. விதிமுறைப்படி ஒருதடவை கூடக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையமும் அதைத் தட்டிக் கேட்பதில்லை!
எனவே, தமிழ்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினால் தான் காவிரி உரிமையைப் பாதுகாக்க முடியும், அதற்கான களப் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
Leave a Comment