ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நேப்பாளப் புரட்சியும் நெருக்கடிகளும் - பெ.மணியரசன்

நேப்பாளப் புரட்சியும் நெருக்கடிகளும்

பெ.மணியரசன்
 

 நேப்பாளப் புரட்சியில் வீழ்ந்தது மன்னராட்சி மட்டுமல்ல; நாடாளுமன்ற வாதக் கட்சி களும்தாம்; அவற்றுள் வலதுசாரிகளும் அடக்கம்; இடதுசாரிகளும் அடக்கம். கடந்த ஏப்ரல் 10-இல் நேப்பாள அரசமைப்பு அவைக்கான தேர்தல் நடந்தது. மன்னர் ஞானேந்திராவின் வளர்ப்புப் பிராணிகளாக அரண்மனையை வலம் வந்து கொண்டிருந்த சூரிய பகது}ர் தாப்பாவின் "ராஷ்;ட்ரிய ஜனசக்தி

க ட் சி ", பசுபதிராணாவின், "ராஷ்;ட்ரிய பிரஜா தந்திரக் கட்சி", கமல் தாப்பாவின் "ராஷ்;ட்ரிய பிரஜா தந்திரக் கட்சி-நேப்பாளம்" ஆகியவை இத்தேர்தலில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.

 

இக்கட்சிகளின் தலைவர்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அரண்மனையை அனுசரித்து நாடாளுமன்றவாத அரசியல் நடத்திக் கொண்டிருந்த நேப்பாளிக் காங்கிரஸ், ஒருங்கிணைந்த

மார்க்சிய – லெனினியக் கட்சி ஆகியவை படுதோல்வி அடைந்தன. நேப்பாளிக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜி.பி.கொய்ராலா தாம் அந்நாட்டின் பிரதமர். அக்கட்சியின்

இடைக்காலத் தலைவர் சுசில் கொய்ராலா தோற்றுப் போனார். பிரதமரின் மகள் சுஜாதாகொய்ராலா, அக்கட்சியின் இன்னொரு முக்கியப் புள்ளி சேகர் கொய்ராலா, அக்கட்சியைச் சேர்ந்த

உள்துறை அமைச்சர் கிருஷ்;ண பிரசாத் சித்துவாலா ஆகியோர் வாக்காளர்களால் வீழ்த்தப் பட்டவர்களில் முகாமை யானவர்கள். நாடாளும் அரசபரம்பரைக்கு மட்டுமல்ல, நாடாளுமன்றவாத அரசியல் பரம்பரைக்கும் இத்தேர்தல் வேட்டு வைத்தது.

 

அரசர் அனுமதித்த நாடாளுமன்றவாத எல்லைக்குள், தனது "புரட்சி" அரசியலுக்குப் புகலிடம் தேடிக் கொண்ட ஒருங்கிணைந்த மார்க்சிய – லெனினியக் கட்சித் தலைவர்களும் இத்தேர்தலில் வீழ்ந்தனர்.  அக்கட்சியின் தலைவர் மாதவ நேப்பாள் தோற்றார்; அக்கட்சியின் இதர முக்கியத் தலைவர்களும் தோற்றனர். தோல்விக்குப் பொறுப்பேற்று மாதவ நேப்பாள் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார். கூட்டணி அமைச்சரவையிலிருந்தும் அக்கட்சி விலகிக் கொண்டது. பழம்பெரும் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டன் மாபெரும் தலைவர்கள் மண்ணைக் கவ்வினர்.

புதிய சக்திகள் எழுந்தன. நேப்பாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சி, மாதேசி ஜன அதிகார அமைப்பு ஆகியவை நேப்பாளத்தின் மக்களாட்சி அரங்கத்தில் முதலிரு வெற்றியாளர்களாக மேடை ஏறின.

 

நேப்பாளம் பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட ஒரு நாடு. புத்தர் பிறந்த லும்பினி அங்கே தான் இருக்கிறது. நேப்பாளி, மைத்திலி, போஜ்புரி பேசும் மக்கள் வாழ்கின்றனர். 1,47,181 ச.கி.மீ.பரப்பு கொண்ட நாடு. 2002 கணக்குப்படி மக்கள் தொகை 2,36,92,000 பேர். அந்நாட்டின் நடுப்பகுதியில் எவரெஸ்ட் மலைச் சிகரம் உள்ளது. சிறுபான்மை பழங்குடிகளாக உள்ள மாதேசி மக்கள், இந்திய எல்லையை ஒட்டிய தெராய்ச் சமவெளியில் வசிக்கின்றனர். இம்மக்கள் தன்னாட்சி கோருகின்றனர். இந்துமதம் பெரும்பான்மை மதம். புத்தம், இஸ்லாம் ஆகியவை சிறுபான்மை மதங்கள்.

இந்து மதம் அரசு மதமாக சட்ட ஏற்பு பெற்றுள்ளது. காஞ்சி சங்கராச்சாரிதான் நேப்பாள அரச குடும்பத்தின் தலைமைக் குரு. அரசர் முடிசூட்டு விழா காஞ்சி சங்கராச்சாரியின் சடங்குகளோடு

நடைபெறும். சுருக்கமாகச் சொன்னால், மன்னர் பரம்பரையும் பார்ப்பனியமும் இணைந்த ஓர் அரசு அது

 

மக்களில் பெரும்பாலோர் இந்தோ-ஆரிய நேப்பாளி இன மரபினர். திபெத்திய நேப்பாளி இன மரபினரும் உள்ளனர். நேப்பாளத்தின் வணிகத்தைக் கைக்குள் வைத்திருப்பவர்கள் மார்வாரி குசராத்தி சேட்டுகள். இவர்கள் எப்பொழுதும் மன்னர் விசுவாசிகள்; சனநாயக சக்திகளுக்கு எதிரிகள். இந்தியாவுக்கும் நேப்பாளத்துக்கும் இடையே திறந்த எல்லை உள்ளது. கடவுச் சீட்டு, நுழைவு அனுமதி  ஆகியவை இல்லாமல் அங்கிருந்து இந்தியா வரலாம். இங்கிருந்து நேப்பாளம் போகலாம். ஆனால் இரு நாடுகளின் நுழைவு வாயிலிலும் சோதனைச் சாவடிகள் உண்டு. நேப்பாள நாணயத்தின் பெயரும் ரூபாய் தான். மன்னராட்சி நிலைத்துப் போன நேப்பாளத்தில் 1990-இல் எழுந்த சனநாயகக் கிளர்ச்சியை ஒட்டி, புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இப்போதுள்ள  ஞானேந்திராவின் அண்ணன் பீரேந்திரா அப்போது மன்னர். அந்த அரசமைப்புச் சட்டம் மன்னரின் ஆட்சித்தலைமையை வலியுறுத்தினாலும், அவரது அதிகாரத்திற்கு வரம்பிட்டது.

 

இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம்; அவற்றிற்கான தேர்தல்; தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை; அதன் தலைவராகப் பிரதமர் என்ற ஒருவகைச் சனநாயக முறை உருவாக்கப்பட்டது. ஞானேந்திரா மன்னரான பின், தமது வரம்புக்குள் நில்லாமல் தங்கு தடையற்ற மன்னராட்சி முறையை செயல்படுத்தத் தொடங்கினார். இராணுவம், காவல்துறை ஆகியவற்றை ஏவி, சனநாயக அமைப்புகளையும் மக்களையும் கொடுமையாகத் தாக்கினார். ஒடுக்கினார்.

 

1990-இல் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டப்படி நேப்பாளிக் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. பின்னர் ஒருங்கிணைந்த மார்க்சிய – லெனினியக் கட்சி ஆட்சி நடத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை

மிரட்டி உருட்டுவதும், கலைப்பதும் ஞானேந்திராவுக்குப் பொழுதுபோக்கு போல் ஆகிவிட்டது. இவருடைய அட்டூழியங்களை எதிர்த்து முறியடிக்கும் ஆற்றல் நாடாளுமன்றவாதக் கட்சிகளுக்கு இல்லை. இந்த நிலையில் ஏற்கெனவே ஆய்தப் போர் அமைப்பாக வளர்க்கப்பட்டு வந்த நேப்பாள மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, மன்னராட்சியின் கொடுமைகளையும், மன்னராட்சியின் கிராமப் புறக்காவல் அரண்களாக விளங்கிய நிலக்கிழமையையும் எதிர்த்துப் போரிட்டது.

 

மலைகளில் மாவோயிஸ்ட்டுகள் கட்சி செல்வாக்குப் பெற்றது. நேப்பாளத்தின் கிழக்கு மற்றும் மையச் சமவெளியான தெராயில் 2007 முதல் மாதேசி ஜன அதிகார அமைப்பு செல்வாக்குப் பெற்றது.

மன்னர் ஆட்சியை ஒழித்து மக்கள் சனநாயக நேப்பாளத்தை உருவாக்கப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்தப் போராட்டம் நடத்தியது மாவோயிஸ்ட்டுக் கட்சி. 2006-இல் ஞானேந்திராவுக் கெதிராக நேப்பாள மக்கள் வெகுண்டெழுந்தனர். இராணுவ அடக்குமுறைகளைத் தகர்க்கும் வகையில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அந்த மக்கள் எழுச்சியின் முன்னணிப் படையாகச் செயல்பட்டது மாவோயிஸ்ட்டுக் கட்சி. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்பிறகு அரசியல் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டி முன்னேறியது அக்கட்சி. மாவோயிஸ்ட்டுக் கட்சி தான் மன்னராட்சி முறை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதில் முரணின்றி உறுதியாக உள்ளது. அரண்மனையை அனுசரித்து அரசியல் நடத்திப் பழக்கப்பட்ட, நேப்பாளிக் காங்கிரசும், மார்க்சிய லெனினியக் கட்சியும்

மன்னராட்சியை நீக்குவதில் உறுதியாக இல்லை. அரசமைப்பு அவைக்கான இத்தேர்தலில் மேற்படி இரு கட்சிகளும் மாவோயிஸ்ட்டுக் கட்சியைக் கூட்டணி சேர்க்கவும் இல்லை. இக்கட்சிகள் அனைத்தும் தனித்தனியே போட்டியிட்டன.

 

ஆனால் அவை தற்பொழுதுள்ள 7 கட்சி கூட்டணி ஆட்சியில் உறுப்பு வகிக்கின்றன. நேப்பாளத்தில் விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை உள்ளது. அதன்படி 601 உறுப்பினர்களைக் கொண்ட

அவைக்கு 240 இடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெற்றது. எஞ்சியவற்றுக்குக் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்திற் கேற்ப இடங்கள் வழங்கப்படும். 240-இல் 121 தொகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 601 உறுப்பினர்களில் நேரடித் தேர்தல் மூலம் 240, விகிதாச்சார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவது 335 இடங்கள். ஆகமொத்தம்

தேர்தல் மூலம் நிரப்பப்படும் இடங்கள் 575 ஆகும். எஞ்சிய 26 இடங்கள் வாக்கு விகிதத்திற் கேற்ப கட்சிகளின் தலைமையால் நியமனம் செய்யப்படுவன ஆகும். மொத்த வாக்குகளில் 38.2

விழுக்காடு மாவோயிஸ்ட்டு களுக்கு கிடைத்துள்ளது. இதனால் அவையில் கிடைக்கும் இடங்கள் 220. நேப்பாளி காங்கிரசிற்கு கிடைத்த மொத்த இடங்கள் 110. மார்க்சிஸ்ட்டு லெனினிஸ்ட்-103.

மாதேசிக் கட்சிகள்- 85 மாவோயிஸ்ட்டுத் தலைவர் பிரசண்டா கூட்டணி ஆட்சிக்கு மற்ற கட்சிகளை அழைக்கிறார். நேப்பாளிக் காங்கிரசும், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியும்,  கூட்டணியில் சேருமா சேராதாஎன்பது இன்னும் தெளிவாக வில்லை. மாவோயிஸ்ட் கட்சியை தனித்து ஆளவிட்டு, மக்கள்  பிரச்சினைகளை அதனால் சமாளிக்க முடியவில்லை எனில் அதை  அம்பலப்படுத்தலாம் என்றும் இவ்விரு கட்சிகளும் கருதலாம் என்று அரசியல் நோக்கர்கள் ஊகிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் மாவோயிஸ்ட்டு களை ஆட்சி யமைக்க

விடக்கூடாதென்று பல்வேறு சதிவேலைகளில் ஈடுபடுகிறது.

 

ஆட்சியமைத்த பிறகும் சுரண்டும் வர்க்கங்களும் அதன் தலைவர் களும் மன்னரும் சேர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தக் கூடும். மாவோயிஸ்ட்டுகள் அவ்வாறான உள்நாட்டுக் குழப்பத்தை சமாளிக்க வேண்டியிருக்கும். மாவோயிஸ்ட்டுகளின்.

 

இந்த வெற்றிக்கு காரணங்களாக நாம் பார்ப்பவை:

 

1.மன்னரின் கொடிய  இராணுவ ஆட்சியை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடியது.

 

2.மன்னர் ஆட்சி முறையை ஒழித்து சனநாயக ஆட்சி முறையை உருவாக்க வேண்டுமென்று தடுமாற்ற மில்லாமல் கோரிக்கை வைத்தது: போராடியது.

 

3.உழைக்கும் மக்கள், ஏழை எளியவர்களுக்கான, மக்கள் சனநாயகப் பொருளியல் திட்டங்களை முன்வைத்தது.

 

4. நேப்பாளத்தின் இனக்குழுப் பன்மையைப் புரிந்து, ஏற்றுக் கொண்டு கூட்டாட்சி அமைத்திடும் திட்டத்தை முன்வைத்தது.

 

5.புரட்சியின் மூலம் அரசைக்  கைப்பற்றினாலும் பல கட்சி ஆட்சிமுறையைச் செயல்படுத்திட உறுதி அளித்தது. (பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி முறையைக் கைவிட்டது).

 

6.பார்ப்பனிய மற்றும் சாதி ஆதிக்கங்களை எதிர்த்தது.

 

7. ஆய்தப் போராட்டம் மூலம் தங்கள் வசம் வந்த நிர்வாகப் பகுதியை தக்கவைத்துக் கொண்டே சமவெளிப் பகுதிகளில் மக்கள் திரள் பேரெழுச்சியை ஏற்படுத்தி அரசைப் பணிய வைத்தது. அதன்

வலுவில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து, பிறபகுதி செல்வாக்கை அத்துடன் இணைத்தது.

 

இந்திய அரசின் நிலை

 

இத்தேர்தலில் இந்திய அரசு, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நிலை எடுத்து, மேற்கண்ட நாடாளுமன்றவாத வலதுசாரி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தது. அதற்கான மறைமுக வேலைகளிலும் ஈடுபட்டது. சி.பி.எம். கட்சி இந்திய அரசின் பிரதிநிதி போலவே நேப்பாள அரசியலில் நடந்து கொண்டது. வட அமெரிக்க அரசு, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான வேலைகளை இத்தேர்தலில் செய்தது. இந்த அளவு மக்கள் ஆதரவைப் பெற்ற பின்னரும் கூட, நேப்பாள மாவோயிஸ்ட் கட்சியை இன்னும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலேயே அது வைத்துள்ளது.

இந்திய அரசுடன் நல்லுறவைப் பேணும் அதே வேளை, 1950- இல் சமத்துவ மற்ற நிலையில் போடப்பட்ட நேப்பாள இந்திய ஒப்பந்தத்தைக் கைவிடுNஆவாம் என்று பிரசண்டா கூறுகிறார்.

 

எச்சரிக்கை வேண்டும்

கம்யூனிசத் தத்துவம் தோற்றுவிட்டது என்று உலக முதலாளியம் தம்பட்டம் அடித்துவரும் இக்காலத்தில் கம்யூனிச ஒளிச்சுடரை உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்றி வைத்துள்ள நேப்பாளி மக்களையும் நேப்பாள மாவோயிஸ்ட் கட்சியையும் நெஞ்சாரப் பாராட்ட வேண்டும். எதிர்காலத்தில் பல இடையூறுகளைத் தாண்டித்தான் இப்பொழுது கிடைத்துள்ள வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்.

 

தமிழ்த் தேசியப் புரட்சியாளர்கள் நேப்பாளப் புரட்சியிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும.; அதே நேரத்தில் அதை அப்படியே காப்பிடியக்கக்கூடாது

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.