ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியமும் சர்வதேசியமும் - அமரந்த்தா


(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2009 மாத இதழிலில் வெளியான கட்டுரை)

“அழிக்கவே முடியாத பயங்கரவாத அமைப்பு என்று கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்தொழித்த ராஜபக்சே நமது பாராட்டுக்கு உரியவர். இத்தகைய பயங்கரவாத அமைப்புக்களால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணம்”

லிபியாவில் கடந்த 4.9.09 அன்று ராஜபட்சேயுடன் கைகுலுக்கி இவ்வாறு கூறியிருப்பவர் யார் தெரியுமா? பொலிவாரிய குடியரசான வெனிசுவேலாவின் தலைவரும், 21ஆம் நூற்றாண்டு லத்தீன் அமெரிக்காவைக் கட்டியெழுப்பும் பணியில் பல மைல் கற்களைக் கடந்து வந்து மூன்றாமுலக ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றவருமான ஹூகோ சாவேஸ்! லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைவுக்கான அவரது முன்முயற்சிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன.
ஆனால் மறுபுறமோ, சோசலிச சர்வதேசியத்திற்கு முற்றிலும் முரணாக, இலங்கைத் தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமைக்கு எதிராக இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்குத் துணைபோகின்றன. இந்தச் சீரழிவு நிலைமைக்கான காரணத்தை நாம் ஆராய வேண்டும். லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்திற்கு அந்தக் கடமை இருக்கிறது.

கியூபா எதற்காக இந்தியாவின் அல்லது இலங்கை அரசின் பரப்புரைக்குச் செவிசாய்த்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைபாடு எடுக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு பலவித பதில்கள் இருக்கக்கூடும். அதில் முதலாவது, சீனாவின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் வட அமெரிக்கா நுழையாமல் தடுப்பது. காரணம் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் வர்த்தக/பண்டமாற்று ஒப்பந்தங்களின் மூலம் சீனா உறவு கொண்டிருக்கிறது.

இரண்டாவதாக, ‘விடுதலைப்புலிக்கு எதிரான போரில்’ வட அமெரிக்கா “இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பதால்” எழும் ஐயப்பாடு. முன்பு கியூபாவிலும் நிகராகுவாவிலும் புரட்சிகர அரசுகள் ஆட்சிக்கு வந்தபோது மனித உரிமை மீறல் என்ற குற்றஞ்சாட்டித்தான் பல அத்துமீறல்களைச் செய்தது வட அமெரிக்கா.

மூன்றாவதாக, மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைக்கு முயலும் இயக்கங்களுக்கு ஆதரவளித்து அரசை பலவீனமாக்கி பிளவுபடுத்தும் வட அமெரிக்க சதியாக இலங்கைத் தமிழர் ஆதரவைப் புரிந்து கொண்டது.

இத்தகைய ஐயங்களுக்குக் காரணமில்லாமல் இல்லை. அறுபதுகளில் காங்கோவில் லுமூம்பா தலைமையிலான முற்போக்கு அரசை பலவீனப்படுத்தி வீழ்த்த சி.ஐ.ஏ. அந்நாட்டின் ‘கத்தங்கா’ என்ற பிரிவினைவாத இயக்கத்திற்கும் ஆதரவளித்தது. இறுதியில் லுமூம்பா படுகொலை செய்யப்பட்ட நிகழ்வானது, பிரிவினைவாத இயக்கங்கள் குறித்து கியூபாவின் கண்ணோட்டத்தை மாற்றியது. இன்று வெனிசுவேலாவின் எண்ணெய் வளமிக்க மாகாணங்களையும் பொலிவியாவின் இயற்கை எரிவாயுவும் பிற கனிமங்களும் விளையும் மாகாணங்களையும் பிரிக்க முயலும் அரசுக்கு எதிரான பெருமுதலாளிகளுக்கு வட அமெரிக்காவின் கூலிப்படைகள் உதவி வருகின்றன.

நான்காவதாக, கடந்த 50 ஆண்டுகளாக வட அமெரிக்க வர்த்தகத் தடையின் கீழ் திணறிக் கொண்டிருக்கும் கியூபா, ஐ.நா. சபை போன்ற சர்வதேச அரங்குகளில் முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்காக, இயன்றவரை மூன்றாமுலக நாடுகளுடன் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள முயல்வது. நட்பு நாடுகள் தனது சொந்த மக்களையே ஒடுக்கும் போது விமர்சிக்காமல் விட்டுவிடுவதான் இதில் வேதனை. சர்வதேச சமூகம் கியூபாவுக்கு ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவதற்குக் காரணம் அதன் போற்றத்தக்க அயலுறவுக் கொள்கை தான். கியூபா அங்கோலாவுக்கு அளித்த ஆயுத உதவி தான் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை வீழ்த்தியது. உலகின் பல நாடுகளின் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க மருத்துவக் குழுக்களை கியூபா அனுப்புகிறது. இயற்கைச் சீற்றங்களால் பேரழிவுகளைச் சந்திக்கும் நாடுகளுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து(வட அமெரிக்க மாணவர்களுக்கும் கூட) வரும் ஏழை மாணவர்களுக்கு 5 ஆண்டுகால மருத்துவப் பட்டப்படிப்பை இலவசமாக வழங்குகிறது.

போற்றத்தக்க இந்த மனிதாபிமான சர்வதேசக் கொள்கை “மனித உரிமைப் பாதுகாப்பு” என்ற பெயரில் இலங்கைவாழ் தமிழ் இன அழிப்பிற்கு துணைபோனது தான் கியூபா வரலாற்றின் ஒரு சறுக்கல் - தமிழ் இனத்தின் மிகப்பெரும் சோகம்.

தமிழர் என்ற இன உணர்வின் அடிப்படையிலும், சோசலிச நிலைமாற்றத்தில் நம்பிக்கை உடையவர்கள் என்ற முறையிலும், இன்று வட அமெரிக்காவிற்கான பொலிவேரிய மாற்றினையும் ‘தெற்கு வங்கி’யையும் நாம் வரவேற்கிறோம். இவை ஏழை லத்தீன் அமெரிக்க நாடுகளை விட அமெரிக்காவின் கீழியங்கும் ராணுவ சர்வாதிகாரி களிடமிருந்து மீட்கின்றன் உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் ஆகியற்றின் அடிமைகள் ஆகாமல் காப்பாற்றுகின்றன. வெறும் அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்லாமல், ஜனநாயகம் என்பது சமூக மாற்றத்திற்கான அனைத்து திட்டங்களிலும் நேரடியாக பங்கேற்க மக்களுக்கு அதிகாரமளிப்பது என்று நிறுவுகின்றன.

பொலிவார் கனவுகண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டிணைவைச் சாதிக்கின்றன. லத்தீன் அமெரிக்காவிற்கு மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளுக்கும் லத்தீன் அமெரிக்காவின் சோசலிச மாற்றங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலை தரக்கூடிய அரசியல் நடவடிக்கைகள் இக்கண்டத்தில்தான் முன்னெடுக்கப் படுகின்றன. இயற்கை வளங்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. காடுகள் வளர்க்கப்படுகின்றன. நீராதாரங்களை விட்டு அந்நிய முதலாளிகள் விரட்டப்பட்டுள்ளனர். கல்வி, உணவு, மருத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகள் உழைக்கும் மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்கப்படுகின்றன. தேசிய வளங்களும் ஆற்றலும் பெருமிதமும் மீட்கப்பட்டு வருகின்றன. எனவே சர்வதேசிய ஒருங்கிணைவை விரும்பும் நாம், 21ஆம் நூற்றாண்டின் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், லத்தீன் அமெரிக்காவுடனான ஒருமைப் பாட்டை உருவாக்கிக் கொள்ளும் தேவையிருக்கிறது.

பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் இயற்கை வளமிக்க மாகாணங்களில் வட அமெரிக்காவின் தூண்டுதலால் அதிகார வர்க்கத்தினர் நடத்தும் அரசுக்கு எதிரான போராட்டங்களையும், இலங்கையின் சிறுபான்மைத் தமிழினம் நடத்தும் தன்னாட்சி உரிமைக்கான போராட்டங்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டன கியூபா, பொலிவியா, நிகரகுவா, வெனிசுவேலா ஆகிய நாடுகள். 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சோசலிச நாடுகளல்லவா ஆதரிக்க வேண்டும்? தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்காமல் சோசலிச சர்வதேசியம் உருவாக வாய்ப்பே இல்லை. சோசலிச சர்வதேசியத்தை உருவாக்குவதில் முதன்மையான பங்களிப்பைச் செய்தவர் சேகுவேரா.

“மனித குலத்தின்பால் சகோதரத்துவ உணர்வை உண்டாக்கும் மனநிலை மாற்றம் நிகழாதபோது, சோசலிசம் நிலைபெற முடியாது. அத்தகைய உணர்வுநிலை சோசலிசம் உருவாகிவிட்ட அல்லது உருவாகிவரும் நாடுகளிலுள்ள மக்கள்மீது மட்டுமின்றி, உலகளவில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட அனைத்து நாடுகளின் மக்கள் மீதும் உருவாக வேண்டும்” - என மிகத் தெளிவாக தனது கருத்தைக் கூறிச் சென்றிருக்கிறார் அவர்.

இன்று கியூபாவில் சீன வளர்ச்சி மாதிரியை ஏற்றுக் கொண்டு பின்பற்றும் போக்கு நிலவுகிறது. சீனாவின் சந்தை சோசலிசம் கியூபாவை மீண்டும் முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்தும் அபாயமிருக்கிறது. இத்தகைய போக்கிற்கு எதிராக மீண்டுமொரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. ஐந்து ஆண்டுகள் தொழில்துறை அமைச்சராக இருந்து சேகுவேரா செயல்படுத்திய சோசலிச பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் கியூபாவில் நடைமுறைக்கு வரவேண்டும். அதுபோல, இன்று சேவின் கருத்துக்களின் அடிப்படையில் சமூக மாற்றங்களைச் செயல்படுத்தி வரும் வெனிசுவேலா, சர்வதேச ஒருங்கிணைவுக்கான சரியான வழிமுறைகளை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.

மக்களை அதிகாரப்படுத்துதல் என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களிலிருந்து நாம் நமக்குத் தேவையான பாடங்களைக் கற்க வேண்டும். அதே வேளையில் அந்நாடுகளின் செயல்பாடுகளை விமர்சன ரீதியாக ஹிμமீ வேண்டும்.

பெரும்பாலான லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் ஈழத்தமிழர் போராட்டம் குறித்த தகவல்கள் தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை” Socialism of the 21st Century by Michael Lebovitz என்ற நூலை எழுதியவரும், கடந்த சில ஆண்டுகளாக வெனிசுவேலாவில் தங்கியிருந்து அந்நாட்டின் சோசலிச மாற்றங்களை திட்டமிடும் மார்க்சிய அறிஞர் குழுவில் இடம்பெற்றவருமான மைக்கேல் லெபோவிட்ஸ் கூறியிருப்பதைப் பார்க்கலாம்.

மேற்குலக இடதுசாரிகள் பலரைப் போலவே இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்குமிடையே நடைபெறும் போர் குறித்து எந்த விவரமும் தனக்குத் தெரியாமல் இருந்தது என்றும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்குச் சென்றபோது தமிழர்களின் நிலையை அவர்களே சொன்னதையும், தமிழர் ஆதரவாளரான சிங்கள மருத்துவர் ப்ரியன் செனவிரத்ன சொன்னதையும் கேட்டுத்தான் இது இலங்கை அரசின் தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கை; காசாவிலும் (பொதுவாக பாலஸ்தீனத்திலும்) இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஒப்பானது என்று அறிந்து கொண்டதாகவும் லெபோவிட்ஸ் கூறுகிறார். இந்த அறியாமையே இலங்கைத் தமிழர் அவலம் வெளித் தெரியாமல், வெறும் தமிழ்ப் புலிகளின் மீதான எதிர்ப்பு என்று கூறப்பட்டதை நம்பக் காரணமாயிற்று என்கிறார். இந்தப் பின்னணியில் தான் ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கியூபா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததையும் நான் புரிந்து கொள்கிறேன்; எனவே ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் உண்மை நிலவரத்தை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அவர் கோரியுள்ளார்.

ஈழப்போராளிகளும், ஈழ ஆதரவாளர்களும் மக்கள் உரிமை «பீμம் கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தை அவர்களுக்குத் தெரியச் செய்ய வேண்டும். ஈழத்தமிழரின் தேசிய இனப் போராட்டத்திற்கு லத்தீன் அமெரிக்க அரசுகளின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அது இன்று சிறுமைப்படுத்தப்பட்டு, வதைக்கப் பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்க உதவும். அதுதான் ‘வடக்கின் வசந்தம்’ போன்ற இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிக்க உதவும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 2009 மாத இதழிலில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.