சிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்! அடிபணிந்தது கல்லூரி நிர்வாகம்!
குமாரபாளையம் தனியார் கல்லூரி மாநாட்டில் சிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்! அடிபணிந்தது கல்லூரி நிர்வாகம்! தமிழர் கோரிக்கை வெற்றி!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ். எஸ். எம். தனியார் பொறியியல் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 22) முதல் இரண்டு நாட்கள் வரை நடைபெறும், பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடக்க இருப்பதாகவும், அம்மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து ஏழு சிங்களப் பெண்கள் வருவதாகவும் தகவல் வெளியானது.
தமிழக சட்டப் பேரவையில், இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், இத்தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கையாகக் குமாரபாளையம் எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரியின் செயல்பாடு உள்ளது எனக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், இதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று(21.08.2014) காலை 11 மணியளவில், கல்லூரிக்கு தமிழ்த் தேசியப் பேரியக்க ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கண.குறிஞ்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் குமரகுருபரன், சி.பி.ஐ. வழக்கறிஞர் ச.பாலமுருகன் ஆகியோர் அடங்கியக் குழுவினர் நேரில் சென்றனர். அங்கு, கல்லூரி தாளாளர் திரு. மதிவாணன் அவர்களை சந்தித்த போது, இணையதளம் மூலம் சிங்களப் பெண்கள் இம்மாநாட்டில் பங்கேற்க கோரிக்கை விடுத்ததாகவும், தற்போது சிங்களர்களைக் கலந்து கொள்ள வேண்டாமென தாம் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து, காவல்துறைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எழுதிய கடிதத்தையும் அவர் தோழர்களிடம் கையளித்தார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் சிங்களர்களின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கோவை. கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மாநாட்டிற்கு சிங்களர்களை அனுமதிக்கப் போவதில்லை என கல்லூரி நிர்வாகமே அறிவித்து விடட நிலையில், மதுரை விமான நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
Leave a Comment