தமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள சர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை இந்திய அரசு நாடு கடத்த வேண்டும்!
தமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள
சர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை
இந்திய அரசு நாடு கடத்த வேண்டும்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத்
தஞ்சை மாவட்டச் செயற்குழு தீர்மானம்
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று (24.10.2014) காலை 10 மணிக்கு தஞ்சையில், பேரியக்கத்தின் அலுவலகத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் நா.வைகறை, இரெ.கருணாநிதி, விடுதலைச்சுடர், இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தேவதாசு, தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இலெ.ராமசாமி, வழக்கறிஞர் மு.கரிகாலன், தோழர் க.காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண்: 1
தமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள சர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை இந்திய அரசு நாடு கடத்த வேண்டும்
தமிழீழத்தில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபட்சேயை பாராட்டி இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று தலைமை அமைச்சருக்கு சுப்பிரமணிய சாமி கோரிக்கை வைத்துள்ளார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் 12 கோடி தமிழர்களின் நெஞ்சங்களில் தீக்கோலால் குத்தியது போன்ற மனத்துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சாமி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்துக் கொண்டு சதிச்செயல் புரிந்து தமிழர்களுக்கு பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறார்.
தமிழக மீனவர்கள் 600 பேர்களுக்கு மேல் சிங்களப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போதும் அன்றாடம் தமிழக மீனவர்களை சிங்கள படையாட்கள் தாக்கியும், கைது செய்து சிறையிலடைத்தும் படகுகளை பறிமுதல் செய்தும் தமிழக கடற்பகுதியிலும் சர்வதேச கடற்பகுதியிலும் மீன் பிடிக்கவிடாமல் தடுத்தும் அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து வருகிறார்கள். இது பற்றி அண்மையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது சுப்பிரமணிய சாமி நான் தான் படகுகளை விடவேண்டாம் என்றும், மீனவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள் என்றும் இராசபட்சேவிடம் சொன்னேன் என்று கூறினார்.
இப்போது இனப்படுகொலை குற்றத்திற்காகவும் போர்க் குற்றத்திற்காகவும் பன்னாட்டு அரங்கிலும் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும் விசாரணைக்கு உள்ளாகியுள்ள - மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்த இராசபட்சேயை மேற்படி குற்றங்கள் செய்ததற்காக பாராட்டி இந்திய அரசின் மிகப்பெரிய விருதான பாரதரத்னா விருதை வழங்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கோரிக்கை வைப்பது தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் மனித குலப் பகைவன் இராசபட்சேயின் இனக்கொலை வெறியை மேலும் மேலும் தூண்டிவிடுகின்ற குற்றச் செயலுக்காகவும் சுப்பிரமணிய சாமியை நடுவண் அரசு இந்தியாவிலிருந்து நாடு கடத்தி வெளியேற்ற வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. சுப்பிரமணிய சாமியை இந்தியாவிலிருந்து வெளியேற்ற விரும்பாவிட்டால் இந்திய அரசு தமிழர்களின் தற்காப்புக்காக தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து விடுவிக்குமாறு இந்திய அரசை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 2
தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலின் பரம்பரை அறங்காவலர் பெறுப்பிலிருந்து மராட்டிய பாபாஜி பான்ஸ்லேயை தமிழக அரசு நீக்க வேண்டும்.
தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் சோழப் பேரரசர்கள் எழுப்பிய இதர கோயில்கள் உள்ளிட்ட 88 கோயில்களை கொண்ட அரண்மனைத் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக தஞ்சை மண்டலத்தை ஒரு காலத்தில் ஆக்கிரமித்த மராத்திய இனத்தை சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவர் இருக்கிறார். இன்றைக்கும் அவர் மேற்கண்ட கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக இருப்பது இந்து அறநிலைய சட்டத்திற்கும் முரணானது, வரலாற்று உண்மைகளுக்கும் எதிரானது, தமிழர் தன்மானத்திற்கும் பாதகமானது.
பாபாஜி பான்ஸ்லே சோழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர் தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தஞ்சையை ஆண்ட மாராத்திய அரசர்களின் சட்டப்பூர்வ வாரிசும் அல்லர். ஒருவர் சொந்தமாக கோயிலைக் கட்டி அதற்கு தன் சொத்துக்களை எழுதி வைத்து அதனுடைய அன்றாட வழிப்பாட்டு செலவுகளுக்கு பணம் கொடுத்து பராமரித்து வந்தால்தான் அவர் ஒரு கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும் என்பது இந்து அறநிலையச் சட்டம் விதிக்கும் நிபந்தனையாகும்.
எனவே மேற்கண்ட மூன்று கூறுகளுக்கும் பொருந்தாத மாராத்திய பாபாஜி பான்ஸ்லேயை தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.
எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு பாபாஜி பான்ஸ்லேயை பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கி மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களை தமிழக அறநிலையத்துறையில் சேர்க்குமாறு தமிழக அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
சரஸ்வதி மகால் நூலகம்
உலகில் மிகத் தொன்மையான ஓலைச்சுவடிகளையும் அரிய நூல்களையும் கொண்டுள்ள நூலகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமாகும். இந்த நூலகம் உரிய பராமரிப்பின்றி அன்றாடம் அழிந்து கொண்டுள்ளது. இதற்குரிய இயக்குனர் பதவி நிரப்பப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. நிர்வாக அலுவலர் (A.O.) பதவியும் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்நூலகத்திற்கு உரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 60 பேர். ஆனால் இப்பொழுது இருப்பதோ வெறும் 20 பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கையே இந்நூலகம் கவணிப்பாறின்றி சீரழிந்து கிடக்கிறது என்பதற்கான சான்று.
இந்த நூலகத்தில் அரிய நூல்கள் திருட்டுப் போகின்றன. உரியவாறு புதிய நூல்கள் பதிப்பிக்கப்படுவதில்லை. எனவே சரஸ்வதி மகால் நூலகத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, அதற்கேற்ப அங்கு அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவைக் கலைத்து, பள்ளிக்கல்வி அமைச்சகத்திலிருந்து இந்நூலகத்தை விடுவித்து, தனிச்சிறப்பு நூலகமாக தமிழக அரசு தனது பொறுப்பில் ஏற்று, இந் நூலகத்திற்கு புத்துயிரூட்டி அதன் செயல்பாடுகளை சிறப்புறச் செய்யுமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. உடனடியாக காலியாக உள்ள இயக்குனர், நிர்வாக அலுவலர், அலுவலர்கள் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவேண்டுமென்றும் மாவட்டச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.
தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவற்றின் கோரிக்கைக்காக இராசராசன் சதய விழா நாளான 02.11.2014 அன்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெறும் பேரணியில் திரளாக கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a Comment