நடுவண் அரசின் கேந்திர வித்யா பள்ளிகளில் செர்மன் மொழி நீக்கம் என்ற பெயரால் சமற்கிருதத்தைத் திணிக்கக் கூடாது!
நடுவண் அரசின் கேந்திர வித்யா பள்ளிகளில் செர்மன் மொழி நீக்கம் என்ற பெயரால் சமற்கிருதத்தைத் திணிக்கக் கூடாது!
சிதம்பரம் தமிழகப் பெருவிழாவில் தமிழ்க் காப்பணி கோரிக்கை!
1956 நவம்பர் 1-ல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவானதை நினைவுக் கூர்ந்து ஆண்டுதோறும் சிதம்பரம் தமிழ்க் காப்பணி அமைப்பு தமிழகப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது.
இதன்படி இந்த ஆண்டும் தமிழ்க்காப்பணி சார்பில் தமிழகப் பெருவிழா 23.11.2014 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் நடைப்பெற்றது.
சிதம்பரம் ஆறுமுக நாவலர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தமிழ்க் காப்பணி தலைவர் திரு. அழ.பழநியப்பன் அவர்கள் தலைமைத் தாங்கி நிகழ்வினை தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் திரு. இராம. ஆதிமூலம், திருமதி ஜோதிமணி பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் வரவேற்றுப் பேசினார்.
தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம் காண்போர் மனதை கவரும் வகையில் அமைந்தன. மாணவர்களுக்கு பயிற்சியளித்த, தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் திரு. இரா. எல்லாளன் அவர்களுக்கு, ஆசிரியர் மு.முருகவேள் சிறப்பு செய்தார்.
தமிழ்க் காப்பணி சார்பில் சிதம்பரம் வட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே 16.11.2014 அன்று நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து, தமிழ்க் காப்பணி பொதுச் செயலாளர் திரு. பா.பழநி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் பொறியாளர் க.அருணபாரதி, தமிழகத்தில் அதிகரித்து வரும் வெளியார் சிக்கல் குறித்து ஒளிப்படங்களுடன் சிறப்புரை நிகழ்த்தினார். திரு. மு.சம்பந்தம் நன்றி கூறினார்.
நடுவண் அரசின் கேந்திர வித்யா பள்ளிகளில் செர்மன் மொழி நீக்கம் என்ற பெயரால் சமற்கிருதத்தைத் திணிக்கக் கூடாது, மொழிப் போர் வரலாற்றை தமிழகப் பாட புத்தகங்களில் பாடமாக சேர்க்க வேண்டும், தில்லை நடராசர் கோயிலை தமிழக அரசே ஏற்று நடத்த தனிச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும், பெற்றோர்களும், உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர்.
Leave a Comment