ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழக உழவர் முன்னணி ஆலோசகருக்கு சிறந்த செயற்பாட்டாளர் விருதளிப்பு..!



தர்மபுரியில் சிறப்புற நடைபெற்ற மாற்று வாழ்வியலுக்கான ஒன்றுகூடல்..!
தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களுக்கு சிறந்த செயற்பாட்டாளர் விருதளிப்பு..!

தளிர்கள் மற்றும் ஐந்திணை வாழ்வியல் நடுவம் அமைப்புகளின் சார்பில், தர்மபுரியில், நேற்று (பிப்ரவரி – 28) நடைபெற்ற, ‘மூலிகை முன்றில்’ என்ற தலைப்பிலான மாற்று வாழ்வியலுக்கான ஒன்றுகூடல் – 2015 நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

தருமபுரி பாரதிபுரம் மதுராபாய் திருமண மண்டபத்தில், மாலை 3 மணியிலிருந்து நடைபெற்ற இந்நிகழ்வில், சூழலியல் புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், சூழலியல் சார்ந்த கருத்தரங்குகள், புத்தக வெளியீடு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் திரு. விவேகானந்தன், புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

‘யாருக்கானது பள்ளிகள்?’ என்ற தலைப்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களும், இயற்கை வழிபாடு’ என்ற தலைப்பில் சூழலியலாளர் திரு. பியூஷ் மனுஷ் அவர்களும், ‘சங்க காலத்தில் உழவு’ என்ற தலைப்பில் இயற்கை வேளாண் அறிஞர் திரு. பாமயன் அவர்களும், ‘நீராதிபத்தியம்“ என்ற தலைப்பில் எழுத்தாளர் நக்கீரன் அவர்களும், ‘சுதந்திர வாழ்வு’ என்ற தலைப்பில் திரு. ஃபெலிக்ஸ் அவர்களும், ‘யாருடைய குழந்தைகள் நாம்?’ என்ற தலைப்பில் திரு ஷாஜி அவர்களும், கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தினர்.

தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், ‘சூழலியல் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களது, ‘உண்மை வளச் சமூகம்’ என்ற நூல் உள்ளிட்ட ஐந்து நூல்கள் நிகழ்வின் போது வெளியிடப்பட்டது.

விழாவின் நிறைவில், சமூக செயல்பாட்டளர்களுக்கு விருதளித்து கவுரவிக்கப்பட்டது. சிறந்த கல்வியலாளர் விருது திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களுக்கு வழங்கப்பட்டது. உதவும் உள்ளங்கள் திரு. மாணிக்கம் அவ்விருதை வழங்கினார். சிறந்த சூழலியலாளர் விருது, இயற்கை வேளாண் அறிவர் திரு. பாமயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சூழலியல் எழுத்தாளர் திரு. நக்கீரன் அவ்விருதை வழங்கினார்.

சிறந்த செயற்பாட்டாளர் விருது, தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் இரா. முருகவேள் அவ்விருதை வழங்கினார்.

நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், சூழலியல் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.