ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரிப் பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்ல டெல்டா மாவட்டங்களில் ஊர்திப் பரப்புரை இயக்கம்!

காவிரிப் பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்ல டெல்டா மாவட்டங்களில் ஊர்திப் பரப்புரை இயக்கம்!

திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!
மேக்கேதாட்டில் கர்நாடகம் நான்கு அணைகள் கட்டத் திட்டமிட்டுள்ளது குறித்தும் காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் இரசாயனக் கழிவுநீர் திறந்து விடுவதைத் தடுப்பது குறித்தும், குறுவை சாகுபடிக்குக் கர்நாடக அரசிடம் தமிழக அரசு தண்ணீர் பெறவேண்டிய அவசரம் குறித்தும், தமிழக மக்களிடம் கொண்டு செல்ல, அடுத்த மாதம் டெல்டா மாவட்டங்களில் வாகனப் பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், இன்று திருவாரூரில் அறிவித்தார்.

காவிரிச் சிக்கலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, திருவாரூரில் இன்று (18.06.2015) காலை, காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. மு. சேரன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மனித நேய மக்கள் கட்சி திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு. சீனி ஜாகுவார் அலி, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், ஆலோசகர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, வேதை விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஒளிச்சந்திரன், தமிழர் நீதிக்கட்சித் தலைவர் திரு. சுபா. இளவரசன், தமிழக உழவர் முன்னணித் தலைவர் திரு. சி. ஆறுமுகம், தமிழர் தன்மானப் பேரவை பொறுப்பாளர் திரு. பிரகாசு, தமிழர் தேசிய முன்னணி இயக்கப் பொறுப்பாளர்கள் மருத்துவர் பாரதிச்செல்வேன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் தோழர் கலைச்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, காவிரி உரிமை மீட்புக் குழு தோழர் பழ. இராசேந்திரன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த.கவித்துவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தோழர் பெ. மணியரசன், “கர்நாடகம் காவிரியில் மேகேதாட்டுவில் புதிதாக 4 அணைகள் கட்ட கர்நாடம் முயற்சி செய்வதை தடுப்பது, காவிரியில் ரசாயணக் கழிவுகள் கலப்பதை தடுப்பது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்பிடி கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது, காவிரி மேலாண்மைய அமைப்பு ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சியினரை அழைத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்யும் வகையில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், சூலை 16 முதல் 18 ஆம் நாள் வரை, திருச்சி மாவட்டம் - குளித்தலை, தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்குடி, நாகை மாவட்டம் - வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் ஊர்திப் பரப்புரை இயக்கம் நடைபெறும்.

சூலை 18ஆம் நாளன்று, பூம்புகாரில் இந்த நான்கு அணிகளின் ஊர்திப் பரப்புரையும் நிறைவு செய்யப்பட்டு, அன்று மாலை பூம்புகாரில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்!” என்றார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.