“வடநாட்டு வணிக முதலைகளைப் பாதுகாப்போம்” – மு.க.ஸ்டாலின் வாக்குறுதி! இதுதான் இன்றையத் திராவிடம் - தோழர் பெ. மணியரசன் சாடல்!
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வட சென்னை சௌகார்பேட்டை நாட்டுப்
பிள்ளையார் கோயில் தெருவில் மார்வாடி - குசராத்தி சேட்டுகளிடம் 02.02.2016 அன்று
“நமக்கு நாமே” பரப்புரையில் வாக்கு வேட்டை நடத்தப் போனபோது பேசிய பேச்சு
தமிழர்களின் கவனத்திற்குரியது.
“வட இந்தியர்களை நாங்கள்
பிரித்துப் பார்த்ததில்லை. நீங்கள் விட்டாலும் நாங்கள் உங்களை எங்களிடமிருந்து
பிரிய விட மாட்டோம். பல்வேறு மாநிலத்தவர்களைப் பார்க்கும்போதுதான் வேற்றுமையில்
ஒற்றுமை காண்கிறோம். சென்னையில் மெட்ரோ ரயில் ஓடுகிறது என்றால் அதற்கான பணியில்
தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் வட இந்தியர்கள். நாங்கள் ஆட்சிக்கு
வந்தால் வட இந்தியர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்”.
“நாம் இந்தியர்கள்; ஒற்றுமையுடன்
இணைந்து வாழ வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வட இந்தியர்கள் துணை
நிற்க வேண்டும்” (தினந்தந்தி,
03.02.2016).
வட இந்தியாவின் ஆதிக்கத்தையும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களின்
ஆதிக்கத்தையும் எதிர்த்துப் பேசி - தமிழர்களின் உரிமையை மீட்கவே தி.மு.க.
தொடங்கப்பட்டது என்று பேசி தமிழர்களின் ஆதரவைப் பெற்று வளர்ந்த கட்சி தி.மு.க.
“வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்றும், “வடவர் நம்மவரும் இல்லை;
அவர்கள் நல்லவரும் இல்லை” என்றும் அன்று அண்ணா பேசினார்.
வடவர் ஆதிக்கம் பற்றி அன்று அண்ணா கூறியவை:
“வாணிபம்
முழுதும் வடநாட்டார் வசம்விட்டு வாழ வழியின்றித் திண்டாடுகிறோம். நம்முடைய நாட்டில்
(சென்னை மாகாணம்) இரும்புண்டு, தங்கமுண்டு, கட்டையுமுண்டு கப்பல்கட்டவும்,
பருத்தியுண்டு, பட்டுத்துணி நெய்ய எல்லாம் இருக்கின்றன. ஆனால் முதன்மையான வியாபாரிகள்
யாவரும் வட நாட்டாரே. வைரம் வேண்டுமா? சுராஜ் மல்லுக்குப் போக வேண்டும். வெள்ளி,
தங்க நகைகளா? பாபாலால் இருக்கிறது. இரும்பு சாமான்களா? டாட்டாவை விட்டால் வேறு
கதியில்லை, விதியில்லை. பருத்தி ஆடைகளா? தலாலியிடம் தஞ்சமடைந்தால்தான் தாராளமாய்க்
கிடைக்கும். பட்டாடைகளா? செல்லாராமுக்குச் செல்ல வேண்டும். சிமிட்டி வேண்டுமானால்
டால்மியாவிடம் ஏஜெண்டாக அமரத்தான் வேண்டும். பல சரக்கு சாமானுக்கோ, குப்தாவிடம்
கெஞ்ச வேண்டும். மருந்து வகைகளா? தாதாவிடம் தாளம் போட வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம்.
ஆரம்ப முதலாளியாக வடநாட்டார் வகையாக அமர்ந்துவிட்டிருக்கின்றனர். நம்மவரெல்லாம்
அவர்களுடைய தரகர்களாய்த்தான் வாழ்க்கை நடத்த முடிகிறது. நடத்துகின்றனர்”.
- பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள், தொகுதி -1,
பூம்புகார் பதிப்பகம், பக்கம் 194, 195.
அதே தி.மு.க.வின் இன்றையத் தளபதி மு.க. ஸ்டாலின் சென்னையில் வாழும் வணிகக்
கோமான்களான வடநாட்டார் – தாங்கள் விடை பெற நினைத்தாலும் விடமாட்டோம், எல்லாச்
சலுகைகளும் தருகிறோம் – இங்கேயே இருங்கள் என்கிறார்.
அந்த வடநாட்டாரும் வணிக வரித்துறையில் மாற்றம் வேண்டும் என்று மனுக்
கொடுத்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் அப்படியே செய்வோம் என்று உறுதி கொடுத்துள்ளார்
ஸ்டாலின்! இதுதான் இன்றையத் திராவிடம்!
மார்வாரி – குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், தெலுங்கர்கள் ஆதிக்கம்
தமிழ்நாட்டுத் தொழில் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றது. தமிழ் வணிகர்கள்
அவர்களிடம் கைகட்டி நிற்கும் இழிநிலை! அயல் இன ஆதிக்கக்காரர்களின் பாதுகாப்புப்
பாசறையாக தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகள்!
சரியான, உண்மையான தமிழ்த் தேசிய அமைப்பே தமிழ்நாட்டுத் தொழில் வணிகத்தில்
கோலோச்சும் அயலார் ஆதிக்கத்தைத் தடுத்து, தமிழர் தொழில் வணிக உரிமைகளை நிலை
நாட்டும்!
Leave a Comment