ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

" தமிழகம் அடையும் பயன் என்ன?" தமிழ் இந்து நாளேட்டில் இன்று (20.09.2016) தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் கட்டுரை!

 " தமிழகம் அடையும் பயன் என்ன?" தமிழ் இந்து நாளேட்டில் இன்று (20.09.2016) தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் கட்டுரை!


"தமிழகம் அடையும் பயன் என்ன?" என்ற தலைப்பில், தமிழ் இந்து நாளேட்டில் இன்று (20.09.2016) தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது.


அக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளதாவது:


ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி சென்னை மாகாணத்திலும், அவர்களின் கண்காணிப்பின் கீழ் மைசூரில் மகாராஜா ஆட்சியும் நடந்தபோது, 1860-களில் காவிரி நீர் பயன்பாட்டுச் சிக்கல் இரு ஆட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டது. அவரவர் உரிமையை விட்டுக்கொடுக்காமல், 1892-ல் ‘மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம் - 1892’ போடப்பட்டது. அதன் பிறகு, 1914 தொடங்கி பத்தாண்டுகள் இருதரப்பும் பேச்சு நடத்தி உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்தான் 1924 காவிரி ஒப்பந்தம்.

1958-லிருந்து சிக்கல் எழுந்தது. ஆனாலும் 1968 வரை சிக்கல் இல்லாமல் செயல்பட்டது. இந்திரா காந்தி அரசால் 1972 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு ‘1934 முதல் 1970 வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு ஓர் ஆண்டுக்குச் சராசரியாக வந்த நீர் 378.4 டி.எம்.சி.’ என்று அறிவித்தது.


செயல்படுத்தாத இந்திய அரசு


மேட்டூர் அணையின் பொன்விழா ஆண்டான 1984-ல் தமிழ்நாடு பொதுப்பணித் துறை ‘1934 முதல் 1984 வரை மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வந்த தண்ணீரின் ஆண்டு சராசரி 361.3 டி.எம்.சி.’ என்று அறிவித்தது. இன்று நிலை என்ன? எங்கள் பயன்பாட்டுக்குப் போக உபரியாக இருக்கும் தண்ணீரைத்தான் தருவோம் என்பதுதான் கர்நாடக அரசு மற்றும் கட்சிகளின் அடிப்படைக் கோட்பாடு.

காவிரித் தீர்ப்பாயம் 1991-ல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை. 2007 பிப்ரவரியில் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் 2013 ஜனவரியில், இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்குக் கட்டளையிட்டது. அதையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.


999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம்


‘மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் - 1956’ன்படி, ஒரு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தால், அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல், நடுநிலை தவறி, சட்டத்துக்குப் புறம்பாக அது நடந்துவருகிறது.


முல்லைப் பெரியாறு அணையைத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பஞ்சம் போக்கிட, ஆங்கிலேயர் ஆட்சியில் 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 24 ஆண்டுகள் பேச்சு நடத்தி, 29.10.1886-ல் 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் போட்டது அன்றைய ஆட்சி. இன்று அதன் கதி என்ன?


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்கி வைக்க ஆயிரம் தடைகள் போடுகிறது கேரள அரசு. அந்த அணைக்குத் தேவையான மின்சாரத்தை விலைக்கு விற்க மறுக்கிறது கேரள அரசு. அங்குள்ள சிறிய அணையைச் செப்பனிட செங்கல், சிமென்ட் எடுத்துச் சென்றால், தடுக்கிறது கேரள வனத் துறை. தமிழ்நாட்டுப் பொதுப்பணித் துறை அதிகாரிகள், தாராளமாக முல்லைப் பெரியாறு அணைக்குப் போய்வர முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணையை இடித்துத்தள்ள கேரள அரசியல் கட்சிகள் நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.


ஒப்புதல் இன்றி முடியாது


மத்திய அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் இதில் தலையிடுவதே இல்லை. வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கிப் பாதுகாத்துத் தந்த முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் தமிழ்நாட்டுக்குப் பாதுகாத்துத் தர விடுதலை பெற்ற மத்திய அரசு ஏன் முன்வரவில்லை?


சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 1892-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பாலாற்றில் சென்னை அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடகமோ, ஆந்திரமோ அணை கட்ட முடியாது. ஆனால், பாலாற்றில் தடுப்பணைகள் என்ற பெயரில் குட்டி நீர்த் தேக்கங்கள் பலவற்றைக் கட்டி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வராமல் பாலாற்றைப் பாழ்பட்ட ஆறாக மாற்றிவிட்டது ஆந்திரா. கடைசியாக, வாணியம்பாடி புல்லூர் அருகே சமீபத்தில் 25 அடி உயரம் 12 அடி அகலம் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தைக் கட்டி முடித்திருக்கிறது ஆந்திரம்.


இதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். பலன் இல்லை.


இப்போது கேரளம் சிறுவாணி ஆற்றில், அட்டப்பாடி பகுதியில் அணைகட்ட நடுவண் அரசு சுற்றுச்சூழல் வனத் துறை தொடக்க நிலை அனுமதி வழங்கியுள்ளது. அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் குடிநீருக்கும் பாசனத்துக்கும் வழியில்லாமல் போய்விடும். எல்லாம் அறிந்தும் இந்திய அரசு தலையிட மறுத்துவருகிறது.


தமிழகம் என்ன தருகிறது?


நாட்டுக்கு அதிகம் வருவாய் தரும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். தவிர தமிழர்கள் ஒப்படைத்த நிலங்களிலும் ஊர்களிலும் உருவான நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு சுமாராக 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்துக்கும் கேரளத்துக்கும் போகிறது. அதேபோல் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களிலிருந்தும் மின்சாரம் இம்மாநிலங்களுக்குப் போகிறது.


இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு (ஓஎன்ஜிசி), தமிழ்நாட்டுக் காவிரிப் படுகை இந்தியாவிலேயே உயர்தரமான பெட்ரோலியத்தையும் எரிவாயுவையும் வழங்குகிறது. தமிழ்நாட்டுத் தென்மாவட்டங்கள் தோரியம் மணல் வழங்குகின்றன. இதன் ஏற்றுமதி ஏராளமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.


ஏற்றுமதியில் முதலிடம்


இந்தியா முழுவதும் கடலுணவு ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டும் கிடைக்கிறது. உள்ளாடை ஏற்றுமதி மூலம் ஓராண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை நம் திருப்பூர் மட்டுமே ஈட்டித் தருகிறது. பதனிட்ட தோல் ஏற்றுமதியில் இந்தியா ஈட்டும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கிறது. இந்தியா முழுவதிலுமிருந்து, வேலையற்ற பல லட்சம் பேர் தமிழகம் வந்து வேலை பெற்று வாழ்கின்றனர். இப்படி ஏராளம் பட்டியலிடலாம். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நமக்குத் தரும் மறுபயன் என்ன?


ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்ட தமிழர் உரிமைகளை இந்திய ஆட்சியாளர்கள் பாதுகாக்கவில்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் தேட தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் கவனமே இனி தமிழர் உரிமையை நிர்ணயிக்கும்!”  இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்


2 comments:

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.