ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் : கவிஞர் வைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது! பெ. மணியரசன் அறிக்கை!


அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் : கவிஞர் வைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழினப் பேராசான் திருவள்ளுவர் சிலையை அரித்துவாரில் அவமானப்படுத்தியதில் தருண் விசய்க்கு மட்டுமின்றி அவருடன் சேர்ந்து கூடிக் கும்மியடித்த தமிழ்நாட்டு மேனா மினிக்கிகள் மற்றும் வேடதாரிகளுக்கும் பங்கிருக்கிறது.

தமிழ் முகமூடியுடன் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செய்திடும் முயற்சியில் தருண் விசய்க்கும் ஒரு பங்கிருக்கிறது. ஏற்கெனவே அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழின் ஆசிரியராக இருந்தார்.

அந்தத் தருண் விசயோடு வேறு சில தன்னல நோக்கங்களோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள். தருண் விசய் பற்றி அறிந்தே அவரை இங்கு அழைத்து வந்து பிரபலப்படுத்தும் பார்ப்பனிய ஆற்றல்களும் இங்கு இருக்கின்றன.

இப்பொழுது இவர்களின் முகமூடிகள் கிழிந்து அசல் முகம் அம்பலப்படும் வகையில் அரித்துவாரில் வடநாட்டினர் திருவள்ளுவர் சிலை அமைக்கக்கூடாது என்று சொல்வதுடன் நம் நெஞ்சமெல்லாம் கொதிக்கும் வகையில் நம் பேராசான் சிலையை கருப்பு நெகிழித் தாள்களால் மூடி அவரை விலங்கிட்டதுபோல் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டி, அநாதைப் பிணம் போல் குப்பை மேட்டில் வீசியிருக்கும் காட்சி தெரிவிக்கிறது.

இதுபற்றி கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், “இது திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமல்ல. இந்தியத்தேசியத்துக்கு நேர்ந்த அவமானம” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத்தேசியம்தான் திருவள்ளுவரை அவமானப்படுத்தியிருக்கிறது. அவர் நிற்க நான்கு சதுரடி நிலம் கொடுக்க மறுத்திருக்கிறது. இதுபற்றி இத்தனை நாள் ஆகியும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் முதல்வர் ராவத் உள்ளிட்ட வடநாட்டுத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட உ.பி. ஆளுநர் இராம் நாயக், தமிழ்நாட்டைச் சேர்ந்த - மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க அவர்கள் தலையிடவில்லை.

இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை குப்பை மேட்டில் வீசப்பட்டது இந்தியத்தேசியத்திற்கு நிகழ்ந்த அவமானம் என எந்த வகையில் வைரமுத்து சொல்கிறார்? அவர் வேண்டுமானால், ஆரியப் பார்ப்பனியத்திற்கும் இந்தியத்தேசியத்திற்கும் தாசானு தாசனாய் இருந்து தன்னலம் காத்துக் கொள்ளலாம். தமிழினத்தின் தன்மானத்தை ஆரியத்துக்கு அடகு வைக்கும் உரிமை அவருக்கில்லை.

அடுத்து, “அரித்துவாருக்கும் திருவள்ளுவருக்கும் தொடர்பில்லை என்றால், இந்தியாவுக்கும் தமிழனுக்கும் தொடர்பில்லை என்றாகிவிடும்” என்று கூறிவிட்டு, அடுத்த வரியில் “அப்படி ஆவதை யாரும் விரும்பமாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். கலைஞர் கருணாநிதியிடம் வைரமுத்து கற்றுக் கொண்ட ‘இராசதந்திரம்” இதுதானோ?

முதல் வரியில் வீரர் போல் முழங்கிவிட்டு, அடுத்தவரியில் எதிரியின் காலடியில் வீழ்வது போல் அறிக்கை விடும் கங்காணி வசனங்களை தமிழின இளைஞர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அரித்துவாரில் சங்கராச்சாரியார் சதுக்கப் பகுதியில் திருவள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்று அங்குள்ள பார்ப்பனப் புரோகிதர்கள் தடுத்தார்கள் என்றும், சங்கராச்சாரியார் சிலை இருக்குமிடத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கக்கூடாது என்றும் கூறியதாக செய்திகள் வருகின்றன.

அப்படியென்றால், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் - கும்பகோணம் போன்ற இடங்களில் சங்கர மடங்கள் இருக்கக்கூடாது. அவற்றிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன உறவு இருக்கிறது?

தமிழர்களின் ஆன்மிக நெறிகளான சிவ நெறி - திருமால் நெறி இரண்டிற்கும், ஆதிசங்கரருடைய அத்வைதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது என்ற கேள்வியை தமிழினத்தின் உரிமைக் காப்புக் களத்தில் செயல்பட்டு வரும் நாங்கள் கேட்கிறோம்.
அடுத்து, மீண்டும் சொல்கிறோம். திருவள்ளுவருக்கு நேர்ந்த இந்த அவமானத்தை - தமிழினத்திற்கு நேர்ந்த இந்த அவமானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது அவருக்கு இதுபற்றியெல்லாம் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. அவர் வேறோன்றும் செய்ய வேண்டியதில்லை. திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து உரிய இடத்தில் நிறுவ வேண்டும்.


இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.


இடம் : தஞ்சை

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.