ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அவசரச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அமைச்சர் மேனகா காந்தி வழக்கு: நரேந்திர மோடி அரசின் நயவஞ்சகம் புரிகிறதா? பெ. மணியரசன் அறிக்கை!

அவசரச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அமைச்சர் மேனகா காந்தி வழக்கு: நரேந்திர மோடி அரசின் நயவஞ்சகம் புரிகிறதா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழர் பண்பாட்டுரிமையான ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு, இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி, அறவழியில் போராடி வரும் மாணவர்களையும் இளைஞர்களையும் இன்று (23.01.2017) காலை, காவல்துறையை ஏவி அ.இ.அ.தி.மு.க. அரசு கலைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கலைக்கிற அரசு, அடுத்து அந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமோ என்ற அச்சம், தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பரவி மனதை வாட்டுகிறது.

இன்று காலை வரை அவரசச் சட்டத்தின் முழு நகலை வெளியிடாமல், அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று காவல்துறை மூலம் கட்டாயப்படுத்துவது என்ன நீதி? என்ன சனநாயகம்? அவர்கள் அவசரச்சட்டம் குறித்து கருத்துப் பறிமாறிக் கொண்டு, முடிவு சொல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். அதைக்கூட அரசு தரவில்லை.

நேற்றிலிருந்து, காளைத் திறந்துவிடும்போது, கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் - பரப்புரை செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, சல்லிக்கட்டை தடை செய்த “விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் – 1960”இல் உள்ள பிரிவு 11 இல் 3, பிரிவு 22, பிரிவு 27 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்கள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும்.

இப்பொழுதுதான் (காலை 11 மணி) அவசரச்சட்டத்தின் நகல் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கிறது. இப்பொழுது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், காளையைக் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து, இந்திய அரசும் நீக்கவில்லை. தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டமும் நீக்கவில்லை. தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போனால், அதில் அவசரச்சட்டம் நிற்குமா என்ற கேள்விக்குறி இதனால் எழுகிறது.

நடுவண் அரசில் அமைச்சராக உள்ள பா.ச.க.வைச் சேர்ந்த மேனகா காந்தி, தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து, இப்பொழுதே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நரேந்திர மோடியின் ஒப்புதல் இல்லாமல், அவரது அமைச்சரவையில் உள்ள ஒருவர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்ததாகச் சொல்லும் ஒரு அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போட முடியுமா? பா.ச.க. தலைமையின் நயவஞ்சகத்தின் மற்றுமொரு வெளிப்பாடு இது!

எனவே, தமிழ்நாடு அரசு, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கிட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதை செயல்படுத்திக் காட்டினால்தான், இந்த அவசரச் சட்டத்திற்குப் பாதுகாப்பு.

அதேபோல், சல்லிக்கட்டு நடத்துவதற்கு மிகக் கடுமையான ஒழுங்கு விதிகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த விதிகளை நூற்றுக்கு நூறு கடைபிடித்தால், சல்லிக்கட்டே நடத்த முடியாது. இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு அரசின் இந்த அவசரச் சட்டத்தை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டாவை வெளியேற்ற இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

நேற்றை (22.01.2017), தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், அவசரச்சட்டத்தின் முழு நகலை வெளியிடுங்கள் என்று நான் கோரியிருந்தேன். அத்துடன், காவல்துறையை வைத்து கூட்டத்தைக் கலைக்காதீர்கள் என்றும் தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இன்று விடியற்காலையிலிருந்து, சென்னை கடற்கரை மட்டுமின்றி, தமிழ்நாடெங்கும் அறவழியில் முழக்கம் எழுப்பிப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை, காவல்துறையை ஏவிக் கலைப்பதையும் தமிழ் இளைஞர்களைத் தாக்குவதையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. தமிழினப் பகையோடு செயல்படும், இந்திய ஏகாதிபத்திய அரசுக்கு கங்காணி வேலை பார்த்து, தமிழர்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கக்கூடாது – தமிழர்களைத் தாக்கக்கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடக்குமுறையை இத்துடன் நிறுத்தி, அவசரச்சட்டத்தின் முழு நகலை போராடும் மக்களிடம் கொடுத்து, அதனை அவர்கள் விவாதிக்க அவகாசம் அளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.