ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரித்தாய் காப்பு முற்றுகை

காவிரித்தாய் காப்பு முற்றுகை


உழவர்களே, தமிழர்களே, பேராபத்து - பேராபத்து!

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, அதன் இறுதித் தீர்ப்பையும் இரத்து செய்ய முடிவெடுத் துள்ளது இந்திய அரசு! இச்செய்தியை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி 15.03.2017 அன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்த மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு (திருத்தச்சட்டம்) - 1956 இன் நோக்க அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது, மாநிலங்களுக்கிடையில் எழும் தண்ணீர்த் தகராறுகளை இத்தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு விடுவது ; இப்பொழுது செயல்பாட்டில் உள்ள காவிரித் தீர்ப்பாயம், இரவி பியாஸ் தீர்ப்பாயம் முதலியவற்றைக் கலைத்து விடுவது என்று அந்த சட்ட முன்வடிவில் (மசோதாவில்) இந்திய அரசு கூறியுள்ளது.

இதற்காக ஒரு பொய்யை உமாபாரதி கூறியுள்ளார். காவிரித் தீரப்பாயம் அமைத்து 26 ஆண்டுகள் ஆகியும் அதனால் ‘வெற்றிகரமான’ தீர்ப்பை வழங்க முடியவில்லை என்று கூறுகிறார். காவிரித் தீரப் பாயம் தனது இறுதித் தீர்ப்பை 05.02.2007 அன்று வெளியிட்டது.

அதனை இந்திய அரசே 19.02.2013 அன்று அரசிதழில் வெளியிட்டது; இதன் வழி உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குரிய அதிகாரம் அத்தீர்ப்பிற்கு வழங்கியது. உச்ச நீதிமன்றமும் அத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறைக்குழு அமைக்கும்படி காலக்கெடு விதித்து 20.09.2016 அன்று ஆணையிட்டது.

ஆனால் நரேந்திர மோடி அரசு கடைசி நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் வஞ்சகமாகத் தடுத்து விட்டது. காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை வெற்றியடையாமல் செய்தது இந்திய அரசுதான்!

நரேந்திர மோடி அரசின் பக்கத்துணையோடு, கர்நாடகக் காங்கிரசு அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை முழுமையாகத் திருடிவிட்டதால், நடப்பு சாகுபடி ஆண்டில் தண்ணீரின்றி காய்ந்து கருகிய பயிர்களைப் பார்த்து நெஞ்சு பதைத்து நஞ்சருந்தியும் மாரடைப்பு ஏற்பட்டும் மடிந்துபோன உழவர்கள் எண்ணிக்கை 250க்கும் மேல்!

மேக்கே தாட்டில் புதிய அணை

தமிழ்நாடு அரசின் செயலற்ற பின்னணியில், இந்திய அரசின் மறைமுக ஆதரவுடன், கர்நாடகம் காவிரியில் மேக்கே தாட்டு பகுதியில் புதிய அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் கொள்ளளவு 66.5 ஆ.மி.க (டி.எம்.சி). இந்த அணை கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஒகேனக்கல் வராது.

காவிரித் தீரப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்டுவது சட்ட விரோதம்.

காவிரி டெல்டா மாவட்டங்களைக்காலி செய்வதே திட்டம்

காவிரி நீரைத் தடுத்து, செயற்கையாகக் காவிரிச் சமவெளியைப் பாலைவனமாக்குவதே இந்திய அரசின் திட்டம். உழவர்கள் தாங்களாகவே தங்கள் நிலத்தையும் ஊரையும் விட்டு வெளியேற வேண்டும் என்பதே இந்திய அரசின் உத்தி! இதற்காக ஒருபக்கம் காவிரி நீரைத் தடுப்பது - இன்னொரு பக்கம் எண்ணெய், எரிவளி நச்சுக்குழாய்களை நிலத்திற்குள் இறக்கி, மண்ணைப் புண்ணாக்குவது.

காவிரிச் சமவெளியில், பெரும்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், அவற்றின் உல்லாச விடுதிகளும் ஆளுமை செலுத்த வேண்டும் என்பது இந்திய அரசின் தொழில் கொள்கை! இதற்குத் தமிழர்களைப் பலியிடுகிறது. மக்கள் போராட்டங்களால் சில இடங்களில் ஓ.என்.ஜி.சி.யும் தனியார் காரப்பரேட் நிறுவனங்களும் பின்வாங்கி இருப்பது தற்காலிகத் தந்திரமே!

தமிழ்நாடு அரசு தமிழர்களைக் கைவிட்டதேன்?

தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றும் அக்கறையும், செயல் திறனும் இல்லாத அரசு, தமிழ் நாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து கர்நாடகத்தில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைகளையும், தமிழர்களின் சொத்துகள் அழிக்கப்படுவதையும், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுத்திட தமிழ்நாடு அரசும் முன்வந்ததில்லை; முக்கிய எதிர்க்கட்சியும் முன் வந்ததில்லை!

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்பு உரிமைகளைக்கூட பயன்படுத்த முடியாத அரசியல் அனாதைகள் போல் தமிழ் மக்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் காவிரி வழக்கையும் தமிழ்நாடு அரசு திறம்பட நடத்தவில்லை.

ஆதாய அரசியல், குடும்ப அரசியல் ஆகியவற்றில்தான் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எப்போதும் கவனமாய் இருக்கின்றன. இதற்காக இவை நிரந்தரப் பகைமுகாம்களாக மோதிக் கொள்கின்றன.

தமிழ்நாட்டில் இவ்வாறான தன்னலவாத அரசியல் மேலோங்கி இருப்பது, தமிழர்களை வஞ்சிக்கத் துடிக்கும் இந்திய அரசுக்கும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதிச் செயல்படும் கர்நாடக அரசுக்கும், அங்குள்ள கட்சிகளுக்கும் நல்வாய்ப்பாகப் போய்விட்டது.

தமிழ்நாட்டில் மணற்கொள்ளை நடத்தி ஆறுகளைக் காலி செய்வதில் மட்டும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே நிரந்தர ஒற்றுமை நிலவுகிறது. கொடிய வறட்சி கோரத்தாண்டவம் ஆடும் இவ்வாண்டில் வறட்சி நிவாரணப்பணிகள் போர்க்கால வேகத்துடன் உரிய அளவில் செய்யப்படவில்லை. உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவி நிதி வழங்கப்படவில்லை.

காவிரி நம் தாய் தமிழ்நாட்டின் பெரும்பகுதிக் குடிநீரைக் காவிரித் தாய்தான் வழங்குகிறாள். பன்னிரெண்டு மாவட்டங்களில் 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் காவிரி நீர்தான்!

தமிழ்நாடு அரசே செயல்படு;  இந்திய அரசைச் செயல்பட வை!

இந்திய அரசே,

1. காவிரித் தீரப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை இரத்து செய்யாதே! காவரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்திற்குக் காவிரி வழக்கை அனுப்பாதே!
2. விளைநிலங்களில் எங்கேயும் பெட்ரோலியம், எரிவளி, நிலக்கரி எதுவும் எடுக்காதே!

தமிழ்நாடு அரசே,

3. மேற்கண்ட கோரிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்து; அரசியல் அழுத்தம் கொடு!
4. காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவித்திடு!
5. தமிழ்நாடு அரசே, ஆறுகளைக் காலி செய்யும் மணல் விற்பனையை முற்றாக நிறுத்து! கட்டுமானப் பணிகளுக்கான மணல் எடுப்பது குறித்து, பரிந்துரை வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திடு!
6. உச்சவரம்பின்றி அனைத்து உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்! தண்ணீரின்றிப் பயிர் அழிந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 உதவித்தொகை வழங்கு! இதில் 5 ஏக்கருக்கு மட்டும் என்ற வரம்பை நீக்கு!
தண்ணீரின்றிப் பயிர் செய்யாமல் தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கு! உழவுத்தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.25,000 துயர் துடைப்பு நிதி வழங்கு!
7. தண்ணீரின்றிப் பயிர் அழிந்ததைக் கண்டு பதைத்து நஞ்சருந்தியும், மாரடைப்பு ஏற்பட்டும் இறந்த உழவர் குடும்பத்திற்கு ரூ.15,00,000 இழப்பீடு வழங்கு!

காவிரித் தாய் காப்பு முற்றுகை

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக, கட்சி சார்பின்றி காவிரி உரிமை மீட்புக் குழு, 28.03.2017 முதல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது;

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.