ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலம் காவல் முற்றுகைக்கு எதிராக குடந்தையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்!

கதிராமங்கலம் காவல் முற்றுகைக்கு எதிராக குடந்தையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்! 
தஞ்சை மாவட்டம் - திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலத்தில் ஆயிரக்கணக்கான மக்களை வீட்டுச் சிறைக்குள் வைத்தும், அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்தும் காவல்துறையினர் முற்றுகையிட்டு, ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் பதிப்புக்காக அடியாள் வேலை பார்த்ததைக் கண்டித்து, குடந்தையில் நேற்று (20.06.2017) காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





ஆர்ப்பாட்டத்திற்காக, “காவல்துறை காக்கவா? மக்களைத் தாக்கவா?”, “எண்ணெய் எடுக்கிறோம் என்று சொல்லி, எங்கள் மண்ணை பாழ்படுத்தாதே!”, “வெளியேறு வெளியேறு, ஓ.என்.ஜி.சி.யே வெளியேறு!”, “காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி!” என்பன உள்ளிட்ட எழுச்சி முழக்கங்களோடு குடந்தை காந்தி பூங்கா முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மஞ்சள் நிறத்தில் காணப்படும் கதிராமங்கலத்தின் நிலத்தடி நீரை கையில் வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் “ஓ.என்.ஜி.சி.யே வெளியேறு” என்ற முழக்கப் பதாகையை வைத்துக் கொண்டு, பெண்களும் குழந்தைகளும் நின்றனர்.





கதிராமங்கலம் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைக்கு அனுப்பப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்ட 10 பேருக்கும், மேடையில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்த போது, ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது.






ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், “கதிராமங்கலத்தில் அட்டூழியங்கள் செய்த காவல்துறையினர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். கதிராமங்கலம் மட்டுமல்ல, காவிரிப்படுகையில் எங்குமே எண்ணெய் – எரிவளி எடுக்கக் கூடாது! ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரிப்படுகையைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.






முன்னதாக, கதிராமங்கலம் மக்களின் குமுறல்களையும் காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளையும் விளக்கும் வகையில் தோழர் க. அருணபாரதி இயக்கியுள்ள “கதிராமங்கலம் கதறல்” - ஆவணப்படத்தை திரு. பெ. மணியரசன் வெளியிட, கதிராமங்கலம் பெண்கள் அதனைப் பெற்றுக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா. பழ. நெடுமாறன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப. உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு. கோ. சுந்தரராசன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.சா. முகிலன், நாம் தமிழர் கட்சி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கதிராமங்கலம் பெண்ணொருவர், காவல்துறையினரின் அட்டூழியங்களைக் கேள்வி கேட்டுப் பேசியபோது, மக்கள் மிகுந்த எழுச்சி கொண்டனர்.





தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மன்னையின் மைந்தர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு. இராசசேகரன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைச்சுடர், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை ஆகியோர் மேடையை நெறிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சியுடன் பங்கேற்றனர்.








இந்த ஆர்ப்பாட்டம், போராடி வரும் கதிராமங்கலம் கிராம பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனில் மிகையல்ல!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com 
www.Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.