ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது!” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை !

“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது!” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை !
சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழை வழக்காடும் மொழியாக ஆணையிட வலியுறுத்தி, வழக்கறிஞர்களும் இன உணர்வாளர்களும் 9 பேர், சூலை 27 - 2017 முதல் மதுரை மாநகர் காளவாசல் பகுதியில், காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த உண்ணாப் போராட்டத்தில், வழக்கறிஞர் கு. பகத்சிங், வழக்கறிஞர் வே. முருகன், வழக்கறிஞர் ச. எழிலரசு, வழக்கறிஞர் மு. வேல்முருகன், வழக்கறிஞர் மு. செல்வக்குமார், வழக்கறிஞர் வே. திசையிந்திரன், மே பதினேழு இயக்கத் தோழர் மெய்யப்பன், மருது மக்கள் இயக்கம் தோழர் செ. முத்துப்பாண்டியன், இசுலாமிய சனநாயக முன்னணி தோழர் மதுக்கூர் அ. மைதீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் அ. விடியல், மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி, தோழர்கள் சிவா, இளமதி, தங்கப்பழனி ஆகியோர் நான்காம் நாள் (30.07.2017) உண்ணாப் போராட்டப் பந்தலில் சந்தித்து, அவர்களின் போராட்ட இலட்சியத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் ஈகத்திற்கு வாழ்த்துக் கூறினர்.

போராட்டத்தை வாழ்த்தியும், போராளிகளைப் பாராட்டியும் தோழர் பெ. மணியரசன் பேசியதன் எழுத்து வடிவம் :
“தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்குமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் ஒருசேர வலியுறுத்தி இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியிலும், தி.மு.க. ஆட்சியிலும் இதற்காக சட்டப்பேரவைத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு, அவை இந்திய அரசுக்கு முறைப்படி ஆளுநர் வழியாக அனுப்பப்பட்டன. எனவே, இங்கு தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்குவதில் எந்தக் கட்சிக்கும் மாற்று கருத்துகள் இல்லை. எனவே, நாம் ஒன்றுபட்டு இக்கோரிக்கையை எடுத்துச் சென்று போராடுவதற்கான தருணம் இது!

இந்திய அரசமைப்புச் சட்டம், தமிழர்களை அடிமைப்படுத்தும் அடிமை சாசனம் என்பதே எங்கள் கருத்து! இருந்தாலும், அதில் வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளைக்கூட இந்திய அரசு வழங்குவதில்லை. அதிலும், தமிழர்களுக்கு அந்த உரிமைகள் அறவே இல்லை என்றாகிவிட்டது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 (2)இன்படி, மாநில அரசு ஆளுநர் வழியாக - அம்மாநில மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்தால் இந்திய அரசு அதை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். இந்தி மாநிலங்களில் உறுப்பு 348 (2)-ஐப் பயன்படுத்தி இந்தியை அவர்கள் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவித்து, செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், இது ஏன் தமிழுக்குப் பொருந்தாது என்கிறார்கள்? இதைத்தான் நாங்கள் இனப்பாகுபாடு என்கிறோம்!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 153(ஏ)வின்படி, இந்த “இனப்பாகுபாடு” தண்டனைக்குரிய குற்றமாகும்! ஆனால், இந்தக் குற்றத்தைச் செய்வது இந்திய ஆட்சியாளர்களும், உச்ச நீதிமன்றமும் என்பதுதான் வேதனை; வேடிக்கை!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி நீதி வழங்க முடியுமா? அவ்வாறு வழங்க முடியுமெனில் இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்கு? அதன் பெயரால் உறுதி எடுப்பதெல்லாம் மோசடி அல்லவா?

தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரிக்கை அனுப்பினால், அதை இந்திய ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புகிறார்கள். எதற்காக அதை உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்? உச்ச நீதிமன்றத்தில் சட்டங்களில் சரி தவறுகளை பார்க்கலாமே தவிர, உச்ச நீதிமன்றமே சட்டமியற்றிக் கொண்டிருக்க அதிகாரமுண்டா? அப்படியென்றால், நாடாளுமன்றம் -_- சட்டமன்றம் எதற்காக?

இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தன் சட்ட நடைமுறைகளில் சில விளக்கங்களை (Clarifications) கேட்கலாமே தவிர, அதன் பரிந்துரைக்கு அனுப்புவது எதற்காக? இதில் என்ன சட்டக் குழப்பம் இருக்கிறது? அரசமைப்புச் சட்ட 348(2) படி, இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டியதுதான் நடுவண் அரசின் வேலை!

எனவே, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கூடாது என்பதற்காக சூழ்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அத்தீர்மானத்தை இந்திய அரசு அனுப்பியது. இது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?

காங்கிரசும், பா.ச.க.வும் அண்ணன் தம்பிகள் போல, இருவருக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் கிடையாது. எனவேதான், இவ்விருவரும் இந்திய அரசை ஆளும்போது, தமிழை வழக்கு மொழியாக்க மறுத்தார்கள்.

இங்கே கூட்டாட்சி நடப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், தமிழை வழக்கு மொழியாக்கினால் “தேசிய ஒருமைப்பாடு”க்கு ஆபத்து வந்துவிடும் எனக் கூப்பாடு போடுகிறார்கள். உண்மையில், “தேசிய ஒருமைப்பாட்டு”க்கு அல்ல - வடக்கத்தியரின் ஆரிய மேலாதிக்கத்திற்குத்தான் இது ஆபத்து என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரிய மொழியான சமற்கிருதம் போட்ட கலப்பினக் குட்டிதான் இந்தி! எனவே அதை வழக்கு மொழியாக்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. சமற்கிருதத்தையே வழக்கு மொழியாக அறிவித்தால்கூட, அங்கு எதிர்ப்புகள் எழாது!
அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பா.ச.க.வின் ‘ஆரியத்துவாப் பொறுக்கி’ சுப்பிரமணிய சாமி, “ஒரு நாட்டில் ஒரு மொழிதான் இருக்க வேண்டும். அதுபோல் இந்தியாவுக்கு இருக்க வேண்டிய ஒரு மொழி சமற்கிருதம்தான். இடைக்காலத்திற்காகத் தான் இந்தி இருக்கிறது, ஏனெனில், இந்தியை சமற்கிருத வரி வடிவத்தில்தான் இப்பொழுது எழுதுகிறோம். எனவே கொஞ்ச நாளைக்கு இந்தி! அதன்பிறகு சமற்கிருதம்தான் இந்தியாவின் ஒற்றை மொழியாக இருக்க வேண்டும். இப்போது தமிழில் 40 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் கலந்துள்ளன. மலையாளத்தில் 70 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் இருக்கின்றன. இதேபோல் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் சமற்கிருதச் சொற்கள் நிறைய இருப்பதால், எல்லோராலும் சமற்கிருதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே, தமிழை சமற்கிருத வரி வடிவத்தில் எழுதிப் பழக வேண்டும்” என்று கூறினார்.

அவர் வெளிப்படையாகக் கூறி வருவதைத்தான் காங்கிரசும், பா.ச.க.வும் ஒளித்து, மறைத்து செய்து வருகின்றன. பா.ச.க.வைப் போலவே, காங்கிரசும் சமற்கிருதத் திணிப்புக் கொள்கை உடையதுதான்! ஏன் காங்கிரசின் அனைத்திந்தியத் தலைமை, பா.ச.க.வின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக முழங்குவதில்லை?

ஒரே வரி - ஒரே மொழி - ஒரே மையம் என்று இந்திய அரசு செயல்படுகின்றது. நமக்கு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைப் போல், அனைத்து மாநிலங்களுக்கும்தான் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால், நீட் - ஜி.எஸ்.டி. என மாநில உரிமைப் பறிப்புகளுக்கு எதிராக, பீகார், உ.பி., ம.பி., ராசஸ்தான் போன்ற இந்தி மாநிலங்கள் ஏன் கொதித்தெழுவதில்லை?

நடுவண் அரசு வலுப்படுவது என்பது, இந்தி பேசுவோரின் அரசு வலுப்படுகிறது என்று பொருள்! அவர்களுக்கு மாநில அரசு, ஒரு வட்டார அரசு போல! இந்திய அரசு - தங்களது சொந்தப் பேரரசு என்று கருதுகிறார்கள்!

தற்போது அவர்களது ஆரிய இனத்திற்கு ஒரு பேரரசர் போல, நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார். மற்ற மாநிலங்களின் உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டு, தங்களின் இந்திப் பேரரசு மோடியின் ஆட்சியின் கீழ் வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்ற பூரிப்பு அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான் அவர்கள் மாநில அரசுகளின் உரிமைப் பறிப்புகளுக்கு எதிராகக் கொந்தளிப்பதில்லை!

இந்தியாவிலேயே வரி வசூலில் அதிகத் திறனுடைய மாநிலம் தமிழ்நாடு! நம்முடைய மாநிலத்தில் வரி வசூலித்து, அதை இந்தி மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், வறட்சி - புயல் பாதிப்பை சந்திக்கும் நாம் 100 ரூபாய் கேட்டால், வெறும் 3 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். இது இனப்பாகுபாடு இல்லையா?
விந்திய மலைக்கு வடக்கே மற்றும் கிழக்கிலும் மேற்கிலும் இரு கடல்கள் வரை உள்ள மண்டலம் ஆரிய வர்த்தம் என்றார் மனு. அந்த ஆரிய வர்த்தத்தின் ஆட்சிதான் இப்போது நடக்கிறது. அதற்கு சரியான அடியாளாக நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார்.

மோடி குசராத்தியாக இருந்தாலும் ஆரிய வைசியர். அதுமட்டுமல்ல, இந்திக்காரரை விஞ்சிய இந்தி வெறியர்!

இரசியர்கள் தங்களை மகா இரசியர் என்றுகூறி தற்பெருமை கொள்வார்களாம். இரசியர் அல்லாத ஜார்ஜியராகப் பிறந்த ஸ்டாலின், இரசியர்களைவிடத் தீவிரமாக இரசிய மொழித் திணிப்பிலும், இரசியப் பெருமிதவாதத் திணிப்பிலும் ஈடுபட்டார். அப்போது நோய்வாய்ப்பட்டிருந்த லெனின், ஸ்டாலினின் இரசியத் திணிப்பை அறிந்து, இரசியராய்ப் பிறந்தவரைவிட மகா இரசியராக ஸ்டாலின் இருக்கிறார் என்று கண்டித்தார். இது லெனின் தொகுப்பு நூல்களில் உள்ளது.

எனவே, மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடியின் ஆரிய ஆதிக்கவாதத்துக்கு வடக்கத்தியரிடம் எதிர்ப்புகள் வருவதில்லை!

வங்காளம், மராட்டியம் போன்ற மொழிகளில் இலக்கியச் செழுமை இருந்தாலும், அவை சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதுபோல், தெற்கில் தமிழ்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் ஆரிய சமற்கிருதக் கலப்பிலேயே உயிர் வாழ்பவை. “மொழி ஞாயிறு” பாவாணர் அவர்கள் கூறுவார். “தமிழ் தவிர்த்த இதரத் தென்னிந்திய மொழிகளில் வடசொல் சேரச் சேர அம்மொழிகள் சிறப்புப் பெறும்! தமிழோ வடசொல் தீரத் தீர சிறப்புப் பெறும்!”.

நீட் தேர்வில் தமிழ்நாடுதான் கடுமையாக பாதிக்கப் படுகின்றது. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. எனவே, இங்கு வெளி மாநிலத்தவரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கத் துடிக்கிறார்கள். ஏற்கெனவே, வெளி மாநிலத்தவரை தொடர்வண்டித் துறை முதற்கொண்டு இந்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தேர்வு என்ற பெயரில் மோசடிகளையும் முறைகேடுகளையும் அரங்கேற்றி, தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டுள்ளார்கள். நீட் தேர்வு நிலைமையை இன்னும் மோசமாக்கப் போகிறது.

தொடக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. மாணவர்களை அதிகமாகச் சேர்ப்பார்கள். சில ஆண்டுகள் கழிந்ததும், அனைத்திந்திய அளவில் மதிப்பெண் வரிசைப்படி வடநாட்டு மாணவர்களையும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களையும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சேர்ப்பார்கள். மண்ணின் மக்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது!

எனவேதான், நம் மீது இனப்பாகுபாடு காட்டப்படுகிறது எனத் திரும்பத் திரும்ப சொல்கிறோம். நாம் சட்ட நுட்பங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது. இந்திய அரசின் இனப்பாகுபாட்டை அம்பலப்படுத்த வேண்டும்! நமக்கான இன உரிமையைப் பேச வேண்டும்!

நம் தமிழ்ப்பேராசான் வள்ளுவப் பெருந்தகை, “நோய்நாடி நோய் முதல் நாடி” என்றார். நாம் சிக்கலின் தன்மையைப் புரிந்து அதன் வேரை அறிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசின் ஆரியப் பேரினவாத அரசியலை அடையாளம் காண வேண்டும்.

இங்கே காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர்களில் வழக்கறிஞர்கள் கு. பகத்சிங், வே. முருகன், ச. எழிலரசு, மு. வேல்முருகன், மு. செல்வக்குமார், வே. திசையிந்திரன் ஆகியோர் கடந்த முறையும் இதே காலத்தில் இதே இலட்சியத்திற்காக காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள். இதே கோரிக்கை அட்டையை ஏந்தி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரங்கில் அமைதியாக அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினார்கள். அதனால் இவர்களின் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமைப் பறிக்கப்பட்டது.

ஒருமுறை பாதிப்புகளை எதிர்கொள்வோர் மீண்டும் போராட்டக்களத்திற்கு வருவதில்லை என்ற கூற்றை உடைத்து சுக்குநூறாக்கி, அந்த பாதிப்புகளையெல்லாம் எதிர்கொண்டு, இப்போது மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இந்த ஈகத்தை - போர்க்குணத்தை நாம் பாராட்ட வேண்டும்!

புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் பாடிய ஒரு பாடல் உள்ளது. “இந்த உலகம் ஏன் இயங்குகிறதென்றால், இந்திரன் அருந்தும் அமிழ்தமே கிடைத்தாலும் _ தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் அளித்து உண்ணும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு தவறு செய்தால், உலகமே கிடைக்கும் என்றாலும், அத்தவறை செய்ய மாட்டார்கள். உயிரே போகுமென்றாலும் பிறருக்கு நலம் பெயர்க்கும் செயலை செய்வார்கள். தனக்கென வாழாது, பிறர்க்கென வாழும் இப்படிப்பட்ட மாந்தர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது” என்று “உண்டாலம்ம” என்று தொடங்கும் பாடலில், 2500 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.

அந்த ஈக உணர்ச்சியின் தொடர்ச்சி தமிழினத்தில் இன்றைக்கும் இருக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றே இந்த ஒன்பது பேரின் காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம்! இக்கோரிக்கை வெல்ல வேண்டும்! இந்தப் போராட்டத்தைத் தமிழ் மக்கள் கையெலடுக்க வேண்டும்! இப்பணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.