ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை : வெளி மாநிலக் கொள்ளையரைத் தடுக்க வெளியாரை வெளியேற்ற வேண்டும்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை : வெளி மாநிலக் கொள்ளையரைத் தடுக்க வெளியாரை வெளியேற்ற வேண்டும்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
சென்னை கொளத்தூர் பகுதியில் நகைக்கடை ஒன்றில் மூன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வடநாட்டுக் கும்பல் ஒன்றைப் பிடிக்க தமிழ்நாடு காவல்துறையினர் இராசஸ்தான் போன போது, அக்கும்பல் துப்பாக்கியால் சுட்டு நம் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் அவர்களைக் கொன்றுவிட்டது என்ற துயரச் செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம்!

கொள்ளைக் கும்பல் கற்களால் தாக்கியதில் காயம்பட்டு அங்கு மருத்துவமனையில் இருக்கும் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர், தலைமைக் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி, மதுரவாயல் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர்க்கு நம் ஆறுதல்கள்!

இராசஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் என்ற ஊரில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான நாதுராம், தினேசு சவுத்திரி ஆகியோரைத் தளைப்படுத்தச் சென்ற போது – 12.12.2017 நள்ளிரவு 12 மணி அளவில் இத்தாக்குதல்களை அக்கொள்ளையர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஊர்க்காரர்களும் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து காவல்துறையினர் ஐந்து பேர் மட்டும் சென்றது ஒரு குறைபாடு; உள்ளூர்க் காவல் துறையினரைக் கூடுதலாக அழைத்துக் கொள்ளாமல், கொள்ளையரைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நள்ளிரவில் – ஐந்து பேர் மட்டும் தனியாகப் போனது இன்னொரு குறைபாடு!

இக்குறைகள் ஒருபுறமிருக்க, வடநாட்டுக் கொள்ளையரால் தமிழ்நாட்டுக் காவல்துறையினர் தாக்கப்பட்டதும், அதில் ஆய்வாளர் பெரிய பாண்டியன் ஈகி ஆனதும் தமிழர்கள் நெஞ்சத்தில் ஈட்டி பாய்ந்தது போல் வேதனை அளிக்கிறது. தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக இந்த சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

ஆட்சியாளர்களும் அரசியலாரும் சிந்திக்க வேண்டும்

இந்தக் கொடிய நிகழ்ச்சிக்குப் பிறகாவது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும், அரசியலாரும் மக்களும் வெளியார் நுழைவு பற்றி சிந்திக்க வேண்டும். கட்டுப்பாடோ வரைமுறையோ இல்லாமல் கதவில்லா வீட்டில் கண்டவர்களும் கண்டதுகளும் நுழைவதுபோல் தமிழ்நாட்டிற்குள் – இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் அயல் இனத்தார் அன்றாடம் திமுதிமுவெனக் குவிவதால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இராசஸ்தான் கொள்ளையர்களால் தமிழ்நாட்டு ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கும்போதே, கோவையில் ஏ.டி.எம்.களில் 30 இலட்ச ரூபாய் கொள்ளையடித்த வடநாட்டுக் கொள்ளையகள் எட்டுப் பேரை 14.12.2017 காலை மிகத் திறமையாக – திரைப்படக் காட்சி போல் நம் காவல்துறையினர் நாமக்கல் மற்றும் சேலம் பகுதிகளில் பிடித்த செய்தி வெளி வருகிறது. அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் இராசஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

பல இடங்களில் வடநாட்டுக் கொள்ளையர்கள் கொள்ளையடித்த செய்திகள் – கொலை செய்த செய்திகள் – பாலியல் வன்கொடுமை செய்து பணிக்குப் போகும் பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்த செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே உள்ளன. அவர்கள் வானூர்தியில் வந்து தமிழ்நாட்டில் கொள்ளையடித்துவிட்டு வானூர்தியில் திரும்பிச் செல்லும் செய்திகளும் வந்து கொண்டுள்ளன.

ஓர் இனத்தின் மரபுவழிப்பட்ட தாயகத்தில் அயல் இனத்தார்கள் வரைமுறையின்றி அன்றாடம் குவிந்தால் அந்த மண்ணின் மக்களுக்கு தொழில், வணிகம், வேலை வாய்ப்பு, பண்பாடு, தனிமனிதப் பாதுகாப்பு, தாய்மொழி உரிமை, தாயக உரிமை உள்ளிட்டவற்றில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனவே, வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று போராடி வருகிறது. (காண்க: https://www.facebook.com/452931914892324/photos/…)

நம்மூர் “மேதைகள்” சிலர், இதை “இனவெறி” என்று நம்மைச் சாடுகின்றனர். தமிழர் தற்காப்பு பற்றி அந்த மேதைகளுக்கு அக்கறை இல்லை! அயல் இனத்தார்க்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட வேண்டும் என்று வெட்கப்படாமல் கூறுகிறார்கள். இது இன இரண்டகம்!

வடநாட்டுக் கொள்ளையர்கள் தங்களின் சொந்த மாநிலம் போல் தாராளமாக வந்து தங்கி சந்துபொந்துகள் எல்லாம் தெரிந்து கொள்ளையடித்து, பாலியல் வன்முறை செய்து தப்பில் செல்கிறார்களே எப்படி? ஏற்கெனவே அவர்களின் உறவினர்கள், அவர்களின் மொழியினர் தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், கல்வி, வேலை முதலியவறிறில் குவிந்துள்ளார்கள். அவர்களின் பொது மொழி இந்தி!

நம்மவர்கள் வடநாட்டிற்குப் போனால் அயலாரைப் போல், அஞ்சி, தயங்கிப் போவோம். ஆனால், வடநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வந்தால், சொந்த மண் போல் வருகின்றனர். ஏனெனில் அவர்களின் சொந்த பந்தங்கள் இங்கே கும்மிடப்பூண்டியிலிருந்து குமரி முனை வரைப் படர்ந்து கிடக்கின்றனர்.

இராசஸ்தான் மார்வாடிகளும், குசராத் சேட்டுகளும் சொந்த மாட மாளிகைகளுடன் வணிகங்களுடன் தமிழ்நாட்டில் கோலோச்சுகிறார்கள். அவர்களை அண்டித்தான் தமிழர்கள் தொழில் செய்ய வேண்டிய அவலம் நிலவுகிறது.

செய்ய வேண்டியவை

1. மொழிவழித் தாயகமாக 1956-இல் தமிழ்நாடு அமைந்த பிறகு வந்த வெளி மாநிலத்தவர்கள் அனைவரும் “வெளியார்” என அறிவித்து, அவர்களைக் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும்.

2. வெளியார்க்குத் தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுக்கக் கூடாது.

3. அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இருப்பதுபோல், தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலத்தவர் நுழைவதற்கு உள் அனுமதி (Inner Line Permit) பெறும் முறையைக் கொண்டு வர வேண்டும்.

4. காசுமீர், தெலங்கானா, வடகிழக்கு மாநிலங்கள் முதலியவற்றில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் முதலிய சொத்துகள் வாங்கத் தடை இருக்கிறது. கர்நாடகத்தில் விளை நிலங்களை வெளி மாநிலத்தவர் வாங்கத் தடை இருக்கிறது. அதுபோல் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும்.

5. தமிழ் மக்கள், தமிழ்நாட்டில் உள்ள வெளியார் நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும். இயன்றவரை தமிழர் நிறுவனங்களிலேயே பொருள் வாங்க வேண்டும்; பரிவர்த்தனைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

6. அயல் மாநிலக் கொள்ளையர்கள் மற்றும் வன்முறையாளர்களிடமிருந்து மண்ணின் மக்களைப் பாதுகாத்துக் கொள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் பகுதிவாரியாகத் தற்காப்புத் தொண்டர் அணிகளை உருவாக்கிக் கண்காணிக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.