போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் : ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் : ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
மூன்று நாட்களாகத் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்துவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அவர்களின் தொழிற்சங்கங்கள் வழியாகப் பேச்சு நடத்தி இணக்கமான முடிவை உண்டாக்கத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.
ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே குறைவான வேறுபாடே உள்ளது. ஆனால், தொழிலாளர்களிடமிருந்து அவர்களின் ஊதியத்தில் பிடித்த ஏழாயிரம் கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி, அஞ்சல் ஈட்டுறுதி நிதி (PLI), வாழ்நாள் ஈட்டுறுதி நிதி (LIC) முதலியவற்றிற்குக் கட்டாமல், தமிழ்நாடு அரசு தானே செலவழித்துவிட்டது. கடந்த 16 மாதங்களில் 21 தடவை நடந்த பேச்சில் இந்த ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர தமிழ்நாடு அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை! கொடுத்த வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.
தமிழ்நாடு அரசின் நிதித்துறை திவாலாகிவிட்டது. ஆனால் எம்ஜியார் நூற்றாண்டு விழா என்ற பெயரில் உருப்படியற்ற வாண வேடிக்கைச் செலவுகளை பல நூறு கோடி ரூபாய்க்குச் செய்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு!
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது தமிழ்நாடு அரசு!
இந்நிலையில், 04.01.2018 அன்று பிற்பகல் பேச்சு வார்த்தை முறிந்த நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் தொடங்கினர். வேலை நிறுத்தம் குறித்து ஏற்கெனவே கொடுத்த அறிவிக்கை போதும் என்கின்றன தொழிற்சங்கங்கள். இது சட்டப்படியான வேலை நிறுத்தம் என்கின்றன.
ஆனால், தொழிலாளிகள் – பயணிகளை நடுவழியில் அங்கங்கே இறக்கிவிட்டு, அல்லோகலப்படுத்தி வேலை நிறுத்தம் தொடங்கிய முறை சரியன்று! முக்கியமான பேருந்து நிலையங்களில் பயணிகளை இறக்கி விட்ட பின்தான் வேலை நிறுத்தம் தொடங்கியிருக்க வேண்டும். மக்களிடம் இப்பொழுது இதுபற்றி ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் படிப்பினையாக் கொள்ள வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவித்ததுடன், உடனடியாக வேலைக்குத் திரும்பவில்லையென்றால் தொழிலாளிகள் பணி நீக்கம் செய்யப்படுவர்; அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்படும் என்றும் மிரட்டியுள்ளது.
சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்குப் போங்கள் என்று தொழிலாளர்களைப் பார்த்து சொல்வதற்கு, இந்திரா பானர்ஜிக்கு அதிகாரம் தந்தது யார்? இப்பேச்சு அதிகார மமதையின் உச்சம்!
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் இருவரும் நீதித்துறை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கும் முன் கடுஞ்சொற்களை உதிர்த்துள்ளார்கள்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியுள்ள தங்களது ஊதியப்பணம் ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 16 மாதங்களாக – குரலெழுப்பி வருகிறார்கள். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தரவில்லை; இன்றியமையாத் தேவைகளுக்குத் தங்கள் வைப்பு நிதியிலிருந்து கடன் வாங்கும் உரிமையைப் பயன்படுத்த முடியவில்லை.
தொழிலாளர்களின் இந்தப் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாத நீதிபதிகள், பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டு மனம் வருந்தும் சாக்கில் நீதித்துறை அதிகாரத்தை நிர்வாகத்துறை அதிகாரமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். தங்களின் இந்த நிலைபாட்டை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பாக நீதிபதி இந்திரா பானர்சி மறு ஆய்வு செய்ய வேண்டும்; மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தின்போதும் ஆணவம் கொண்ட நிர்வாக அதிகாரிகள் போல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்டளைகள் பிறப்பித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசி உடனடியாகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இயல்பு நிலையைக் கொண்டு வந்து மக்களின் துன்பங்களையும் நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அதைவிட்டுவிட்டு, போராட்டத்தை மடைமாற்ற, மாற்று ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குகிறோம் என மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என்றும் எச்சரிக்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment