ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பாரத ரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு! பெ. மணியரசன்


பாரத ரத்தினா
சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


விநாயக தாமோதர சாவர்க்கரின் “இந்துத்துவா”கொள்கை பக்தியினால் உருவானதன்று. வி.டி. சாவர்க்கர் பகுத்தறிவாளர்; அறிவியலுக்குப் புறம்பான பக்திக் கதைகளை, மூட நம்பிக்கைகளை ஏற்காதவர்!
பின்னர் எதற்காக, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட “இந்துத்துவா”அரசியலை முன்னெடுத்தார்? இனக்கொள்கைக்காக; ஆரிய இனக் கொள்கைக்காக!
ஆரிய பிராமணமேலாதிக்கம் இந்து சமூகத்தில் நிலவ வேண்டும் என்பதற்காக! ஆரிய பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உள்ள இசுலாமிர்களை எதிர்ப்பதற்காக! சாவர்க்கர் பிராமணர்.
சந்திரநாத் பாசு என்ற வங்காளியால் முதல் முதல் கட்டமைக்கப்பட்ட சொற்கோவை “இந்துத்துவா”என்கின்றனர் ஆய்வாளர்கள். அச்சொற்கோவையைத் தனது ஆரிய பிராமண மேலாதிக்கவாத அரசியலுக்கான தத்துவச் சொல் ஆக்கினார் சாவர்க்கர்.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் இந்துக் கடவுள்களை வழிபடும் கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்களை இந்துமத அடையாளத்தை முதன்மைப்படுத்தி ஈர்த்துக் கொள்ளும் வசதி “இந்துத்துவா”கோட்பாட்டில் இருக்கிறது. ஆரிய சாணக்கிய உத்திதான் சாவர்க்கரின் இந்துத்துவா உத்தி! அதில் இந்து பக்தி இல்லை!
அந்தமான் சிறையிலிருந்து 1921இல் விடுதலையாகி சொந்த மாநிலத்தில் (மராட்டியம்) இரத்தினகிரியில் வசித்தார். "இந்து மகாசபா" என்ற மதவாத அமைப்பில் சேர்ந்தார். 1923இல் தனது “இந்துத்துவா”நூலை வெளியிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 இல் தொடங்கப்பட்டது. இது தனியாகவும் இந்து மகாசபா தனியாகவும் செயல்பட்டன.
சாவர்க்கர் புகழ் பரப்புவதேன்?
-----------------------------------------------
ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்கள் தொடங்கிய “சனசங்கம்”என்ற அரசியல் கட்சியோ, அதன் மறு பிறப்பான பா.ச.க.வோ சாவர்க்கரை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஆட்சியை 1998இல் பிடித்தபின் சாவர்க்கர் புகழ்பேசத் தொடங்கியது பா.ச.க.! சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் வானூர்தி நிலையத்திற்கு “வீரசாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்” என்று 2002இல் பா.ச.க. ஆட்சி பெயர் சூட்டியது.

பின்னர், சாவர்க்கரின் இந்துத்துவா கோட்பாட்டை பிரபலப்படுத்தினர் பா.ச.க.வினர். இப்பொழுது சாவர்க்கருக்குப் “பாரத இரத்தினா” விருது வழங்க வேண்டும் என்கிறார், பா.ச.க.வின் உள்துறை அமைச்சர் அமித்சா. இந்திய வரலாற்றை சாவர்க்கர் பார்வையில் புதிதாக எழுத வேண்டும் என்கிறார் அவர்.
பா.ச.க. சாவர்க்கர் பக்கம் அதிகமாகச் சாய்வதேன்? ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ அனுமான் முழக்கங்களும் வழிபாடும் மட்டுமே இந்துக்களை ஈர்க்கப் போதுமான தாக இல்லை.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன அரசியல் முன்னுக்கு வருகிறது. மாநில கட்சிகள் அதிகமாகி விட்டன. இன அரசியலுக்கு ஈர்ப்பு அதிகம். இந்துத்துவா பேசும் சிவசேனை கூட மராத்திய இனப்பெருமை பேசுகிறது. “பசுமாட்டு வட்டாரம்”என்று அழைக்கப் படும் இந்தி மாநிலங்களுக்குத் தனித்தேசிய இனம் கூற முடியவில்லை. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது மொழி - தேசிய இனம் ஆகியவற்றின்படி பெரும்பாலான மாநிலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பசுமாட்டு வட்டாரத்தில் உத்தரப்பிரதேசம் (வடக்கு மண்டலம்), மத்தியப் பிரதேசம் (நடு மண்டலம்) என்று திசையை அடையாள மாகக் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப் பட்டன.
இந்து மதம் என்பதையே ஓர் இனமாக சித்தரிக்க இந்துத்துவா என்ற சொற்கோவையைப் பயன்படுத்து கின்றன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.
இந்து என்பதை ஒரு தேசமாக - தேசிய இனமாக 1937 வாக்கில் பேசியவர் சாவர்க்கர்.
ஆமதாபாத்தில் 1937ஆம் ஆண்டு நடந்த இந்து மகா சபையின் 19ஆவது பேரவையில் தலைமை உரை ஆற்றிய போது சாவர்க்கர் பின்வருமாறு பேசினார் :
"இந்தியாவில் இரு தேசங்கள் அருகருகே வாழ் கின்றன. சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் பலர் இந்தியா ஏற்கனவே ஒரே தேசமாக உருக்கி ஓட்ட வைக்கப்பட்டது என்று கருதுகிறார்கள்; அல்லது அவ்வாறு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒட்ட வைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் நல்ல நோக்கம் தான். ஆனால் இவையெல்லாம் சிந்தனையுள்ள நண்பர்களின் பொய்க் கனவுகள். அவர்கள் (நம்மைப் பார்த்து) வகுப்புவாத அமைப்புகள் என்கின்றனர். ஆனால் பருண்மையான உண்மை என்ன? அவர்கள் கூறும் வகுப்புவாதங்கள் என்பவை - இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையில் பல நூறு ஆண்டுகளாக வரலாறு வழங்கிய பண்பாடு - மதம் - தேசம் தொடர்பான பகைமை!
மகிழ்ச்சி அளிக்காத இந்த உண்மைகளை நாம் துணிச்சலாக சந்திக்க வேண்டும். இன்று இந்தியாவை ஒற்றைத் தன்மை உள்ள ஒரே உறுப்புகளைக் கொண்ட தேசம் என்று உணர முடியாது. முதன்மையாக இது இரண்டு தேசம் - இந்து தேசம், முஸ்லிம் தேசம்!
(V.D. Savarkar, Samagra Savarkar Wangmaya, Hindu Rashtra Darshan, Volume 6, Maharashtra prantik Hindu sabha, Poona 1963, page 296).
இந்தியாவை இரண்டு தேசம் என்று முதன் முதலில் பேசியது முஸ்லிம் லீக்கோ, முகமது அலி ஜின்னாவோ அல்ல - சாவர்க்கர் தான்! 1940இல்தான் முகம்மது அலி ஜின்னா இருதேசக் கோட்பாடு பேசுகிறார்.
மதம் வேறு இனம் வேறு
----------------------------------------
இந்து - முசுலிம் என்ற மத அடிப்படையில் இந்தியாவை இரு தேசங்களாகப் பார்த்தது சமூக அறிவியல்படி தவறு என்பதை வரலாறு மெய்ப்பித்து விட்டது. தேசிய இன அடிப்படையில் - பாக்கித்தானிலிருந்து வங்காள தேசம் பிரிந்து விட்டது. மேற்குப் பாக்கித்தானிலும் சிந்து மாநிலம், பக்தூன் மாநிலம் ஆகியவற்றில் தனிநாட்டுக் கோரிக்கை மக்கள் கோரிக்கையாக வளர்ந்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய இனங்கள் தனிநாடு கேட்டுப் போராடுகின்றன. வெளிப்படையாக விடுதலைப் போராட்டம் நடத்தாத மாநிலங்களில் கூட தெலுங்கு தேசம், மகாராட்டிரம் (பெருந்தேசம்), வங்காளிதேசம், கன்னடதேசம், தமிழ்நாடு (தமிழ்த்தேசம்) என்ற சொந்த தேசிய இன உணர்வுகள்தான் மேலோங்கி உள்ளன.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு, மராட்டிய மாநிலத்தில் மக்கள் தலைராக உள்ளவர் தேசியவாதக் காங்கிரசின் தலைவர் சரத்பவார். அவர் மராட்டிய மாநில முதலமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத் துறையில் ஊழல் செய்து விட்டார் என்று நடுவண் அரசின் அமலாக்கத்துறை, இப்போது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பாக பவாரை விசாரிக்கப் போவதாகவும் அறிவித்தது.
அச்செய்தி வெளியானவுடன், 25.09.2019 அன்று மும்பையில் சரத்பவார் செய்தியாளர்களைச் சந்தித்து, “வீரசிவாஜியின் சித்தாந்தத்தின் வழிவந்த மராத்தியன் எவனும் தில்லிக்குத் தலைவணங்க மாட்டான். நானே நேரில் மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் சென்று “என்னை விசாரியுங்கள்”என்று கேட்கப் போகிறேன்”என்றுகூறி, அவ்வாறு செல்லும் நாளையும் குறிப்பிட்டார். இச்செய்தி 26.09.2019 அன்று ஏடுகளில் வெளியானது. மறுநாளே (27.09.2019) மும்பை மாநகரக் காவல் ஆணையர் சரத்பவாரை அவரது வீட்டில் சந்தித்து அவ்வாறு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
சாவர்க்கர் பிறந்த மராட்டியத்தில்தான் சரத்பவார் பிறந்தார். அது ஆரிய மூளை; இது மண்ணின் மகன் மூளை! இது தில்லி வேறு - மராட்டியம் வேறு என்று இயற்கையாகச் சிந்திக்கிறது. தில்லியில் இப்போது இருப்பது மோடியின் இந்துத்துவா அரசுதான்! சரத்பவார் தாமும் இந்து என்பதால் தமது மராத்தி இனப் பெருமிதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
சரத்பவார் ஊழல் செய்தாரா - இல்லையா என்பது குறித்து இங்கு விவாதம் செய்யவில்லை. இந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள இயற்கையான இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டவே இந்த நிகழ்வு இங்கு சுட்டப்பட்டது.
இந்தியா ஒரு தேசமன்று - இருதேசமன்று - பல தேசங்களைக் கொண்ட துணைக் கண்டம்!
“பாரத ரத்தினா”
------------------------
வி.டி. சாவர்க்கருக்குப் பாரத ரத்தினா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்சா கோரிக்கை வைக்கிறார். சாவர்க்கரின் ஆய்வைப் பின்பற்றி இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்கிறார்.

அப்படி என்ன வரலாற்று ஆய்வை சாவர்க்கர் நிகழ்த்தி விட்டார்? வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் பட்டாளத்தில் இருந்த இந்து முசுலிம் வீரர்கள் இணைந்து, 1857-இல் உத்தரப்பிரதேச மண்டலத்தில் வெள்ளைப் படை அதிகாரிகளை எதிர்த்துப் ஆயுதப் போர் நடத்தினர். அதை ஆங்கிலேயர் சிப்பாயக் கலகம் என்றனர்; காலனி ஆதிக்க எதிர்ப்பாளர்கள் விடுதலைப் போர் என்றனர். இலண்டனில் வசித்த கம்யூனிசதத் தத்துவத் தலைவர் காரல் மார்க்ஸ் “சிப்பாய்க் கலகத்தை”19ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றார்.
வெள்ளை அரசிடம் நான்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மதவாதக் கட்டுரைகள் எழுதிய சாவர்க்கர் 20ஆம் நூற்றாண்டில் மேற்படி “சிப்பாய்க் கலகத்தை”இந்திய விடுதலைப் போர் என்று எழுதினாராம்! அந்த வரலாற்று அறிவின் வெளிச் சத்தில் இந்தியாவின் புதிய வரலாற்றை - இந்துத்துவா பரப்புரைக்கு ஏற்ப எழுத வேண்டும் என்கிறார் அமித்சா! இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று சிப்பாய்ப் புரட்சியை - முதல் முதலாகக் கண்டு பிடித்தவரே சாவர்க்கர் தாம் என்பது போல் அமித்சா அளக்கிறார்.
ஆங்கிலேயர் ஆக்கியவை
-----------------------------------------
இந்தியா, இந்து மதம் என்பவையெல்லாம் வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய பெயர்கள்! இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்ற பெயரிலோ, பாரதம் என்ற பெயரிலோ ஒரு நாடு இருந்ததே இல்லை. நூற்ற மைப்பது ஆண்டுகளுக்கு முன் இந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமும் இருந்ததில்லை.

இந்தியா என்ற பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு - ஒரு நாடு - பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவால் பிறந்தது. பெற்றவர்கள்தாம் தங்கள் பிள்ளைக்கு இந்தியா என்று பெயர்ச் சூட்டினார்கள். இந்த நிலப்பரப்பில் தனித்தனியே ஆட்சி நடத்திய பல்வேறு இனங்களைச் சேர்ந்த அரசர்களையும் படைத் தலைவர்களையும் வீரர்களையும் சுட்டுக் கொன்றும் தூக்கிலிட்டுக் கொன்றும் அவர்களின் புதைகுழிகளின் மேல் இந்தியா என்ற பெயரில் புதிய ஆட்சியை நிறுவினர். சிந்து ஆற்றை அடையாளமாக வைத்து மேற்கத்திய வணிகர்கள் உருவாக்கிய இந்தியா என்ற பெயரை அந்த நாட்டிற்குச் சூட்டினர்.
இந்திய மொழி எதிலும் அதற்கு முன் இந்தியா என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. புராணக் கதை ஒன்று, சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்த பரதன் என்பவன் அரசனாகி, வடநாட்டில் ஒரு பகுதியை ஆண்டான் என்று கூறுகிறது. அந்தப் “பரதன்”ஆட்சிக்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஓர் ஆற்றில், ஒரு துறையில் குளித்த தொடர்பு கூட (ஸ்நானப் பிராப்தி கூட) கிடையாது. தமிழர்களைப் போன்றே பல்வேறு இனத்தவர்களுக்கும் அந்தப் பரதனுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆணாகிய அந்தப் பரதனைத்தான் பெண்ணாக மாற்றி அனைத்திந்திய வலதுசாரிகளும், இடதுசாரிகளும் “பாரத மாதா”பசனை பாடுகின்றனர்! இதில் காவியும் சிவப்பும் அண்ணன் தம்பிகள்! அக்காள் தங்கைகள்!
இந்து மதம்
------------------
இந்து மதத்தைத் தோற்றுவித்த ஒரு குரு யாரும் இல்லை. இந்து மதத்திற்கென்று தலைமை பீடம் எங்கும் இல்லை. பல்வேறு சமயப் பிரிவுகளின தொகுப்பின் பெயர் இந்து மதம். கடவுள் உண்டு என்பவரும், இல்லை என்பவரும் சம உரிமையோடு இந்து மதத்தில் இருக்கலாம். கடவுள் மறுப்புக் கோட்பாடான உலகாய்தம் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றுதான்!

ஆரிய பிராமணர்கள் உருவாக்கிய வர்ணாசிரமம் - சாதிப் பிரிவுகள் - சாதி ஆதிக்கம் போன்றவை இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகள் என்று கூறும் இந்து மத மூல நூல் எதுவும் தமிழில் இல்லை. பகவத் கீதை என்பது கிறித்துவர்களுக்கு பைபிள் போல - இசுலாமியர்களுக்குக் குரான் போல இந்துக்களின் தவிர்க்க முடியாத தலைமை நூல் அன்று. தமிழ்ச் சைவர்கள் பகவத் கீதையை ஏற்க மாட்டார்கள். தமிழ் வைணவர்களும் பகவத் கீதையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. தமிழ் வைணவர் களுக்கு ஆழ்வார்கள் பாசுரங்கள்தாம் இன்றியமை யாதவை! தமிழ் வைணவர்களின் கடவுள் பெருமாள் - திருமால்!
பகவத் கீதையை வியாசர் எழுதவில்லை; கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆரிய பிராமண ஆதிக்க வாதிகளால் எழுதப்பட்டு அது மகாபாரதத்தில் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது என்று இராகுல சாங்கிருத்தியாயன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிறித்துவம், இசுலாம் என்பவை மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று. அதேபோல், இந்து என்பது மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று; தேசத்தின் பெயர் அன்று!
ஆரிய பிராமண ஆதிக்கவாதிகள் மெய்யான கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்லர்! அவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் தங்களின் பொருள் சுரண்டலுக்கும் கடவுளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்! கடவுளைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் ஆதிக்க வெறியர்கள்! நுகர்வு வெறியர்கள்! எந்த மோசடிக்கும் அஞ்சாதவர்கள்!
மதம் என்பது மொழி கடந்து, இனம் கடந்து, நாடு கடந்து பரவும் ஒரு கருத்தியல் தத்துவம்! அப்படித்தான் பௌத்தம், கிறித்துவம், இசுலாம் போன்ற மதங்கள் பல நாடுகளில் பரவியுள்ளன. இந்துக் கடவுள்களை - வர்ணசாதி சிறைக்குள் அடைத்தவர்கள் ஆரிய பிராமண மேலாதிக்கவாதிகள்! இந்து மதம் மற்ற மொழி - இன - நாட்டு மக்களிடம் பரவாமல் முள்வேலி போட்டு தடுத்தவை ஆரிய பிராமணியத்தின் கர்ம - தர்ம - தண்ட கோட்பாடுகள்!
எதையெடுத்தாலும் உலகு, உலகம் என்று நீதி நெறிகள் சொன்ன தமிழர்களின் ஆசீவகம், சிவநெறி, திருமால் நெறி ஆகியவை வெளியில் பரவாமல் தடுத்தது - ஆரிய பிராமண வேதமத ஆக்கிரமிப்பு!
பிறப்பு அடிப்படையில் சாதிப் புனிதம் - சாதி உயர்வு - சாதித் தீண்டாமை - சாதி இழிவு ஆகியவற்றைக் கற்பித்து நிலைநாட்டிய ஆரிய - பிராமண வர்ணசாதிக் கோட்பாடுகளின் ஆன்மிக - அரசியல் பெயர்தான் சாவர்க்கரின் இந்துத்துவா! இந்துக்களின் புனிதக் கனவான்களாக - மண்ணுலகக் கடவுள்களாக (பூசுரர்களாக)ப் பிராமணர்களைக் கற்பித்து அவர்களின் எசமானத்து வத்தை நிரந்தரப்படுத்துவதுதான் சாவர்க்கரின் - ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. பரிவாரங்களின் இந்துத் துவா அரசியல்!
வீரசாவர்க்கரின் ‘வீரம்’
------------------------------------
இலண்டனில் படிக்கும்போது ஒரு வெள்ளை அதிகாரியைத் தாக்கிய வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட வி.டி. சாவர்க்கரை இந்தியாவுக்குக் கப்பலில் அழைத்து வரும்போது, வழியில் பிரஞ்சுத் துறைமுகத்தில் கப்பலில் இருந்து தப்பித்தார் சாவர்க்கர். பிரஞ்சு அதிகாரிகள் அவரைத் தளைப்படுத்தி ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்தமான் சிறையில் 1911-இல் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். அவர் 30.08.1911 அன்று சிறை அதிகாரிகளுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யும்படியும், விடுதலை செய்தால் வெள்ளைக்கார அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள் வேன், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி அளித்தார். வெள்ளை அரசு அவரின் கருணை மனுவை ஏற்க மறுத்தது.
அதன்பிறகு 14.11.1913இல் இரண்டாவது மன்னிப்புக் கடிதம் எழுதினார். “ஊதாரியாக ஊர் சுற்றிவிட்டுத் திரும்பிய மகனைப் போல் (Prodigal) என் பெற்றோராகிய அரசின் கதவைத் தட்டுகிறேன்”என்று அக்கடிதத்தில் கூறியிருந்தார். “என்னை விடுவித்தால், இந்திய மக்கள் பலரிடம் பிரித்தானிய ஆட்சி மீது நம்பிக்கை உருவாகும்”என்றும் எழுதியிருந்தார். இந்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்க மறுத்தது பிரித்தானிய அரசு.
மூன்றாவது மன்னிப்புக் கடிதத்தை 1917ஆம் ஆண்டு எழுதி அனுப்பினார் “வீர”சாவர்க்கர்! அக்கடிதத்தையும் ஏற்க மறுத்தது ஆங்கிலேய ஆட்சி. நான்காவது கருணை மனுவை 30.03.1920 அன்று பிரித்தானிய ஆட்சியாளர் களுக்கு அனுப்பினார் சாவர்க்கர். வழக்கம்போல் தனது கடந்தகால அரசியல் நடவடிக்கைகளுக்காக வருத்தம் தெரிவித்தும், அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறியிருந்தார்.
திலகர், காந்தி, பட்டேல் போன்ற தலைவர்கள் சாவர்க்கர் உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி வந்தனர்.
இந்நிலையில், நான்காவது மன்னிப்புக் கடிதத்தை ஏற்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சாவர்க்கரை விடுதலை செய்தனர். காந்தியை சுட்டுக் கொல்வதற்கு நாதுராம் கோட்சேயைத் தயார்ப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டில் 1949-இல் சிறைப்படுத்தப்பட்டார் சாவர்க்கர். ஐயமறக் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி - சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இப்போது சாவர்க்கரின் இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டோரில் பலர் கோட்சேயைத் தியாகி என்று கொண்டாடுகிறார்கள்! காந்தி நினைவு நாளில் காந்தி பொம்மையைச் செய்து துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
பா.ச.க. ஆட்சி சாவர்க்கருக்கு “பாரத ரத்தினா” விருது கொடுக்க முனைகிறது. அதை அடுத்து, “பாரத ரத்தினா”விருது கோட்சேவுக்குக் கிடைக்கலாம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2019 நவம்பர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.