சாராய உற்பத்தி ஆலையை மூடக்கோரிய பெண்கள் மீது போட்ட பொய் வழக்கைக் கைவிட வேண்டும்! - பெ. மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை!
சாராய உற்பத்தி ஆலையை மூடக்கோரிய
பெண்கள் மீது போட்ட
பொய் வழக்கைக் கைவிட வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை!
பெண்கள் மீது போட்ட
பொய் வழக்கைக் கைவிட வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் என்ற தனியார் சாராய உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தித் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயத்தில் உள்ள பெண்கள் 14.05.2019 அன்று அந்த ஆலை முன் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.
1. தமிழ்நாட்டில் முழு மது விலக்கைச் செயல்படுத்த வேண்டும்;
2. கால்ஸ் டிஸ்ட்டிலரீஸ் (KALS Distileries Pvt. Ltd.) என்ற சாராய உற்பத்தி ஆலை கல்லாக் கோட்டையில் நிறுவப்பட்ட பின் அது அன்றாடம் மிகமிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி, சாராய உற்பத்திக்குப் பயன்படுத்துவதால், கல்லாக்கோட்டையிலும் அதைச்சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் நிலத்தடி நீர் மிக மிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் ஆழ்குழாய் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வந்த உழவர்களுக்கு நிலத்தடி நீர் வற்றி, நிலங்களைத் தரிசாகப் போட்டுள்ளார்கள்.
3. நிலத்தடி நீர் வற்றியதால் – அவ்வூரில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசு வேளாண் பண்ணையை மூடி விட்டார்கள்.
இக்காரணங்களை முன்வைத்து கால்ஸ் சாராய ஆலையை மூட வலியுறுத்தி மகளிர் ஆயம் பெண்கள் 14.05.2019 அன்று காலை 10.30 மணி அளவில் கல்லாக்கோட்டை கடைத்தெருவிலிருந்து மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி அம்மாள் தலைமையில் ஊர்வலமாகச் சாலை ஓரத்தில் சென்றார்கள். மேற்படி சாராய ஆலை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நிலையில், கந்தர்வகோட்டைக் காவல்துறையினர் வழிமறித்து அனைத்துப் பெண்களையும் கைது செய்துள்ளதாக அறிவித்து, காவல் ஊர்திகளில் ஏற்றிச் சென்று கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். அன்று மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தார்கள்.
முன்தடுப்புச் சட்டப் பிரிவு 151 Cr.P.C இன் கீழ், அனைவரையும் கைது செய்து – மாலையில் விடுவித்துவிட்டார்கள். ஆனால் இப்போது ஓர் ஆண்டு ஐந்து மாதங்களுக்குப் பின் அப்பெண்கள் மீது கந்தர்வகோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 341 ஆகியவற்றின் கீழ் வழக்கு இருப்பதாகவும், அனைவரும் 14.10.2020 அன்று நீதி மன்றத்தில் நேர்நிற்க வேண்டும் என்றும் நீதிமன்ற அழைப்பாணை (Summons) 13 பெண்களுக்கும் இரு ஆண்களுக்கும் வந்துள்ளது.
முன்தடுப்பு நடவடிக்கையாகத் தடுத்து மண்டபத்தில் வைத்த பின், அப்பெண்கள் மேற்படி ஆலை வாயிலில் சட்ட விரோதமாகக் கூடினார்கள் என்றும், சட்டவிரோதமாக மறியலில் ஈடுபட்டார்கள் என்றும் காவல்துறை கூறுவது உண்மைக்கு மாறானது. நான் சொல்வது சரியானதுதானா என்று அறிய தாங்கள் தனி விசாரணை செய்து உண்மையை அறியலாம்.
தனியார் ஆலை நிர்வாகத்திற்குச் சாதகமாக நடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கந்தர்வகோட்டை காவல்துறையினர், உயரிய காந்திய இலட்சியத்துடன் மதுவிலக்கு கோரிய பெண்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் பொய்வழக்குப் பதிந்துள்ளார்கள்.
இந்தக் கொடிய கொரோனா காலத்தில் பெண்களை நீதிமன்றத்தில் நேர்நிற்க அழைப்பாணை அனுப்புவது அறமா என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு மேற்படி வழக்கைக் கைவிடச் செய்வதுடன், கொரோனா காலத்தில் தஞ்சை மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெண்களை அலைய விடாமல் காக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment