ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!



ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! 

எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


இன்று (26.04.2021) நடந்த எட்டுக் கட்சிக் கூட்டத்தில் கோவிட் தொற்று ஆக்சிஜன் தேவைக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி அலகை நான்கு மாதங்களுக்கு இயங்க அனுமதிப்பது என்றும், நோய்த் தொற்று தேவைக்கேற்ப அதன் காலத்தை நீட்டிப்பது என்றும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிக்கிறது. 

இந்திய அரசின் பி.எச்.இ.எல். தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு மாற்று நிறுவனங்களின் வழியாக தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தீய உள்நோக்கம் கொண்டதாகும். 

ஸ்டெர்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் தயாரிப்பு அலகுதான் தேவை என்றால், உடனடியாக அவசர சட்டம் நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அந்த ஆலையைக் கையகப்படுத்தி, இதை செய்திருக்க முடியும். மாறாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குழுவினர் கண்காணிப்பில் வேதாந்தா நிறுவனமே மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கலாம் என அனுமதிப்பது நாளைக்கு நிரந்தரமாக அந்த ஆலையைத் திறந்துவைக்க வாய்ப்பு ஏற்படுத்தும். 

ஒருவேளை, ஸ்டெர்லைட்டிலுள்ள பொறியாளர்கள்தான் இதை இயக்கத் தேவை என்றால், தமிழ்நாடு அரசே தனது பொறுப்பில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்போது, அந்த நாட்களுக்கு அந்த குறிப்பிட்ட வல்லுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இந்த வழிகள் எதையும் கருதிப் பார்க்காமல், வேதாந்தாவின் நிர்வாகத்திலேயே ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் அலகை இயக்குவது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான முன்னோட்டம் என ஐயப்பட இடமிருக்கிறது! 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய எட்டுக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று கூறிய கருத்தை கூட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தி.மு.க. பேராளர் கனிமொழி, அனில் அகர்வாலின் வேதாந்தாவின் பொறுப்பில் ஸ்டெர்லைட் ஆலையை அப்படியே வைத்துக் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் தரலாம் என்று கூறிய ஆலோசனை அரசாலும் ஏற்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னால், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க வைக்கும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் பேராளர்களையும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறச் செய்யலாம் என்பது கண்துடைப்பு வேலை! மேலும், இந்தக் குழுவில் இடம்பெறுவது என்ற முடிவை ஏற்காத மக்கள் இயக்கங்களும், பிறரும் பிளவுபடும் ஆபத்திருக்கிறது. வேதாந்தாவின் பொறுப்பில் ஆலை இருக்கும்போது  பொதுமக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. 

மொத்தத்தில், மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கு மாற்று வழிகளைக் கருதிப் பார்க்காமல் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் அலகை இயங்க வைப்பது என்ற முடிவு தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் போலவே, இதே வேதாந்தா குழுவினருக்குச் சொந்தமான ஆலைகள் இராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் (Hindustan Zinc Limited - HZL), சத்தீசுகட் மற்றும் ஒடிசா (Bharat Aluminium Company - BALCO), அரியானா (Cairn Oil & Gas), ஜார்கண்ட் (ESL Steel Limited), கோவா மற்றும் கர்நாடகா (Sesa Goa Iron Ore) ஆகியவை இயங்குகின்றன. இந்த உருக்கு ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கான வாய்ப்பு இருக்கிறபோது தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் கவனம் செலுத்துவது ஆக்சிஜன் தயாரிக்கிற நோக்கத்தோடா? தமிழர்களை பலிகொடுத்து அனில் அகர்வாலுக்கு உதவி செய்யும் உள்நோக்கத்தோடா என்ற ஐயம் வலுவாக எழுகிறது! 

எனவே, தமிழ்நாடு அரசு இம்முடிவைக் கைவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது என்றும், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு மாற்று வழிகளைக் காண வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.