தமிழ்ப் பேரறிஞர் இளங்குமரனார் காலமான பின்னும் “வாழ்ந்த காலமானார்”! பெ. மணியரசன் இரங்கல்!
தமிழ்ப் பேரறிஞர் இளங்குமரனார்
காலமான பின்னும் “வாழ்ந்த காலமானார்”!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
தமிழின் தனித்தன்மை மீட்பு, தமிழின உரிமை மீட்பு முதலியவற்றில் மறைமலை அடிகளார் வழியில் செயல்பட்ட தமிழ்ப்பேரறிஞர் ஐயா இளங்குமரனார் 25.07.2021 முன்னிரவு நேரத்தில் மதுரைத் திருநகரில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை, வியக்கத்தக்க சொல்லாய்வு, தணியாத தமிழ்த்தேசிய உணர்வு, நேர்மை, எளிமை இவற்றின் சின்னமாகவும் மொழிஞாயிறு பாவாணரின் தொடர்ச்சியாகவும் வாழ்ந்தவர் இளங்குமரனார்.
ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர் ஐயா இளங்குமரனார். தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவாணரின் மொத்த படைப்புகளுக்கான “தேவநேயம்” என்ற பத்துத் தொகுதிகளின் பதிப்பாசிரியராக அரும்பணி ஆற்றினார். செந்தமிழ்ச் சொற் பொருட்களஞ்சியம் 14 தொகுதிகள் ஐயாவின் படைப்புகளாகும்.
ஐயா திருச்சி அருகே அல்லூரில் நிறுவிய திருவள்ளுவர் தவச்சாலையும், அதில் அமைக்கப்பட்டிருந்த பாவாணர் நூலகமும் புதுத்தடம் புதித்தவை.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான தமிழர் கண்ணோட்டம் இதழை ஐயா அவர்களுக்குத் தொடர்ந்து அனுப்பி வந்தோம். ஐயா அவர்கள் ஒவ்வொரு மாத இதழையும் விரும்பிப் படிப்பார். அவ்வப்போது பாராட்டி மடல் எழுதுவார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இலட்சியத்தை, செயல் நெறிகளை, போராட்ட முறைகளைப் பல முறை பாராட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் இளங்குமனார் ஐயா அவர்களை ஆற்றல் மிகு ஆசானாக ஏற்று அவரிடம் அறிவுரைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தது.
மிகை எண்ணிக்கையில் வெளியார் தமிழ்நாட்டில் குவிவதைத் தடுக்கப் பேரியக்கம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவார். ஒரு முறை செங்கிப்பட்டியில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஐயா “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (எல்லா ஊரும் நம் ஊரே, எல்லோரும் நம் உறவினரே) என்ற கணியன் பூங்குன்றனார் பாடலைக் கொஞ்ச காலத்திற்கு நினைவு கூராமல் நிறுத்தி வைப்போம் என்று பேசினார்.
ஐயா காலமான செய்தி பெருந்துயரம் தருகிறது. அதேவேளை தாம் வாழ்ந்த காலத்தின் அடையாளமாக அக்காலமாக ஆகியுள்ளார் என்று ஆறுதல் பெறுவோம். பாவேந்தர் கூறியது போல், “தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை” என்று ஐயா இளங்குமரனார் குடும்பத்தினரும், அன்பர்களும் ஆறுதல் பெறுவோம்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment