ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சமூகச் சமநிலைப் புரட்சியாளர் சங்கரய்யா!


சமூகச் சமநிலைப் புரட்சியாளர் சங்கரய்யா அவர்களின் புகழ் ஓங்குக!

================================

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

================================


மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று (15.11.2023) சென்னைத் தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி – அவர் 102 அகவை வரை வாழ்ந்தவர் என்ற போதிலும் துயரமளிக்கிறது. ஒரு சாதனையாளர், ஒரு புரட்சிகரப் போராளி, சொல்லும் செயலும் இணைந்து செல்ல வாழ்ந்தவர், மறைந்து விட்டாரே என்ற மனப்பதைப்பு இயல்பாகவே எழுகிறது. 


நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களும், சி.பி.எம். கட்சியில் முழுநேரச் செயல்பாட்டாளர்களாக இயங்கிய காலங்களில் தோழர் என்.எஸ். (என். சங்கரய்யா) அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள். நேரந் தவறாமை, தூய்மை, ஒழுங்கு, இலட்சியப் பிடிப்பு முதலிய பண்புகளில் தன்னளவில் மிகவும் கறாராக இருப்பார். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார். 


நான் சங்கரய்யா அவர்களை முதல் முதலாகப் பார்த்தது, திருவாரூர் அருகே கீழ்வேளூரில் 1971 வாக்கில் நடந்த சி.பி.எம். கட்சியின் மூன்று நாள் அரசியல் வகுப்பில் தான். அப்போது, மார்க்சிய இயங்கியல் குறித்த வகுப்பை மிகச் சிறப்பாக நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட குறிப்புகளை வைத்துத்தான் பிறகு நான் இயங்கியல் வகுப்புகளை நடத்தினேன். அவ்வளவு தெளிவாக விளக்கமாக நடத்தினார். 


நான் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு செயலாளராகச் செயல்பட்ட காலம் (1973) தொடங்கி என்.எஸ். அவர்களுடன் கட்சிப் பணி அளவில் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் முதல் முதலாக நிறுவப்பட்ட அமைப்புக் கூட்டத்தை மதுரைக் கட்சி அலுவலகத்தில் நடத்தியவர் தோழர் என்.எஸ். அவர்கள்தான். அதில் நான் கலந்து கொண்டதுடன் அப்போது அமைக்கப்பட்ட அதன் தலைமைச் செயற்குழுவிலும் நான் அமர்த்தப்பட்டேன். 


நூறைத் தாண்டிய பிறகும் சங்கரய்யாவின் சங்கநாதக் குரலில் மாற்றமின்றிப் பேசினார். ஒரே நீரோட்டம் போல் ஓங்கிய குரலில் மேடையில் முழங்குவார் சங்கரய்யா! 1942இல் வெள்ளையனே வெளியேறு புரட்சியில், கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு, களப் போராட்டத்திற்கு வந்த சங்கரய்யா, கடைசி வரைப் போராட்டக் களத்தில் வாழ்ந்து நிறைவுற்றார். 


கடைசிக் காலத்தில் சங்கரய்யாவின் நெஞ்சைக் காயப்படுத்துவதுபோல் ஒரு கொடுஞ் செயலைச் செய்து விட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி! சங்கரய்யா அரசு விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் ஆசைப்படுபவர் அல்லர். அவரின் மனப்பண்பு அப்படிப்பட்டது. மதுரைப் பல்கலைக்கழகக் கல்விக்குழுவும், ஆட்சிக்குழுவும் சங்கரய்யாவுக்கு வழங்க விரும்பிய மதிப்புறு முனைவர் (Honourary Doctorate) பட்டத்தைத் தரக் கூடாது என்று தடுத்துவிட்டார் ஆர்,என். இரவி! 


ஒரு பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பட்டம் வழங்கக் கூடத் தகுதியற்றதாக மாநில அரசு வைக்கப்பட்டிருக்கிறதே, புதுதில்லி ஏகபோக அதிகார ஆதிக்கக் கிடங்காக இருக்கிறதே என்றுதான் சங்கரய்யா வருத்தப்பட்டிருப்பார். 


முதுபெரும் தலைவர், இந்திய விடுதலைப் போராட்ட ஈகி, சிறந்த சமூகச் சமநிலைச் சிந்தனையாளர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம்! 


===============================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

[1:58 PM, 11/15/2023] Thiyakarajan அ தியாகு: மறைந்த திருச்சி தமிழ்த் தேசியப் பேரியக்க  திருவரம்பூர் கிளை உறுப்பினர்  தோழர் நா. கோவிந்தன்  அவர்களின் உடலுக்கு தலைவர் பெ. மணியரசன், பொருளாளர் அ. ஆனந்தன், தோழர்கள் வே க இலக்குவன், மூ த கவித்துவன், வே பூ ராமராஜ் உள்ளிட்ட தோழர்கள் இறுதி வணக்கம் செலுத்தினர்..

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.