ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்



காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக,
தெலுங்கு திராவிட பிராமணர்
கணேச சர்மா திராவிட் நியமனம்!

பல் இளிக்கிறது பகுத்தறிவுத் திராவிடம்!

ஐயா பெ. மணியரசன்


ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
====================================
“தமிழன் என்றால்” எனக்கும் தாய்மொழி தமிழ்தான் என்று கூறிக்கொண்டு பிராமணர்களும் தங்களைத் தமிழர்கள் என்று நம்மோடு சேர்ந்து நம்மைக் குழப்பிவிடுவார்கள். ஆனால், “திராவிடர்” என்றால் பிராமணர்கள் அந்த இனப் பெயரை ஏற்க மாட்டார்கள். எனவே, தன்மானமுள்ளவர்கள் தங்களைத் திராவிடர்கள்” என்று கூறிக் கொள்ள வேண்டும், தமிழர் என்று கூறிக் கொள்ளக் கூடாது!”
மேற்கண்ட இனக் கண்டுபிடிப்பைச் செய்தவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள். தமிழர்களாகிய நாம் என்றைக்குமே நம்மைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை. பிராமணர்கள்தாம் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வர்.
பல சான்றுகளுடன் ஈ.வெ.ரா. வின் திராவிடத் திணிப்பை மறுத்தோம். உடனே மாநிட இயல் ஆராய்ச்சி - இன - மொழியியல் ஆராய்ச்சிகளில் உலக வல்லுநர்களில் முக்கியமானவர்களாகத் “திகழும்” ஈ.வெ.ரா. வின் தமிழ்நாட்டுத் திராவிடர்கள் நம்மைப் பார்ப்பன முகவர்கள் என்று பரிகசித்தார்கள்.
நாங்கள் `மட்டைப் பந்து வீரர் - ராகுல் திராவிட் பிராமணர்தான்; மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரிப் பேராசிரியர் மணி திராவிட் பிராமணர்தாம்; 20-ஆம் நூற்றாண்டுக்கு முன் எந்தத் தமிழன் பெயரிலும் “திராவிட” ஒட்டுண்ணி ஒட்டி இருக்காது` என்று எல்வளவோ தருக்கம் செய்தோம்! ஈ.வெ.ரா. - கருணாநிதி பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களோ நம்மைத்தான் கேலி செய்தார்கள். ஒரு காலத்தில், திராவிட இனவாதத்தை மறுத்த பேராசிரியர் த. செயராமன் அவர்கள் எமது தமிழர் கண்ணோட்டம் இதழில் பிரித்தானியக் கலைக் களஞ்சியத்திலிருந்து எடுத்து, “தென்னிந்தியப் பிராமணர்கள்தாம் “திராவிடர்கள்”; இப்போது மற்றவர்களும் சூட்டிக் கொள்ளும் அவலம் வந்துள்ளது” என்று கூறிய பகுதியையும் எடுத்துப் போட்டு விவாதம் செய்தோம்!
ஈ.வெ.ரா.வாதிகள் புகழும் பேரா. தொ. பரமசிவன் அவர்கள் ஒரு கட்டுரையில் “தென்னாடு வந்து குடியேறிய பிராமணர்களுக்குப் “பஞ்ச திராவிடர்கள்” என்று பெயர் எனக் கூறி இருந்ததை எடுத்துப் போட்டோம். ஆனால், ஈ.வெ.ரா - கருணாநிதி உயராய்வு மைய இரசிகர்கள் எதையும் சட்டை செய்யவில்லை! மயிலாப்பூர் பிராமணர் எஸ்.வி. சேகர், தி.மு.க. மேடையிலேயே ஏறி, நானும் பிராமணர்தான், நானும் திராவிடன்தான் என்று வெளிப்படையாகக் கூறினார். அப்போதும் இவர்களுக்கு உரைக்கவில்லை!
இன்று (26.4.2025) “இந்து தமிழ்திசை” நாளேடு போட்டுள்ள செய்தியைப் பாருங்கள்!
“காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீகணேச சர்மா திராவிட் நியமனம்!”
உள்ளே படித்தால்தான் கணேச சர்மா திராவிடர், ஆந்திர - தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று தெரிகிறது.
ஈ.வெ.ரா. - கருணாநிதி சூட்சுமம் புரிகிறதா, தமிழர்களே?
தமிழ்நாட்டில் வாழும் பலகோடி தமிழர்களாகிய மண்ணின் மக்கள் உளவியல் அளவில் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாக உணர வேண்டும். தமிழ்நாட்டில் கர்நாடகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் குடியேறிய கன்னட தெலுங்கர்களின் வாரிசுகள் தமிழ் மண்ணின் முதல்தரக் குடிமக்களாக உளவியல் ஊக்கம் பெற வேண்டும். இதுதான் ஈ.வெ.ரா. - கருணாநிதியின் சூழ்ச்சி!
இதுதான் இன்றும் திராவிடத்தை வலியுறுத்தும் தலைவர்களின் இனச் சூழ்ச்சி! உலகின் முதல் செம்மொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே, உங்கள் தாய் மண்ணிலேயே உங்கள் இனத்தை இழிவுபடுத்தி, திராவிடத்தை உங்கள் தலையில் கட்டும் சூழ்ச்சியாளர்களை அடையாளம் காணுங்கள்! அசல் தமிழ் இனத்தில் பிறந்து ஆந்திர-கர்நாடக- மலையாளத் திராவிடத்திற்குக் காவல்காரர்களாகப் பணிபுரியும் கருங்காலிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!
இதையும் படியுங்கள்!
வரலாற்று வழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் தெலுங்கு, கன்னடம், மராத்தி, சௌராட்டிரம், உருது முதலியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்களை நமது தமிழ்த்தேசியம் அயலாராகக் கருதவில்லை. மண்ணின் மக்களாக ஏற்கிறோம்; மதிக்கிறோம்! மரபுவழியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு!
அதே வேளை, தமிழ்நாட்டின் ஆட்சி மொழி - கல்வி மொழி தமிழ் மட்டுமே! இரண்டாவது மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலம் நீடிக்கலாம். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைக் கற்க விரும்புவோர்கள் கற்க வசதிசெய்து தரப்படும். ஆனால், அவை தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக - கல்வி மொழியாக ஆக முடியாது. ஆந்திர, கர்நாடக, கேரள மாநில மாநிலங்களில் காலம் காலமாக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அங்கெல்லாம் தாய்மொழி உரிமை எதுவும் இல்லை!
பேரன்புடையீர்!
காஞ்சி சங்கரமடத்தின் வாரிசாகத் தெலுங்கு பிராமணர் அமர்த்தப்படப் போகும் அறிவிப்பில், அவர் பெயருடன் திராவிடம் ஒட்டி இருப்பதை நேற்றே தம் முகநூலில் வெளிப்படுத்தினார் நம் மதுரைத் தோழர் கதிர்நிலவன்.
ஆரியரின் அடுத்த வீட்டுப் பங்காளிகள் “திராவிடர்கள்” என நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அது உண்மைதான் என்பதற்கு காஞ்சி சங்கர மடமும் ஒரு சான்று!
நாள் : 26.04.2025
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.